குற்றச் செயல்களை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்- மன்னார் வாழ் பெண்கள் சார் அமைப்பு.
இன்று நாடளாவிய ரீதியில் சிறுவர், பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகங்கள் மிக மோசமாக அதிகரித்து வருகின்றமை வேதனைக்குரிய விடயமாகும். இவ்வாறான சம்பவங்கள் எமது பிரதேசத்திலும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றபோதிலும் அதிகமான பெற்றோர்கள் தமது பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த பயத்தின் காரணமாக இவ்வாறான குற்றச் செயல்களை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வராது போய்விடுகின்றனர் என மன்னார் வாழ் பெண்கள் சார் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் குறித்த அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடுகையில்,,,,
குற்றச் செயல்களை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வராது இருப்பதன் காரணமாக இவ்வாறான பயங்கரமான குற்றவாளிகள் சமூகத்தில் மிக சுதந்திரமாக நடமாடித்திரிகின்றனர் என்பதனை ஒவ்வொரு பெற்றோரும் சற்று சிந்தித்து உணர வேண்டும்.
அத்துடன் தமது பிள்ளைகளின் பாதுகாப்பு, போக்குவரத்து, பாடசாலைகள் பிரத்தியேக வகுப்புகளுக்கான ஒழுங்குகள் குறித்து அவதானமாகவும் , விழிப்புணர்வுடனும் பெற்றோர்கள் செயற்பட வேண்டும்.
சிறுவர்களின், பெண்களின் மிகப்பெறுமதியான எதிர்காலத்தினை உடல் உள ரீதியாக பாதிக்கும் வகையில் செயற்படுவோரை இச்சமூகம் தமது பொறுப்பிலிருந்து விலகி நிற்காது, தட்டிக்கேட்டல் அவசியம்.
இது ஒவ்வொருவரது தலையாய கடமையுமாகும். இவ்வாறான சம்பவமானது பிரதேச வாழ் ஒவ்வொரு பெற்றோருக்கும், சமூகத்திற்கும் மிகப்பெரும் படிப்பினையும் அனுபவத்தையும் ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எனவே பிள்ளைகளுடன் தொடர்புபடுகின்ற வெளிநபர்கள் மாத்திரமின்றி அவர்களுடன் நெருக்கமாகப் பழகுகின்ற அயலவர்கள், குடும்ப உறுப்பினர்கள் தொடர்பிலும் மிக அவதானமாக செயற்படுவது பெற்றோரின் பாரிய பொறுப்பாகும்.
அண்மைக்காலமாக அதிகாரத்தில் இருக்கும் சிலர் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி நலிவுற்றோரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வருகின்றமை அவதானிக்கப்பட்ட விடயமாக இருந்து வருகின்றது.
குறிப்பாக இவ்வாறான வழக்குகள் நீதிமன்றத்தில் நடைபெறும் போதும், பொது மக்கள் தங்களது கரிசனைகளையும் வழக்கு நகர்வு குறித்து பாரிய எதிர்பார்ப்பையும் தெரிவிக்கும் வகையில் செயற்படும் போது இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடுவோரை எச்சரிக்க முடியும்.
மேலும் பிஞ்சு மனங்களையும், பெண்களையும் வெறும் பாலியல் நோக்கோடு பார்ப்பதும், பயன்படுத்துவதும் நிறுத்தப்படல் வேண்டும்.
குற்றவாளி ஒருவர் சட்டத்தின் ஓட்டைகளை வைத்து எவ்வகையிலும் தப்பிச்செல்ல இந்நாட்டின் நீதித்துறை அனுமதி வழங்கக்கூடாது இக்குற்றவாளிக்கு நீதிமன்றம் அதி உச்ச தண்டனையை வழங்க வேண்டும்.
இறுதியாக கட்டுக்காரன் குடியிருப்பு பாடசாலையில் நடைபெற்ற சிறுவனுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் நீதியான வகையில் தண்டிக்கப்பட வேண்டும் என இந்நாட்டு நீதித்துறையினை வேண்டிக்கொள்வதுடன் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, இவ்வாறான கொடூரச் செயல்கள் இந்நாட்டில் உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
அத்துடன் இந்நாட்டில் வாழுகின்ற பெண்களினதும், சிறுவர்களினதும் உரிமைகள் நிலை நாட்டப்பட்டு அவர்களுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதை அரசாங்கமும் உறுதி செய்ய வேண்டும்.என மன்னார் வாழ் பெண்கள் சார் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச் செயல்களை பகிரங்கப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனைகளைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்- மன்னார் வாழ் பெண்கள் சார் அமைப்பு.
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 26, 2014
Rating:


No comments:
Post a Comment