ஜிகர்தண்டா விமர்சனம்
பிரபல ரவுடியின் கதையை படமாக்க நினைக்கும் அறிமுக இயக்குனர், அந்த ரவுடியிடம் சிக்கி சின்னாபின்னமாவதே ஜிகர்தண்டா. சினிமா கனவோடு அலையும் சித்தார்த்துக்கு ஒரு ரவுடி கதை இருந்தால் படம் இயக்க வாய்ப்புக் கிடைக்கும் என்ற நிலைமை. ராவான ரவுடி அசால்ட் சேதுவின் வாழ்க்கையை படமாக்க நினைத்து அவனைப் பற்றி அறிய மதுரை வருகிறார்.
நண்பன் வீட்டில் தங்கிக்கொண்டு சேதுவின் ஏ டூ இசட் அறிய நினைக்கும்போது அவரிடமே மாட்டிக்கொள்ள வேண்டி வருகிறது. பிறகு அவரையே ஹீரோவாகப் போட்டு படம் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். பிறகு என்ன நடக்கிறது என்பது கதை. மொத்த படத்தையும் தனது முறைப்பாலும் சிரிப்பாலும் தூக்கி நிறுத்துகிறார் பாபி சிம்ஹா. என்னைப் பத்தி இவ்வளவு எழுதிட்டு பொம்மை படமா போடறே? என்று ரிப்போர்ட்டரை போட்டுத்தாக்கும் அவரின் என்ட்ரியே, எனர்ஜியாக இருக்கிறது.
கொடூரமாகக் கொலை செய்வதிலும் தன் கூட்டத்துக்குள் இருக்கும் எதிரியை அறிய நடத்தும் நாடகத்திலும் அவர் காட்டும் வன்மம், உச்சம். முதல் பாதியில் துப்பாக்கி மற்றும் அரிவாளில் விளையாடும் சிம்ஹா, இரண்டாம் பாதியில் கேமரா முன்பு எடுக்கும் நடிப்பு அவதாரம், அலப்பறை அலங்காரம். அதுவும் கிளைமாக்ஸில் அவர் பேசும் ஜிப்ரிஸ் கிளாஸ். வில்லன் கேரக்டருக்கு வழிவிட்டு அமைதியாக ஆட்கொள்கிறார் ஹீரோ சித்தார்த். சேலை திருடி லட்சுமி மேனனின் லுக்கில் விழுவதும் அசால்ட்டின் கதை கேட்க, அவர் நடத்தும் பலான சிடி பரிமாற்றமும் சிம்ஹாவின் கஸ்டடிக்குள் வந்ததும் கதறுவதும் படப்பிடிப்பில் எரிந்து விழுவதுமாக ஓர் அறிமுக இயக்குனரின் மனநிலையை அசலாகச் சித்தரிக்கிறார் சித்தார்த். கங்கிராட்ஸ். கண்டதும் காதலித்து கொஞ்சமாகக் கோபப்பட்டு கொஞ்சமாக அழ வேண்டிய வேலை லட்சுமி மேனனுக்கு. அதை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.
பயந்தாங்கொள்ளி நண்பன் கருணாகரன், மண்டையில் கொட்டி நடிப்பு சொல்லிக்கொடுக்கும் சோமசுந்தரம், பேசியே கொல்லும் சங்கிலி முருகன் நான் பண்றேண்ணே என்று சம்பவம் பண்ணத் துடிக்கும் அந்த அடியாள், அப்பாவைப் பின்பற்றி தொழிலுக்குள் இறங்கும் சவுந்தர்ராஜா என அனைவருமே சரியானத் தேர்வு. சந்தோஷ் நாராயணனின் இசையில் பாடல்களும் ரீரெக்கார்டிங்கும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. கேவ்மிக்கின் ஒளிப்பதிவில் நின்று பெய்கிறது இரவு மழை.
கொலைவெறியோடு அலையும் ரவுடி, மக்கள் ரசனையில் கொஞ்சம் கொஞ்சமாக மயங்குவது, பிறகு நடிகனாக உருண்டு புரண்டு கொண்டிருப்பது, இயக்குனர் கால்ஷீட் கேட்டு மிரட்டிக்கொண்டிருப்பது என ரசனையான ஹைக்கூக்கள் படம் முழுவதும் விரவிக்கிடக்கிறது. அதை அழகாகக் கையாண்டிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். படத்தின் நீளத்தை குறைத்திருந்தால் ஜிகர்தண்டா இன்னும் ஜில்லாக இருந்திருக்கும்.
ஜிகர்தண்டா விமர்சனம்
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 09, 2014
Rating:


No comments:
Post a Comment