ஆபிரிக்க நாடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை
மீன்பிடி தொழிலுக்காக தென் ஆபிரிக்கா பிராந்தியத்தில் இருக்கும் சியாராலியோன் நாட்டுக்கு சென்று அங்கு ஒரு அறையில் சுமார் 6 மாதங்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 6 இலங்கை மீனவர்கள் இன்று முற்பகல் நாடு திரும்பினர்.
இவர்கள் விமானம் மூலம் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். சிலாபம் பிரதேசத்தின் மாரவில, தொடுவாவே பகுதியை சேர்ந்த கிறஸ்டி குமார சுசந்த, தினேஷ் சுசந்த, ரமேஷ் இந்திக்க, சுதேஷ் ஜீவந்த, நிலுக்ஷன் சரித், அன்டனி ஹிக்வின்டஸ் ஆகிய 6 மீனவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
தங்கொட்டுவ பிரதேசத்தில் இயங்கும் மீன்பிடி தொழிலுடன் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஊடாக ஆழ்கடல் மீன்பிடி படகில் பணியாற்ற இவர்கள் சியாராலியோனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
80 ஆயிரம் ரூபா மாதச் சம்பளம் வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த மீனவர்கள் அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்.
இரண்டு மாதங்கள் மீன்பிடியில் ஈடுபட்டு நிறுவனத்திற்கு மீன்களை கொண்டு வந்து கொடுத்துள்ள இந்த மீனவர்களுக்கு மாதச் சம்பளமாக 50 ஆயிரம் ரூபா மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு மாதங்களின் பின்னர் அறை ஒன்றில் இவர்களை அடைத்து வைத்திருந்த நிறுவனத்தின் உரிமையாளர் அதன் பிறகு சம்பளம் எதனையும் கொடுக்கவில்லை.
இடவசதிகள், உணவு மற்றும் சுகாதார வசதிகள் எதுமின்றி உரிமையாளர் இவர்களை அறையில் சுமார் ஆறு மாதங்கள் அடைத்து வைத்திருந்தார்.
உறவினர்களின் கோரிக்கையை அடுத்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலையீட்டுடன் இவர்கள் மீட்கப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆபிரிக்க நாடொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் விடுதலை
Reviewed by NEWMANNAR
on
February 17, 2014
Rating:

No comments:
Post a Comment