மலேசிய விமானத்தில் சென்ற என் மனைவி எங்கே? சென்னை பெண்ணின் கணவர் உருக்கமான பேட்டி
காணாமல்போன மலேசிய விமானத்தில் சென்ற தன் மனைவியின் கதி என்ன ஆனது என்ற எந்த விவரமும் தெரியாமல் தாம் 5 நாட்களாக குழப்பத்தில் தவிப்பதாக சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மாவின் கணவர் நரேந்திரன் உருக்கமாக கூறியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை அதிகாலை கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங்குக்கு பயணித்த போது காணாமல்போன மலேசிய விமானம் தொடர்பாக இதுவரை எந்தவித உறுதியான தகவல்களும் வெளியாகவில்லை.
இந்நிலையில் விமானத்தில் இருந்த பயணிகள், ஊழியர்கள் உள்ளிட்ட 239 பேரின் குடும்பங்களும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்று தெரியாமல் தவிப்புடன் உள்ளனர்.
இந்த விமானத்தில் பயணித்தவர்களில் 5 இந்தியர்களும் அடங்குகின்றனர் அதில் சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா என்ற 50 வயதான பெண்ணும் ஒருவர்.
சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் கடந்த 19 ஆண்டுகளாக மீனவர் நலனுக்காக பணியாற்றியுள்ள இவரைப் பற்றி தகவல் எதுவும் கிடைக்காததால் அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் சோகத்தில் உள்ளனர்.
இந்நிலையில், சந்திரிகாவின் கணவர் நரேந்திரன், மகள் மேக்னா ஆகியோர் சென்னையில் ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளனர்.
விமான விபத்து குறித்து மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனமோ, இந்திய அரசோ இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. விமானம் என்ன ஆனது, எங்கு இருக்கிறது என்றும் தெளிவாக யாரும் சொல்லவில்லை. இதனால், எங்களுக்கு பெரும் குழப்பமாகவும் தவிப்பாகவும் இருக்கிறது
என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மட்டுமே ஒரு சில தகவல்கள் கிடைப்பதாகவும் அந்தத் தகவல்களையும் ஊடகங்கள் மூலமே தாங்கள் அறிந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக நாங்கள் குழப்பத்திலேயே இருக்கிறோம். மன நிம்மதி, தூக்கம் இல்லாமல் தவிக்கிறோம். ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற ஏக்கத்தில் இருக்கிறோம். காணாமல் போன விமானத்தை தேடும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன்
என காணாமல் போன விமானத்தில் பயணித்த சந்திரிகாவின் கணவர் நரேந்திரன் கூறினார்.
மலேசிய விமானத்தில் சென்ற என் மனைவி எங்கே? சென்னை பெண்ணின் கணவர் உருக்கமான பேட்டி
Reviewed by NEWMANNAR
on
March 13, 2014
Rating:

No comments:
Post a Comment