கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாது சர்வதேசத்திடம் ஆதரவு கெஞ்சுகிறது அரசு
.jpg)
அதனால்தான் அமெரிக்க போர்குற்ற தூதுவர் ஸ்டீவன் ரெப், உள்ளூரில் போர்குற்ற விசாரணைகளை உறுதியளித்தபடி செய்துள்ளீர்களா என விசாரிக்க வந்துள்ள நேரத்தில் நாட்டின் தலைவர், மத்திய கிழக்கு நாடுகளின் ஆதரவை தேடி நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
ஸ்டீவன் ரெப் இந்த நாட்டுக்குள்ளே பாராசூட்டில் வந்து குதிக்கவில்லை. இந்த நாட்டு அரசு, அமெரிக்காவுடனும், உலகத்துடனும் ஏற்படுத்திகொண்டுள்ள உடன்பாட்டின் அடிப்படையிலேயே அவர் வந்துள்ளார் என்ற உண்மையை எவரும் திரை போட்டு மூடிவிட முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதிகாரத்தை பிரித்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஊடக மாநாடு கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
உலகத்துக்கு தந்த எந்த ஒரு உறுதிமொழிகளையும் நிறைவேற்றாத இந்த அரசு, எதிர்வரும் மார்ச் மாதம் வரவிருக்கும் உத்தேச தீர்மானத்தை ஆதரிக்க வேண்டாம் என்ற கோரிக்கையை எடுத்துகொண்டு மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளை கெஞ்சி வருகிறது.
இங்கே பெளத்த தீவிரவாதிகளை வளர்த்துவிட்டு பள்ளிகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் உடைக்கும் இந்த அரசு இஸ்லாமிய நாடுகளின் ஆதவையும், கத்தோலிக்க நாடுகளின் ஆதரவையும் கோருவது மிகப்பெரும் விசித்திரம்.
ஜோர்தானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி அந்த நாட்டு அரசருடன் அரசுமட்ட பேச்சவார்த்தை நடத்துகிறார். அப்போது அவர் பக்கத்தில் அமைச்சர் ஜிஎல். பீரிசும், சஜின் வாஸ் எம்பியும், செயலாளர் லலித் வீரதுங்கவும் அமர்ந்துள்ளார்கள்.
இவர்களுடன் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், அக்கட்சிக்கு பதில் தலைவராக கடமையாற்றியுள்ள ஜோன் அமரதுங்க எம்பியும் அமர்ந்துள்ளார். ஐதேக எம்பி எப்படி அரசாங்க தூதுக்குழுவுடன் சென்றார் என்பது பற்றி ஐதேக நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
ஜோன் அமரதுங்க திரும்பி வந்து நாடாளுமன்றத்தில் சபாநாயகர் பதவியை பெறபோகின்றார் என இங்கே நண்பர்கள் விக்கிரமபாகுவும், அசாத் சாலியும் சொல்கிறார்கள். இன்றைய சபாநாயகர் சமல் ராஜபக்ச பிரதமர் ஆகப்போகின்றார் என்றும், அதற்காகத்தான் அரசாங்கமே பின்னணியில் இருந்துகொண்டு, இன்றைய பிரதமர் டீ.எம். ஜயரட்னவை பெளத்த தீவிரவாத அமைப்புகளை ஏவிவிட்டு விரட்டோ விரட்டு என்று விரட்டுகிறது எனவும் நாடு முழுக்க வதந்தி பரவி வருகிறது.
கடந்த 17 ம் திகதி ஜனாதிபதியிடம் வட மாகாணசபை நிர்வாகத்தில், முதலமைச்சர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எடுத்துகூறி, அதை தீர்த்து வைக்கும்படி கோரியிருந்தேன். கடந்த வாரம் ஜனாதிபதி முதல்வரை சந்தித்துள்ளார். நண்பர் சுமந்திரனும் அச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அங்கு சில வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. அவை நிறைவேற்றப்பட வேண்டும். ஜனாதிபதியை சந்தித்து காப்பி குடித்துவிட்டு, ஜனாதிபதி என்னிடம் பேசினார், சிரித்தார், என பரவசப்படும் ஆட்கள் அல்ல நாங்கள். அப்படியானவர்கள் அல்ல, விக்கினேஸ்வரனும், சுமந்திரனும் என்பதும் எமக்கு தெரியும். எவருடனும் பேசுவோம். கலந்துரையாடுவோம். ஆனால், எங்கள் மக்களின் உரிமைகள் தொடர்பில் நாங்கள் மிகவும் உறுதியாக இருக்கிறோம். தமிழனை ஒரு கோப்பை காப்பி கொடுத்து மயக்கிவிடும் காலம் எல்லாம் இப்போது மலையேறிவிட்டது.
மாகாணசபையை காப்பாற்றி நடத்துவது அரசுக்கு நல்லது. ஏனென்றால் வடக்கு தேர்தலை நடத்தியது ஒன்றுதான் இவர்கள் உலகுக்கு அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றியது ஆகும். அதுவும் உடைந்து நொறுங்கினால் கோவிந்தா என தலையில் துண்டு போட்டுக்கொண்டுதான் இவர்கள் ஜெனீவா போக வேண்டி வரும். கூடவே ஜோன் அமரதுங்கவையும் கூட்டிபோகலாம். நாங்களும் கூட வர தயார். ஆனால், அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும்.
கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாது சர்வதேசத்திடம் ஆதரவு கெஞ்சுகிறது அரசு
Reviewed by Author
on
January 08, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment