இலங்கையில் ஹுட் ஹுட் சூறாவளித் தாக்கம்: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை
வங்காள விரிகுடாவில் மையங் கொண்டுள்ள ஹுட் ஹுட் (HUD HUD) என அழைக்கப்படும் சூறாவளிப் புயல் காரணமாக இலங்கையின் பல பாகங்களிலும் கடும் காற்றுடன் பலத்த மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஹுட் ஹுட் சூறாவளிப் புயலானது வடமேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
விசாகப் பட்டணத்திலிருந்து தென்கிழக்காக 610 கிலோமீற்றர் தூரத்திலும் கோபாலூரிலிருந்து தெற்கு-தென்கிழக்காக 630 கிலோமீற்றர் தூரத்திலும் இப்புயல் மையங் கொண்டுள்ளது.
இந்த சூறாவளிப்புயலானது தொடர்ந்தும் வடமேற்குத் திசையை நோக்கி நகர்ந்து, மீண்டும் வலுவடைந்து மிகவும் வலுவான சூறாவளிப் புயலாக அடுத்த 12 மணி நேரத்தில் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் பின்னர் இச்சூறாவளியானது, வட ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டிணம் அருகே 12ம் திகதி ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூறாவளியினால் நேரடியான பாரிய தாக்கம் எதுவும் இலங்கையில் அல்லாதபோதும், இலங்கையிலும் தீவைச் சுற்றியுள்ள கடல் பிராந்தியங்களிலும் பலமான காற்று வீசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி, மாத்தறை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். இது பின்னர் வடமேற்கு பிராந்தியத்திற்கும் பரவும்.
அத்துடன் ஊவா, கிழக்கு முற்றும் வடமத்திய மாகாணங்களில் பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் இடியுடன்கூடிய மழை காணப்படும். இந்த இடியுடன்கூடிய மழை காணப்படும் சந்தர்ப்பத்தில் காற்று பலமானதாக வீசும்.
புத்தளம் முதல் மன்னார் ஊடான காங்கேசன்துறை வரையான கடல் பிராந்தியம் மற்றும் காலி முதல் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் தொடக்கம் 60 கிலோமீற்றர் வரையான வேகத்தில் அதிகரித்து வீசுவதனால் இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஹுட் ஹுட் சூறாவளித் தாக்கம்: வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை
Reviewed by NEWMANNAR
on
October 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 10, 2014
Rating:


No comments:
Post a Comment