இளவயது கர்ப்பம் வடமாகாண சமூகத்தை அதிர்வுக்குள்ளாக்கும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது
இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவடைந்த பின்னர், வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வியலில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த மாற்றங்கள் சில சந்தர்ப்பங்களில் வடக்கு கிழக்கு மக்களின் கலாசாரத்தை சீர்குலைப்பதாகவும் அமைந்துவிடுகின்றன. இந்நிலையில் ‘இளவயது கர்ப்பம்’ வடமாகாண சமூகத்தை அதிர்வுக்குள்ளாக்கும் சமூகப் பிரச்சினையாக தற்போது வலுபெற்றுவருகின்றது. இந்தப் பிரச்சினை யாழ் மாவட்டத்திற்கு ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பில் செய்திச் சேவை ஒன்று ஆராய்ந்தது.
மிக அண்மைக் காலமாக வட மாகாணத்தில் பெண் பிள்ளைகள் இள வயதில் கர்ப்பமடைவது அதிகரித்து வருகின்றது. இளம் பராயத்தில் இருக்கும் பெண் பிள்ளை ஒருவர் தனது 19 வயது நிறைவடைவதற்கு முன்னர் கர்ப்பம் தரித்தல் ‘இளவயதுக் கர்ப்பம்’ என குறிப்பிடப்படுகிறது. இவ்வாறு இளவயதில் கர்ப்பம் அடைவதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
பொதுவாக வட மாகாணத்தில் 18 வயதிற்கு குறைந்த ஆண் – பெண் பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் திருமணம் செய்து வைக்கும் நடைமுறை வழக்கத்தில் இல்லை. ஆனால் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் சில காரணங்களுக்காக பல பெற்றோர்கள் தங்கள் ஆண் – பெண் பிள்ளைகளுக்கு 18 வயது பூர்த்தியடைவதற்கு முன்னர் திருமணம் செய்து வைத்த சம்பவங்களும் உண்டு.
இதேவேளை 18 வயதிற்கு குறைந்தவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வதும் உண்டு. அவ்வாறானவர்கள் சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கப்படுவதில்லை. ஆனால் திருமணத்திற்கு புறம்பான தொடர்புகளாலும், தமது காதல் திருமணத்தில் நிறைவு பெறும் என்ற எதிர்பார்ப்புகளாலும் பல பெண் பிள்ளைகள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
இவ்வாறானவர்கள் தமது கல்வியை இடைநடுவில் கைவிடுவதுடன், இளவயதில் கர்ப்பமடைகிறார்கள். கல்வியைத் தொடர முடியாத அவர்கள் இளவயது கர்ப்பம் தரித்தல் காரணமாகவும், சட்ட ரீதியான திருமண அங்கீகாரமின்றியும் உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் பல பாதிப்புக்களை எதிர்நோக்க நேரிடுகின்றது. அத்துடன் குறித்த பெண் பிள்ளைகளின் குடும்பத்தினர் பல்வேறு பிரச்சனைகளை சமூகத்தில் எதிர்கொள்கின்றமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதே.
யாழ். மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 44 வைத்தியசாலைகள் உள்ளன. குறித்த வைத்தியசாலைகளில் 2009ஆம் ஆண்டு 18வயதிற்கும் குறைந்த 373 பெண்களும், 2010ஆம் ஆண்டு 464 பெண்களும், 2011ஆம் ஆம் ஆண்டு 440 பெண் பிள்ளைகளும், 2012ஆம் ஆண்டு 419 பெண் பிள்ளைகளும், கடந்த ஆண்டு 318 பெண் பிள்ளைகளும் இளம் வயதில் கர்ப்பம் தரித்து அனுமதிக்கப்பட்டதாக யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு தெரிவிக்கின்றது.
யாழ். மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் 2013ஆம் ஆண்டு 318 பெண்கள் இளவயதில் கர்ப்பம் தரித்திருந்ததாக தரவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. யாழ். மாவட்டத்தில் 12 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள 44 வைத்தியசாலைகள் தவிர, யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலையும் அங்குள்ளது.
கடந்த ஆண்டு ஆண்டு (2013) ஜனவரி தொடக்கம் டிசம்பர் வரையான காலப் பகுதியில் யாழ். போதனா வைத்தியசாலையில் 18 வயதிற்கு உட்பட்ட 190 பெண் பிள்ளைகள் கர்ப்பம் தரித்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு தெரிவித்தார்.
மேலும் இந்த ஆண்டு (2014) ஜனவரி மாதத்தில் மாத்திரம் யாழ். போதனா வைத்தியசாலையின் 18 ஆம் வாட்டில் 02 பெண் பிள்ளைகளும், 20 ஆம் வாட்டில் 11 பெண் பிள்ளைகளும், 21 ஆம் வாட்டில் 02 பெண் பிள்ளைகளும், 22 ஆம் வாட்டில் 01 பெண் பிள்ளையும் இளவயது கர்ப்பத்துடன் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆயினும் இந்தப் பிரச்சினை வட மாகாணத்தில் உள்ள ஏனைய மாவட்டங்களான முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களிலும் ஆதிக்கம் செலுத்தியுள்ளதென்பதில் எவ்வித ஐயமுமில்லை.
மேலும் வட மாகாணத்தில் பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் காணப்படுகிறன. இந்த நிலையில் அங்கு இளவயது கர்ப்பமும் அதிகரித்து காணப்படுகின்றமை பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.
தகவல் தொழிநுட்ப வளர்ச்சி, யுத்தத்திற்கு பின்னரான சூழ்நிலை, பாடசாலைப் பருவத்தில் தோற்றும் இனக்கவர்ச்சியை காதல் என தவறாக புரிந்து கொள்ளல், போதைப் பொருள் முதலியவற்றின் ஊடுருவல் போன்ற காரணிகளால் இளவயது கர்ப்பம் அதிகரிக்கிறது.
யாழ். மாவட்டத்தில் யௌவன பருவத்திற்கான சிகிச்சை நிலையங்கள் ஊடாக பெண் பிள்ளைகளுக்கு திருமணத்தை பிற்போடுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. சிலவேளைகளில் அவர்கள் இளவயதில் திருமணம் செய்தாலும் குழந்தைப் பேற்றினை பிற்போடுவதற்கான ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றன.
இத்தகைய ஆலோசனைகள் ஆரோக்கியமானதா என்ற கேள்வியும் சமூகத்தில் நிலவுகின்றது. வடமாகாணத்தில் பெரும் சமூகப் பிரச்சினையாக காணப்படுகின்ற இளவயது கர்ப்பம் தொடர்பான விவகாரம் குறித்து சிறுவர் அபிவிருத்தி பெண்கள் விவகார அமைச்சு மற்றும் வட மாகாண சுகாதார அமைச்சு ஆகியன அதிக கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகும்.
இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பெண்களினதும், பெண் பிள்ளைகளினதும் நலன் மற்றும் பாதுகாப்பினை உறுதிபடுத்துவதற்கான செயற்றிட்டங்களை முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகவுள்ளது.
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுத்து அவர்களின் நலன்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இத்தகைய சமூகப் பிரச்சினைகளை தவிர்க்கலாம் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாகும். பெண்கள் சமூகத்தில் கேள்விக்குரிகளாக மாறுவதை தடுத்து நாட்டின் அபிவிருத்திக்கு அவர்களின் ஆற்றல்களை பயன்படுத்த வேண்டியது அனைவரினதும் பொறுப்பாகும்.
இளவயது கர்ப்பம் வடமாகாண சமூகத்தை அதிர்வுக்குள்ளாக்கும் சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது
Reviewed by NEWMANNAR
on
February 10, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment