மாற்று டிரைவரின் விபரீத புத்தி 19 பச்சிளம் தளிர்களை சிதைத்த குறுக்கு வழி: விபத்து நடந்தது எப்படி?
வழக்கமாக பள்ளி பஸ்சை ஓட்டி செல்லும் டிரைவர் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால் அதே பகுதியில் வசிக்கும் டிராக்டர் டிரைவரான பிச்சாபதி கவுடு மாற்று டிரைவராக பஸ்சை ஓட்டினார். விபத்து நடந்த கிராமத்தில் ஆட்கள் உள்ள 2 லெவல் கிராசிங்குகள் உள்ளன. வழக்கமான டிரைவர், இவற்றின் வழியாகதான் எப்போதும் செல்வார். இது சற்று தூரம் என்பதால், ஆளில்லா லெவல் கிராசிங்கில் சென்றால் சீக்கிரமாக சென்று விடலாம் என்று பிச்சாபதி கருதினார். இதுதான் விதி என்பதுபோல், அந்த லெவல் கிராசிங்கில் பஸ் மீது ரயில் மோதி 21 உயிர்கள் பலியாகி விட்டன. இந்த வழியை பிச்சாபதி தவிர்த்து இருந்தால், 19 பச்சிளம் தளிர்கள் சிதைந்து இருக்காது என்று போலீசார் தெரிவித்தனர். சாலை மறியல், கல்வீச்சு: விபத்து நடந்த லெவல் கிராசிங்கில் இதேபோல் பலமுறை விபத்து நடந்துள்ளது. இங்கு கேட் அமைக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும், ரயில்வே நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என்று புகார் தெரிவித்த மாணவர் அமைப்பு மற்றும் கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மீட்பு பணியில் அமைச்சர்கள்
தகவல் அறிந்து வந்த அமைச்சர்கள் ஹரிஷ் ராவ், ஜெகதீஷ்வர ரெட்டி, டிஜிபி அனுராக் சர்மா, மாநில பாஜ தலைவர் கிஷண் ரெட்டி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி உட்பட பலர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல், விபத்தில் சிக்கியவர்களை மீட்க ரயில்வே துறை பொது மேலாளர் ஸ்ரீவாஸ்தவா மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள், ரயில்வே மருத்துவ உதவி மற்றும் சிகிச்சைக்கான சிறப்பு ரயிலுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பிரதமர் மோடி, சோனியா இரங்கல்
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பிரதமர் வெளியிட்ட அறிக்கையில், ‘விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவாக குணம் பெற பிரார்த்தனை செய்கிறேன்’ என்று கூறப்பட்டுள்ளது. ‘விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
துயரமான இந்த தருணத்தில் எங்களின் பிரார்த்தனை எப்போதும் அவர்களுடன் இருக்கும். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க, சாலை மற்றும் ரயில் போக்குவரத்து பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்று சோனியா தனது அறிக்கையில் கூறியுள்ளார். அதேபோல், ராகுல் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.
பலியானவர்கள்
விபத்தில் பஸ் டிரைவர் பிச்சாபதிகவுடு, கிளீனர் தனுஷ் கவுடு, மாணவர்களில் வருண், அவரது தங்கை ஸ்ருதி, சரண், அவரது அக்கா திவ்யா, ரஜியா, அவரது தம்பி வஹித், சுமன், மகேஷ், சரண், வித்யா, புவனா, வம்சி, விஷ்ணு உட்பட 21 பேர் பலியாயினர்.
ஆந்திரா, தெலங்கானா முதல்வர்கள் அதிர்ச்சி
விபத்து குறித்து தகவலறிந்ததும் தெலங்கான மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அதேபோல் ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி அடைந்தார். தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளை விபத்து நடந்த இடத்திற்கு சென்று மீட்பு பணியில் ஈடுபடும்படியும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறும்படியும் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டார்.
பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மேதக் மாவட்ட கல்வி துறை அதிகாரிகள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், பள்ளி குழந்தைகள் இறந்த சம்பவத்தால் மாணவர்கள் கடும் துயரம் கொண்டுள்ளனர். இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மேதக் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
மாற்று டிரைவரின் விபரீத புத்தி 19 பச்சிளம் தளிர்களை சிதைத்த குறுக்கு வழி: விபத்து நடந்தது எப்படி?
Reviewed by NEWMANNAR
on
July 25, 2014
Rating:

No comments:
Post a Comment