இராணுவத்தினரின் அதிகரித்த பிரசன்னத்தை நியாயப்படுத்த விடுதலைப்புலிகள் பற்றிய புரளியை கிளப்பிவிட்டுள்ளது அரசு. .விக்கினேஸ்வரன்.
வட புலத்தில் தற்போது நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் அதிகரித்த பிரசன்னத்தை நியாயப்படுத்தும் வகையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கிவருகின்றனர் என்ற புரளி நாட்டில் தற்போது கிளப்பிவிடப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன், மேற்படி கட்டுக்கதை மிகவும் தரங்குன்றியதெனவும் பொலிஸ்காரர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தி அவரைக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேக நபரான கோபியை கைது செய்வதிலான தாமதம் பற்றிய விடை காணா வினாக்கள் தொடர்ந்தும் எழுந்த வண்ணமே உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இந்திய ஆங்கில நாளிதழ் "த ஹிந்து" வுக்கு அளித்துள்ள செய்தியொன்றின் போதே மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ள விக்கினேஸ்வரன், வடபுலத்தில் உள்ள இராணுவத்தினரை முகாம்களுக்குள் முடக்கி வைத்திருக்குமாறு நாம் அரசாங்கத்தை மீண்டும் மீண்டும் கேட்ட வண்ணமே உள்ளோம். ஆயினும் வடபுலத்தில் இராணுவத்தினரின் பிரசன்னத்தைக் குறைத்திட அரசாங்கம் விரும்புகின்றதேயில்லை எனவும் குறிப்பிட்டார்.
வடமாகாணத்தில் வாகனப் பரிசோதனைகள் உள்ளிட்ட பெருந்திரளான நடவடிக்கைகள் மூலம் இராணுவம் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக அறிய வருகின்றது. இது குறித்து யாழ்ப்பாண பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி உதய பெரேராவிடம் கேட்டபோது அவர் தெரிவித்துள்ளதாவது,
விடுதலைப் புலிகளின் அனுதாபிகளால் சாத்தியமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள் அணிதிரட்டல் ஒன்றை தடுப்பதை இலக்காகக் கொண்டே மேற்படி படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இங்குள்ள இத்தகையோருக்கு புலம் பெயர்ந்த தமிழர்களின் சில பிரிவினர் நிதியுதவி அளித்து வருவதனை தாங்கள் கேள்வியுற்று வருவதாகவும், கிளிநொச்சியில் பொலிஸ்காரர் ஒருவர் மீது சந்தேக நபர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருந்த சம்பவமொன்றை அடுத்து அத்தகைய சந்தேக நபரொருவரை கைது செய்தவதில் முன் எச்சரிக்கை நடவடிக்கையும் தேவையென்பது உணரப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கையில் சுமார் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்று வந்த கொடிய யுத்தத்தின் போது தோற்கடிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு புத்துயிரளிப்பதில் சந்தேக நபரான கோபியும் அவரது சகபாடியான அப்பன் என்பவரும் புலம் பெயர் தமிழர் அமைப்பினருடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளதை இராணுவம் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது. இத்தகைய மீள் அணி திரட்டும் நடவடிக்கைக்கு பரந்துபட்ட ஆதரவு இல்லாதிருப்பினும் இத்தகைய சக்திகள் வடபுலத்தில் உள்ள பலவீனப்பட்டுள்ள சமூகங்களை சுரண்டும் நடவடிக்கைகளில் ஈடுபடலாமெனவும் அதனை எம்மால் அனுமதிக்க முடியாதெனவும் ????????? மேலும் தெரிவித்தார்.
இராணுவத்தினரின் அதிகரித்த பிரசன்னத்தை நியாயப்படுத்த விடுதலைப்புலிகள் பற்றிய புரளியை கிளப்பிவிட்டுள்ளது அரசு. .விக்கினேஸ்வரன்.
Reviewed by NEWMANNAR
on
March 27, 2014
Rating:

No comments:
Post a Comment