மன்னார் பஸார் பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் தளங்களை உடைக்கும் நடவடிக்கை வர்த்தகர்களின் எதிர்ப்பால் தோல்வி.-Photos
மன்னார் அரச பேரூந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் பல மன்னார் நகர சபையின் அனுமதியின்றி பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் 'தளங்களை' உடைக்க மன்னார் நகர சபை இன்று (24-11-2014) திங்கட்கிழமை மேற்கொண்ட முயற்சி வர்த்தகர்களின் பலத்த எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,,,,
மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் பல பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.ஒரு வர்த்தக நிலையம் சுமார் 18 அடி நீளம் கொண்டதாக காணப்படுகின்றது.
குறித்த அளவுத்திட்டத்திற்கு மாத்திரமே மன்னார் நகர சபை அனுமதி வளங்கியுள்ளது.
ஆனால் பஸார் பகுதியில் உள்ள பல வர்த்தக நிலையங்கள் பெரிதாக்கப்பட்டுள்ளது.மேலதிகமாக 18 அடி நீளம் வரை அனுமதியின்றி வர்த்தக நிலையங்கள் பெரிதாக்கப்பட்டுள்ளது.இதனால் பாதசாரிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளனர்.
சட்டவிரோதமான முறையில் வர்த்தக நிலையங்களை விரிவு படுத்திய வர்த்தகர்கள் மன்னார் நகர சபைக்கு அழைக்கப்பட்டு இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியதோடு சட்டவிரோதமான முறையில் மேலதிகமாக பிடிக்கப்பட்ட இடங்களை கைவிட்டு ஒதுக்கப்பட்ட அளவில் வர்த்தக நிலைய நடவடிக்கைகளை மேற்கொள்ள மன்னார் நகர சபை உரிய வர்த்தகர்களுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் வர்த்தகர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட அளவை விட மேலதிகமாக பிடிக்கப்பட்ட பகுதியை விட மறுப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில் மன்னார் நகர சபை அனுமதி இன்றி அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் தளத்தை முதற்கட்டமாக உடைக்க மன்னார் பஸார் பகுதிக்குள் இன்று திங்கட்கிழமை காலை மன்னார் நகர சபை அதிகாரிகள் சென்றனர்.
எனினும் ஒன்று திரண்ட வர்த்தகர்கள் வர்த்தக நிலையங்களின் தளத்தை உடைக்க அனுமதி வழங்கவில்லை.இதனால் நீண்ட நேரம் பஸார் பகுதியில் சற்று பதற்ற நிலை ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் வருகை தந்து வர்த்தகர்கள் மற்றும் நகர சபை அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
நகர சபை அதிகாரிகள் வர்த்தக நிலையத்தின் தளத்தை அகற்ற கொண்டு வந்த 'பெக்கோ' வாகனத்தை சுற்றி வர்த்தகர்கள் குவிந்தனர்.நீண்ட நேரத்தின் பின் மன்னார் நகர சபை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைளையும் மேற்கொள்ளாத நிலையில் அவ்விடத்தை விட்டுச் சென்றனர்.மன்னார் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று பிறிதொரு தினத்தில் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மன்னார் நகர சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மன்னார் பஸார் பகுதியில் பாதசாரிகளுக்கு இடையூறை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் தளங்களை உடைக்கும் நடவடிக்கை வர்த்தகர்களின் எதிர்ப்பால் தோல்வி.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 24, 2014
Rating:

No comments:
Post a Comment