வடக்கு, கிழக்கில் மாத்திரம் மக்களின் காணி சுவீகரிக்கப்படுவது ஏன்?-சுரேஷ் பிரேமச்சந்திரன்
மக்களின் சம்மதமின்றி அவர்களின் காணிகள் சுவீகரிக்கப்படக்கூடாது என இந்த நாட்டின் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆனால் வடக்கு, கிழக்கில் மாத்திரம் மக்களின் சம்மதமின்றி அவர்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு வருகின்றன. இவை எந்த ஒழுங்கமைப்பின் கீழ் நடைபெறுகின்றன என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேட்டுள்ளார்.
வலிகாமம் கிழக்கு பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள அச்சுவேலி ஜே. 285 கிராம அலுவலர் பிரிவில் 5ஆவது காலாட்படை பெரும்பகுதி தலைமை காரியாலயம் அமைப்பதற்கு நில அளவையாளர்கள் வருகை தந்தபோது அதனைத் தடுத்து நிறுத்தும் மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்து வெ ளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் அங்கு உரையாற்றுகையில்,
மக்களின் காணி அறவீடு செய்வதற்கு எத்தகைய நிலைப்பாடு என்பதை ஜனாதிபதி தெளிவுபடுத்தவேண்டும்.
இரத்தினபுரியில் நிகழ்வு ஒன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில் காணிகள் சுவீகரிக்கும்போது மக்களின் விருப்புக்கு மாறாக காணி சுவீகரிக்க முடியாது என்று கூறினார். இது வடக்கிற்கும் பொருந்தும் என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும்.
காணி உரிமையாளர்களுடைய ஒப்பந்தம் பெறாது அச்சுவேலியில் இவ்விடயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை காணி நில அளவையாளர்கள் மற்றும் பொலிஸாருக்கும் எடுத்துக் கூறினோம். அவர்களும் இதனை ஏற்றுக் கொண்டனர். அரசாங்கம் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது.
அமைச்சர்கள், அரச அதிகாரிகள் உட்பட அனைவரும் சட்டத்தின் பிரகாரம் காணி உரிமையாளர்களுடனும் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களுடனும் கலந்து பேசி உரிமையாளர்களின் முழு சம்மதத்துடன் காணிகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும்
.
வடக்கு, கிழக்கில் எங்கு வேண்டுமானாலும் யாரும் காணியை எடுக்கலாம் என்ற நிலைப்பாட்டில் செயற்படுவது ஆக்கபூர்வமானதல்ல. பொது மக்களின் காணிகளை சுவீகரிக்கும்போது அவர்களுடைய விருப்பத்திற்கு மாறாக சுவீகரிக்கக் கூடாது என்று ஜனாதிபதி மேடைகளில் கூறிவருகின்றார். ஆகவே ஜனாதிபதியின் இந்தக் கூற்று இரத்தினபுரிக்கு மாத்திரம் அல்ல வட மாகாணத்திற்கும் பொருந்தும் என்பதை நாங்கள் நம்புகின்றோம்.
இவ்வாறு நாடு முழுவதும் ஒரு சட்டம் இருக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும் பொது மக்களின் பூர்வீகக்காணிகள் இராணுவத்தினரின் தேவைக்காக எனக் காரணம் காட்டி சுவீகரிக்கப்படுவது ஏன்? இதனை ஜனாதிபதி தெளிவுபடுத்த வேண்டும்.
இதனை தெளிவுபடுத்துவதன் மூலம் தான் காணி அளவையாளர்களும் நிலமைகளைப் புரிந்து கொள்வார்கள் என்றார்.
வடக்கு, கிழக்கில் மாத்திரம் மக்களின் காணி சுவீகரிக்கப்படுவது ஏன்?-சுரேஷ் பிரேமச்சந்திரன்
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 22, 2014
Rating:


No comments:
Post a Comment