அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை அகதிகள் கோகோஸ் தீவுக்கு மாற்றம்

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட போது, நடுக்கடலில் கடந்த ஜூன் 29 ஆம் திகதி முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 157 பேரிடம் இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்துவதற்காக, குறித்த அகதிகளை கோகோஸ் தீவுக்கு கொண்டுசெல்வதற்கு அவுஸ்திரேலிய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது. குறித்த 157 அகதிகளும் அந்நாட்டு சுங்கத் திணைக்கள கப்பல் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் அவுஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை ( 27) விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர். 

 தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி படகு மூலம் குறித்த இலங்கை அகதிகள் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் சென்ற போது, அவுஸ்திரேலியாவுக்கு அருகே சர்வதேச கடல் பகுதியில் அவர்களை அந்நாட்டு கடற்படையினர் கடந்த ஜூன் 29 ஆம் திகதி கைது செய்தனர். இந்நிலையில் உரிய விசா, ஆவணங்களின்றி இந்தியாவில் இருந்து வந்த அனைவரையும் அவுஸ்திரேலியாவுக்குள் அழைத்து வரக்கூடாது என்று அந்நாட்டு அரசு முடிவு செய்தது. 

இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக அவுஸ்திரேலிய நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சிறைப்பிடிக்கப்பட்ட இலங்கை அகதிகளை மீண்டும் அவர்கள் தாயகத்துக்குத் திருப்பி அனுப்ப இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு ஒகஸ்ட் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனால், நடுக்கடலில் அஸ்திரேலிய சுங்கத் பிரிவு கப்பலில் சிறை வைக்கப்பட்டுள்ள அகதிகளின் நிலை கேள்விக்குரியானதுடன் இது தொடர்பில் அவுஸ்திரேலிய, இந்திய அரசுகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் தடுத்துவைக்கப்பட்டுள்ள அகதிகளை இந்திய தூதரக அதிகாரிகள் மூலம் அடையாளம் காண முடிவு செய்யப்பட்டது.

 அதையடுத்து, அகதிகள் இருக்கும் கப்பலை கிறிஸ்துமஸ் தீவு அருகே உள்ள கோகோஸ் தீவுக்கு கொண்டு செல்லும்படி அவுஸ்ரேலிய கடற்படைக்கு அந்நாட்டு அரசாங்கம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இதையடுத்து, அகதிகள் காவலில் வைக்கப்பட்டுள்ள சுங்கத் பிரிவு கப்பல் அத்தீவை நோக்கி புறப்பட்டுள்ளது. அத்தீவில் இரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும், அவர்களில் யார் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள், யார் இலங்கை அகதிகள் என்பது குறித்து கான்பராவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் விசாரிக்கவுள்ளனர். அதன் பிறகே அந்த அகதிகளை இந்தியாவுக்குத் திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து இந்திய மத்திய அரசு முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அகதிகள் கோகோஸ் தீவுக்கு மாற்றம் Reviewed by NEWMANNAR on July 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.