உளவியல் தொடர்பான நெருக்கீடுகள் வட பகுதியில் சடுதியாக அதிகரித்துள்ளன; சி.துரைரட்ணம்
உளவியல் தொடர்பான நெருக்கீடுகள் வட பகுதியில் சடுதியாக அதிகரித்துள்ளன. எனவே சமூக உளமாற்றங்களை ஏற்படுத்தி நல்வழிப்படுத்த தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் கூறப்படுகின்ற விசேடமான வழிமுறைகளினூடாக புதிய திட்டங்களை மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது என வடமாகாண சுதேச மருத்துவத் திணைக்கள ஆணையாளர் வைத்தியர் திருமதி. சி.துரைரட்ணம் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அச் செய்திக் குறிப்பில், நவீனமயப்படுத்தப்பட்ட நாகரீக வாழ்க்கையினாலும் பல்வேறுபட்ட குடும்பச் சூழ்நிலை, போரனர்த்தம் போன்றவற்றினாலும் வடபகுதி மக்கள் தற்போது பல்வேறுபட்ட நெருக்கடிகளை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்குட்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் உளவியல் தொடர்பான நெருக்கீடுகள் வடபகுதியில் சடுதியாக அதிகரித்துக் காணப்படுகின்றன.
வடபகுதி தமிழர்களின் பாரம்பரியம், கலை, கலாசாரம் என்பது உலகத் தமிழர்களால் மட்டுமன்றி ஏனைய சமூகத்தவர்களாலும் விரும்பப்பட்டதுடன் பாராட்டப்பட்ட ஒன்றாகவும் இருந்து வந்தது.
இன்றைய நவீனத்துவ மாற்றங்கள் முக்கியமாக போருக்குப் பின்னரான எமது இளம் சமுதாயத்தினரிடையே ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அதிர்ச்சியூட்டும் விதமாக காணப்படுகின்றன.
இள வயதினரிடையே அதிகரித்து வரும் புகைபோதைப் பழக்கங்கள், இளவயதுக் கர்ப்பங்கள், தற்கொலைகள், வன்முறைப்போக்குகள், ஆசிரியர், பெற்றோரை மதிக்காத அலட்சிய மனப்பாங்குகள் என்பன சமூகத்தில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளன. இவ்வாறான விரும்பத்தகாத மாற்றங்கள் தொடர்பில் அரச, அரச சார்பற்ற, சமூக அக்கறைசார் நிறுவனங்கள் உடனடியாக கவனம் செலுத்தி அவசியமான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இவ்வாறான இளம் சமுதாயத்தின் மாறுபட்ட உளமாற்றங்களை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், எமது சமூகத்தின் பாரம்பரியம், கலாசாரம் அழிவதுடன் எமது எதிர்கால சந்ததியும் மிக மோசமான விளைவுகளை எதிர்கொள்வதும் தவிர்க்கமுடியாதொன்றாகிவிடும்.
எனவே சமூக உள மாற்றங்களை ஏற்படுத்தி நல்வழிப்படுத்த தமிழர் பாரம்பரிய மருத்துவமான சித்த மருத்துவத்தில் கூறப்படுகின்ற விசேடமான வழிமுறைகளினூடாக புதிய திட்டங்களை மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.
இத் திட்டம் தொடர்பில் சமூக மட்டங்களில் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக ஆயுள்வேத மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று மாகாண ஆணையாளர் சுதேச மருத்துவத்துறையின் தலைமையில் கடந்த ௪ஆம் திகதி மாகாண சுதேச வைத்தியத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக உளவியல்சார் நிபுணத்துவம் பெற்றவர்கள் மூலமாக அறிவூட்டல் பயிற்சியூடாக நீண்டகால நோக்கிலான திட்டவரைபொன்றை தயாரித்தல் தொடர்பிலான கருத்தமர்வு ஜூன் மாத இறுதியில் நடத்தப்பட்டது.
இத் திட்ட வரைபின் மூலம் பாடசாலைமட்ட மாணவர்கள், அரச உத்தியோகத்தர்கள், முதியோர்கள் தொடர்பிலான உளநெருக்கீட்டுப் பிரச்சினைகளை இனம் காணலும் தீர்த்தலும் மற்றும் யோகாசனப் பயிற்சி நெறிகளை முன்னெடுத்தல் தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத் திட்டங்களுக்கு அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கி இதனை முன்னெடுத்துச்செல்ல உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என்றுள்ளது.
உளவியல் தொடர்பான நெருக்கீடுகள் வட பகுதியில் சடுதியாக அதிகரித்துள்ளன; சி.துரைரட்ணம்
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment