வடமாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வியாழக்கிழமை மாகாண சபை அமர்வின் போது ஆற்றிய உரையின் தொகுப்பு
வடக்கில் இருந்து இடம் பெயர்ந்த நிலையில் ஏனைய மாவட்டங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் பரீட்சை எழுதுவதற்காக தமது மாவட்டங்களுக்கு வருவது தொடர்பில் சபையில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன்,வடக்கில் வாழ்ந்த மக்கள் இன்னும் அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றம் செய்யப்படவில்லை.இவர்கள் பல பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.குறிப்பாக இங்கு கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமளிக்க வேண்டியது எனது கடமையாகும்.
இடம் பெயர்வுக்குள்ளான மாணவர்கள் தாம் தற்காலிகமாக வாழும் பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலுகின்றனர்.ஆனால் அவர்கள் பரீட்சையினை தமது சொந்த மண்ணில் எழுதவருகின்றனர்.அதே போல் இங்கு அடிப்படை வசதிகள் இன்மையால் இம்மாணவர்கள் கல்வி பயிலும் பகுதி பாடசாலைகளுக்கு கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்க உதவிகள் செய்யப்படுகின்றன.அது இடம் பெற வேண்டாம் என்று சொல்பவர்கள்,வடக்கில் இவ்வாறான மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த தேவையான வசதிகளை செய்து கொடுத்து,இம்மாணவர்களின் பெற்றோர்கள் இங்கு மீள்குடியேற்றம் செய்யப்படுவதற்கு முன்னின்று செயற்படுவீர்களா? அவ்வாறாயின் இந்த மக்கள் இங்கு நிரந்தரமாக வாழுவதற்கு வருவார்கள் என்றும் றிப்கான் பதியுதீன் கூறினார்.
வடமாகாண சபையின் அமர்வு இன்று(2014.10.09) மாகாண சபை கட்டிட கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் உரையாற்றுகையில் கூறியதாவது
அளவற்ற அருளாலனும்,நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் அருள் கொண்டு இந்தச் சபையில் எனது உரையினை ஆற்றவிரும்புகின்றேன்.
சபைக்கு தலைமை தாங்கும் தலைவர் அவர்களே,சபை அங்கத்தவர்களே,
வணக்கம்.
இன்றைய சபை அமர்வில் உரையாற்றக் கிடைத்தமைக்கு நன்றி தெரிவிப்பதோடு.காணி விவகாரம் தொடர்பில் சில விடயங்களை முன் வைக்க விரும்புகின்றேன்.
அதற்கு முன்பதாக 3 தசாப்தங்களின் பின்னர்,வடமாகாண சபையின் செயற்பாடுகள்,எமது வடமாகாண சபைக்கு தெரிவாகியுள்ள சட்டத்துறை அறிஞர் கௌரவ முதலமைச்சர் அவர்களின் இந்த ஆட்சியின் கீழ்,இம்மாகாண மக்களுக்கு பணியாற்றக் கிடைத்த சந்தர்ப்பமானது, ஒரு வரலாற்று பதிவாகும்.
கௌரவ தலைவர் அவர்களே,
இன்று இந்த சபையில் காணி தொடர்பான விவாதத்தில் எனது பக்க கருத்துக்களை முன் வைக்க ஆர்வமாகவுள்ளேன்.இன்று இந்த இடத்தில் நின்று எனது சில நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாம் எனவும் அவா கொள்கின்றேன்.
இற்றைக்கு 24 வருடங்களுக்கு முன்னர் நானும்,எனது குடும்பத்தினரும்,வடக்கில் வாழ்ந்து முஸ்லிம்களும் வெளியேற்றப்பட்டோம்.இந்த வெளியேற்றத்தினால் நாங்கள் அனுபவித்த துன்பங்களும்,துயரங்களும் அளப்பறியது.அதன் பின்னர் ஏற்பட்ட சமாதான சூழல் மீண்டும் எமது மக்களை இந்த மண்ணில் வாழுவதற்கான அழைப்பினைவிடுத்தது.எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் அவர்கள்,வடக்கில் வாழ்ந்த தமிழ்.முஸ்லிம் மக்களை அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யும் பணியினை மிகவும் நேர்த்தியாக செய்தார்.இருந்த போதும்,சில இனவாத சக்திகள் இந்த மீள்குடியேற்றத்தை தடுக்க முனைந்தனர்.மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேசத்தில் மறிச்சுக்கட்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களை அங்கு மீள்குடியேற்றம் செய்ய ,தேவையான காணிகளை உரிய முறையில் அரசாங்கத்தின் சட்ட வரையறைக்குள் நின்று பெற்றுக் கொடுக்க முற்பட்ட போது,பொதுபலசேனா அமைப்பினர் இங்கு வந்து தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவித்து அந்த காணிகளை மக்களுக்கு வழங்குவதில் தடையினை ஏற்படுத்தியுள்ளனர்.இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கௌரவ தலைவர் அவர்களே,
அதே போல் முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழ்ந்த மக்கள் இடம் பெயர்வின் பின்னர் அங்கு குடியேற வந்த போது,அங்கும் காணிகளை வழங்குவதில் தடைகள் ஏற்படுத்தப்பட்டன.இற்றைக்கு 22 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர்களே இவ்வாறு இங்கு வந்தனர்.சுமார் 1500 குடும்பங்கள் இன்னும் காணிகளின்றி அவதிப்படுகின்றனர்.காணிகளை பெறுவதற்காக அலைந்து திரிகின்றனர்.அரசாங்க அதிகாரிகள் இந்த காணிகளை அடையாளப்படுத்திய போதும்,அதனை வழங்கவிடாமல் சிலர் தடுத்து வருகின்றனர்.இந்த சபையில் நான் கௌரவமாக வேண்டிக் கொள்வது ,கௌரவ முதலமைச்சர் அவர்களும்,ஏனைய சக மாகாண சபை உறுப்பினர்களும்,இந்த மக்களது காணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.இந்த முல்லைத்தீவு காணி தொடர்பில் சிலர் கடுமையாக செயற்பட்டனர்,மக்களுக்கு இந்த காணிகள் செல்லக் கூடாது என்பதில்,அது போல் சில ஊடகங்களும் இது தொடர்பில் கடும் போக்குடன் செயற்பட்டதையும் எம்மால் காணமுடிந்தது.
