116 பேர்களுடன் சென்ற அல்ஜீரியா விமானம் திடீர் மாயம்!
அல்ஜீயர்ஸ்: 116 பேருடன் சென்ற அல்ஜீரியா விமானம் ஒன்று ராடாரின் பார்வையிலிருந்து காணாமல் போய்விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏர் அல்ஜீரி விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, 110 பயணிகள் மற்றும் 6 விமான சிப்பந்திகளுடன் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1.17 மணி அளவில் மேற்கு ஆப்பிரிக்கா நாடான பர்கினோ ஃபாசோவின் தலைநகரான ஒகாடோகோ என்ற இடத்தில் இருந்து, அல்ஜீரியாவுக்கு சென்று கொண்டிருந்த நிலையில், புறப்பட்ட 50 நிமிடங்களில் ராடார் பார்வையிலிருந்து மாயமாகி, விமான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பையும் இழந்ததாகவும், இதனையடுத்து மாயமான விமானத்தை தேடி அதே விமான பாதையில் மற்றொரு விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் அல்ஜீரி விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 17ஆம் தேதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து 298 பேருடன் புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், உக்ரைனில் கிழக்கு பகுதியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் பயணம் செய்த அனைவரும் உயிரிழந்த சம்பவத்தின் அதிர்ச்சி விலகுவதற்குள், நேற்று தைவானில் பயணிகள் விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில் 51 பேர் பலியாயினர்.
அடுத்ததாக இன்று 116 பேர்களுடன் சென்ற அல்ஜீரியா விமானம் திடீரென மாயமாகி இருப்பது, மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முன்னதாக 5 இந்தியர்கள் உள்பட 239 பயணிகளுடன் கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு, கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற மலேசிய விமானம் ஒன்று , நடுவானில் சென்று கொண்டிருந்தபோது, மர்மமான முறையில் மாயமானது.
அந்த விமானம் மற்றும் அதிலிருந்த பயணிகளின் கதி என்னவானது என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
116 பேர்களுடன் சென்ற அல்ஜீரியா விமானம் திடீர் மாயம்!
Reviewed by NEWMANNAR
on
July 24, 2014
Rating:

No comments:
Post a Comment