கடலில் மூழ்கும் அபாயத்தில் மன்னார் வளைகுடா தீவுகள்
மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவுகளும் கடலில் மூழ்கும் அபாயம் உருவாகியுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்த நிலை விரைவில் ஏற்படக்கூடும் என அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
மன்னார் வளைகுடாவில் வான் தீவு, காசுவார், காரைச்சல்லி, விலங்குசல்லி, உப்புத்தண்ணி, புலுவினிசல்லி, நல்ல தண்ணி தீவு, ஆனையப்பர் தீவு, வாலிமுனை, அப்பா தீவு, பூவரசன்பட்டி, தலையாரி, வாழை தீவு, முள்ளி தீவு, முயல் தீவு, மனோலி, மனோலிபுட்டி, பூமரிச்சான் தீவு, புள்ளிவாசல் தீவு, குருசடை தீவு, சிங்கில் தீவு என 21 தீவுகள் அமைந்துள்ளன.
இந்தத் தீவுகளைச் சுற்றிலும் 104 வகை பவளத் திட்டுகள், 147 வகை கடல் பாசிகள், 13 வகை கடல் புற்கள், கடல் சங்குகள், கடல் ஆமை, கடல் குதிரை, கடல் அட்டை போன்ற அரிய வகை உயிரினங்கள் வசிக்கின்றன.
குறிப்பாகப் பாலூட்டி இனங்களைச் சேர்ந்த ஆவுளியாவும் (Dugong), ஓங்கில்களும் (டால்பின்) இப்பகுதியில் அதிகமாகக் காணப்படுகின்றன.
இந்நிலையில், கடல் சூழலிலும் கடற்கரை பாதுகாப்பிலும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுகள் அண்மைக்காலமாக பெரும் ஆபத்தைச் சந்தித்து வருகின்றன.
21 தீவுகளில் கீழக்கரை அருகே உள்ள பூவரசன்பட்டி தீவு மற்றும் தூத்துக்குடி அருகே உள்ள விலங்குசல்லி தீவு ஆகிய இரண்டும் மூழ்கி வருவதாக, கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டிருந்தது.
சுற்றுச்சூழல் மற்றும் பருவ மாற்றத்தால் மன்னார் வளைகுடாப் பகுதியில் கடல் நீர்மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 1.8 மி.மீ. உயர்ந்து வருகிறது. இதனால் மன்னார் வளைகுடா தீவுகள் அனைத்துமே கடலில் மூழ்கும் அபாயம் உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
கடலில் மூழ்கும் அபாயத்தில் மன்னார் வளைகுடா தீவுகள்
Reviewed by NEWMANNAR
on
July 15, 2014
Rating:

No comments:
Post a Comment