அண்மைய செய்திகள்

recent
-

சிறப்பாக இடம்பெற்ற முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் பொன் விழா நிகழ்வுகள்-Photo

மன்னார் மாவட்டத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக கலைப்பணியாற்றிவரும் முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் பொன்விழா நிகழ்வுகள் இம்மாதம் (செம்பரம்பர்) 20ஆம் திகதி முருங்கன் புனித இயாகப்பர் ஆலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது. கலைஞர் செபமாலை குழந்தை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு வளர்க்கப்பட்டுவந்த இக்கலாமன்றத்தின் பொன்விழா நிகழ்வுகளை அருட்தந்தை செ. அன்புராசா மற்றும் முத்தமிழ் கலாமன்ற உறுப்பினர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவிற்கு அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தலைமை தாங்கினார். 


   மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இரா. யோசேப்பு ஆண்டகை அவர்கள் இவ்விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினர்களாக முருங்கன் பங்குத்தந்தை அருட்பணி. பீற்றர் மனோகர், முருங்கன் மெதடிஸ்த குருவானவர் எஸ். ஆர். முருகுப்பிள்ளை, வவுனியாவைச் சேர்ந்த தமிழறிஞர் கலாநிதி அகளங்கன், யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் கலைஞருமான கலாநிதி த. கலாமணி, யாழ் பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளரும் கலைஞரும் ஆய்வாளருமான கலாநிதி க. சிறிகணேசன், அறிஞரும் கவிஞருமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திரு. சோ. பத்மநாதன் (சோ.ப.), மன்னார் வலயக் கல்விப்பணிப்பாளர் ஜனாப் எம். எம். சியான் ஆகியோர் கலந்துகொண்டனர். கௌரவ விருந்தினர்களாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ என்;. சிவசக்தி ஆனந்தன், கௌரவ எஸ். வினோ நோகராதலிங்கம், நானாட்டான் பிரதேசசபைத் தலைவர் திரு. ஏ. ரீ. அன்புராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். பல பிரமுகர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள், குருக்கள், துறவியர் எனப் பலர் இவ்விழாவில் கலந்துசிறப்பித்தனர்.  

  இப்பொன்விழா நிகழ்வின்போது வடமாகாண ஆளுனர் செயலகத்தினால் நடாத்தப்பட்ட பாரம்பரியக் கலைகளுக்கான போட்டியில் மாகாண மட்டத்தில் பங்குகொண்ட, முதலிடங்களைப் பெற்ற இம்மன்றத்தின் கலைநிகழ்வுகள் மேடையேற்றப்பட்டமை சிறப்பம்சமாக அமைந்திருந்தது. மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்ற சிறுவருக்கான கூத்துவழி நடனம்,  முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் குழந்தைக் கலைஞர்கள் நடித்த 'யார் குழந்தை' என்ற கூத்து நாடகம், 'வீரத்தாய்' நாடகம், ஆவணம் கார்மேல் அன்னை கலாமன்றத்தின் வடமாகாணப் போட்டியில் முதலிடம் பெற்ற 'பாஞ்சாலி சபதம்' கூத்து நாடகம் போன்றவை இவ்விழாவில் அரங்கேற்றப்பட்டு பலரது பாராட்டைப் பெற்றிருந்தன. 

  கடந்த ஐம்பது வருடங்களாக மன்றத்தில் கலைப்பணியாற்றிய மூத்த கலைஞர்களுக்கு பொன்னாடை போர்த்தி, பொற்கிளி வழங்கப்பட்டது. இறந்தபோன கலைஞகர்களின் மனைவிமார் மேடைக்கு அழைக்கப்பட்டு பொன்னாடை போர்த்தப்பட்டனர். கலாமன்றத்தில் நீண்டகாலமாகப் பணிபுரிந்த, பணிபுரிந்துவருகின்ற இளங்கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர். 

  இதைவிட மன்னார் மாவட்டத்தின் பல்வேறு இடங்களைச் சேர்ந்த சமூகப்பெரியார்கள், கலைஞர்கள், இலக்கியவாதிகள் ஆகியோர் கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். ஆத்;திக்குளியைச் சேர்ந்த ஆளுனர் விருது பெற்ற திரு. அ. அந்தோனிப்பிள்ளை அவர்கள் சிறுவர் இலக்கியத்திற்கு செய்த பணிகளைப் பாராட்டி 'பிள்ளைத் தமிழோன்' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. பேசாலையைச் சேர்ந்த திரு. எஸ். ஏ. உதயன் அவர்களின் நாவல் இலக்கியப் படைப்புக்களைப் பாராட்டி 'நாவல் நாயகன்' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. ஆட்காட்டிவெளியைச் சேர்ந்த திரு. பி. எம். செபமாலை அவகர்ள் மாதோட்ட வரலாற்றியலுக்கு செய்த பங்களிப்பைப் பாராட்டி 'ஆய்வறித் தலைமகன்' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. இசைமாலைத்தாழ்வைச் சேர்ந்த திரு. செபமாலை பிலிப்பு (சிங்கராசா) அவர்களின் கலைச்செயற்பாடுகளைப் பாராட்டி 'சுடர்கலைச் சோதி' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. காத்தான்குளத்தைச் சேர்ந்த திருமதி. வசந்தி சுவாந்தகுரூஸ் அவர்களின் நாடகத்துறைப் பங்களிப்பைப் பாராட்டி 'அரங்கச் செல்வி' என்ற கௌரவ பட்டம் வழங்கப்பட்டது. 

  இதைவிட இவ்வாண்டு குருத்துவ வெள்ளிவிழாக் கண்ட அருட்பணியாளர்கள் தேவராஜா கொடுதோர், பீற்றர் மனோகர் மற்றும் கலாநிதி அகளங்கன், கவிஞர் சோ. பத்மநாதன், கலாநிதி த. கலாமணி, கலாநிதி சிறிகணேசன், கலாபூசணம் விருது பெற்ற மன்னார் மணி (திரு. மரியதாஸ்), யாழ் குருநகர் இராயப்பு கலையார்வன் ஆகியோரும் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர். 

 குறித்த நேரத்திற்கு நிகழ்வுகள் ஆரம்பமாகி குறிப்பிட்ட நேரத்திற்குள் நிகழ்வுகள் யாவும் நிறைவுபெற்றமையும், நிகழ்வுகள் யாவும் விறுவிறுப்பாக அமைந்திருந்தமையும், பார்வையாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டமையும் இவ்விழாவின் சிறப்புக்களாக சிலாகித்துப் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

















சிறப்பாக இடம்பெற்ற முருங்கன் முத்தமிழ் கலாமன்றத்தின் பொன் விழா நிகழ்வுகள்-Photo Reviewed by NEWMANNAR on September 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.