அதே போல் கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைப் புறத்தில் வாழ்ந்த முஸ்லிம்களின் காணிகள் வேறு தேவைகளுக்காக எடுக்கப்பட்டன.இங்கு வாழ்ந்த 250 குடும்பங்களையும்,முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுச் சுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் மீள்குடியேற்றம் செய்ய தேவையான காணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்ட போதிலும்,இன்னும் அவைகள் வழங்கப்படாமல் இருக்கின்றன.மாவட்ட செயலாளர்கள் உரிய ஆவனங்களை தயார்படுத்திய போதிலும் ஏன் இந்த தாமதம் என்று அறிந்து கொள்ளமுடியாமல் உள்ளது.இது தொடர்பில் கௌரவ முதலமைச்சரும்,முல்லைத்தீவு மாவட்ட சக மாகாண சபை உறுப்பினர்களும் ஒன்றினைந்து இந்த காணிகளை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியதையும் இந்த சபையில் தெரிவித்துக்கொள்ள விரும்பகின்றேன்.
அவைத் தலைவர் அவர்களே,
யாழ்ப்பாணம் என்பது அனைத்து சமூகங்களும் ஒற்றுமையாக வாழ்ந்த பிரதேசமாகும்.குறிப்பாக 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான முஸ்லிம் குடும்பங்கள் இங்கு வாழ்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.ஆனால் இன்று அம்மக்கள் இங்கு வந்த போது காணிகளும்,கட்டிடங்களும் இல்லாத நிலை காணப்படுகின்றது.தற்போது 500 குடும்பங்கள் மட்டுமே இங்கு வாழ்கின்றனர்.இவர்களும் அடிப்படை வசதிகளின்றி,நெருக்கமான இடத்தில் வசிக்கின்றனர்.இதனால் பல்வேறு சமூக பிரச்சினைகள் ஏற்பட இடமுண்டு.இருந்த போதும்,யாழ் நகரில் அரச காணிகள் அடையாளப்படுத்தப்படுவதில் சிக்கல்கள் உள்ளதையும்,நாம் அறிவோம்.இருந்த போதும்,அடையாளப்படுத்தப்படும் அரச காணிகளில் முன்னுரிமையடிப்படையில் இந்த முஸ்லிம் மக்களுக்கும் இடங்களை வழங்க கௌரவ முதலமைச்சர் அவர்களும்,சக உறுப்பினர்களும் உதவிகள் செய்ய வேண்டும்.
நான் பிரதி நிதித்துவப்படுத்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியானது தமிழ்,முஸ்லிம் மக்களது உரிமைகளை வென்றெடுக்கும் ஒரு பலமாகும்.எமது வடமாகாணத்தில் வாழும் சகல சமூகங்களினதும் ஒற்றுமையின் மூலம் இன நல்லுறவையும்,மக்களது அபிவிருத்தியினையும் உருவாக்கும் பாதையில் அது பயணித்துக் கொண்டிருக்கின்றது.எமது மக்களின் தேவைகைளை நாம் ஒன்றுபட்டு பெற்றுக் கொடுப்போம்.அதற்காகத்தான் மக்கள் எமக்கு வாக்களித்துள்ளார்கள் என்பதை இந்த சபையில் தெரிவித்து,எனக்கும் சந்தரப்பம் வழங்கிய அவைத் தலைவர் அவர்களுக்கு மீண்டும் எனது நன்றியினை தெரிவித்து விடை பெறுகின்றேன்.
வடமாகாண சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வியாழக்கிழமை மாகாண சபை அமர்வின் போது ஆற்றிய உரையின் தொகுப்பு
Reviewed by NEWMANNAR
on
October 10, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 10, 2014
Rating:


No comments:
Post a Comment