ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: பேரறிவாளனின் தாய் பேட்டி
மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும். இவ்வாறு முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் தெரிவித்தார்.
இலங்கையில் தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து, அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று மீனவர்களும், அரசியல் கட்சி பிரமுகர்களும் தொடர்ந்து ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மண்டபம் யூனியன் மீனவர் கூட்டமைப்பு சார்பில் தலைவர் பூரணி தலைமையில் தங்கச்சிமடம் சர்ச் பகுதியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வலசை தெரு ஆட்டோ நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய மகளிர் மீனவர் கூட்டமைப்பு தலைவர் இருதயமேரி, ராஜேஷ்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தங்கச்சிமடம் ஊராட்சி தலைவர் ஞானசீலன், பாம்பன் ஊராட்சி தலைவர் பேட்ரிக், மீனவ சங்க தலைவர் சேசு, எமரிட், போஸ், சகாயம் உள்பட 100–க்கும் மேற்பட்ட மீனவர்களும், மீனவர்களின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
இதில் 5 மீனவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் கலந்து கொண்டார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
உலகம் முழுவதுமே தமிழர்கள் ஆங்காங்கே நசுக்கப்பட்டு வருகின்றனர். அப்பாவி மீனவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது கண்டனத்துக்கு உரியது.
எனது மகனுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையில் இருந்து விடுவிக்க ஒரு குழுவாக ஒன்று சேர்ந்து எதிர்த்து போராடி வருகிறோம்.
அப்பாவி தமிழர்கள் தான் இதுபோன்ற தண்டனைக்கு ஆளாகிறார்கள்.
எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு உடனடியாக 5 மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களை மீட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஐந்து மீனவர்களின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும்: பேரறிவாளனின் தாய் பேட்டி
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 11, 2014
Rating:


No comments:
Post a Comment