மன்னார் பள்ளிமுனை கிழக்கு கிராமங்களினுள் கடல் நீர் உட்செல்வதை தடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.
மன்னார் பள்ளிமுனை கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களினுள் கடல் நீர் உட்செல்லாத வகையில் அதனை தடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்கான ஒப்பந்தம் ஒன்று நேற்று திங்கட்கிழமை மாலை மன்னார் நகர சபையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக மன்னார் நகர சபையின் உப தலைவர் செ.ஜேம்ஸ் ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.
மன்னார் பள்ளிமுனை கிழக்கு பகுதியில் உள்ள கிராமங்களில் கடல் நீர் உட்செல்லுவதினால் பள்ளிமுனை கிழக்கு பகுதியில் உள்ள 50 வீட்டுத்திட்டம்,49 வீட்டுத்திட்டம் மற்றும் 41 வீட்டுத்திட்டம் ஆகிய மூன்று வீட்டுத்திட்ட கிராமங்களும் பாதிப்படைகின்றது.
இதனால் குறித்த கிராமங்களைச் சேர்ந்த 140 குடும்பங்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதோடு அக்கிராம மக்கள் தற்காலிகமாக இடம் பெயரும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இக்கிராம மக்களின் பிரச்சினையை தீர்த்து வைக்கும் முகமாக கடல் நீர் உட்செல்லாத வகையில் மன்னார் நகர சபை யூ.என்.கெபிட்டா அமைப்பின் நிதியுதவியுடன் குறித்த வேளைத்திட்டத்தை முன்னெடுபபதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையில் குறித்த வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு யூ.என்.கெபிட்டா அமைப்பும் மன்னார் நகர சபையும் நேற்று திங்கட்கிழமை(23) மாலை மன்னார் நகர சபையில் வைத்து ஒப்பந்தத்தினை கைச்சாத்திட்டுள்ளனர்.
இதன் போது யூ.என்.கெபிட்டா அமைப்பின் திட்ட முகாமையாளர் ஐ.எஸ்.வீர சூரிய, யூ.என்.கெபிட்டா அமைப்பின் நகர திட்டமிடல் அதிகாரி கத்தரின் டேவிஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டுள்ளனர்.
-குறித்த வேளைத்திட்டம் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் தற்போது முதற்கட்ட வேலைத்திட்டமாக குறித்த கிராமங்களில் மேற்கொள்ளப்படவுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் வரை படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இவ் வேலைத்திட்டம் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் நிறைவு பெறும் என மன்னார் நகர சபையின் உப தலைவர் செ.ஜேம்ஸ் ஜேசுதாசன் மேலும் தெரிவித்தார்.
மன்னார் பள்ளிமுனை கிழக்கு கிராமங்களினுள் கடல் நீர் உட்செல்வதை தடுக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்.
Reviewed by NEWMANNAR
on
June 24, 2014
Rating:
No comments:
Post a Comment