சுற்றுச் சூழல் மாசடைவதால் பலவித நோய்களால் மக்கள் பாதிப்பு: வடமாகாண முதலமைச்சர்
சுற்றுச் சூழல் மாசடைந்துள்ள எமது பிராந்தியத்தில் மக்கள் பலவித நோய்களால் பாதிப்படைந்து வருவது கண் கூடாகத் தெரிகின்றதென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாம் எமது பேராசையின் நிமித்தமே இப்பேர்ப்பட்ட சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் இத் தருணத்தில் நாம் மறக்கக் கூடாது. விவசாய செய்கையில் கிருமிகளைக் கொல்ல எத்தனிக்கும் நாங்கள், முன்னேற்றம் காணச் செயற்கை உரத்தைப் பாவிக்க எத்தனிக்கும் நாங்கள், எம்மை மரணத்தை நோக்கி வரைவாகச் செல்ல உதவி புரிகின்றோம்.
வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரத்தம் சுத்தீகரிக்கும் நிலையத்தின் திறப்பு விழாவில் இன்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், வடமாகாண சுகாதார அமைச்சர் அவர்களின் சிந்தனையில் சிதறி எழுந்து மத்திய சுகாதார அமைச்சின் நிதிப்பங்களிப்புடன் இந்த இரத்தமாற்று சிகிச்சை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ 8.5 மில்லியன் செலவில் கட்டப்பட்டுள்ள இந்த நிலையத்தில் ஒரே தடவையில் 06 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கக்கூடிய வசதிகள் உள்ளது.
அண்மைய சுகாதார திணைக்களத்தின் ஆய்வு அறிக்கையின் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வது கண்டறியப்பட்டுள்ளது. தற்போது உலகில் தொற்றும் நோய்களால் (Communicable Disease) இறப்பவர்களைவிட தொற்றாத (Non-Communicable Disease) நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாகும்.
சிறுநீரக பாதிப்பு ஏற்படுவதற்கு பலகாரணங்கள் சொல்லப்பட்டாலும் இதுவரை உறுதியான முடிவேதும் மருத்துவ ஆராய்ச்சியில் கண்டறியப்படவில்லை. எனினும் விவாசாய செய்கையில் கிருமிநாசினி பாவனை, செயற்கை உரப்பாவனை, குடிநீரிலுள்ள பாரலோகங்கள் போன்றவை இந்நோய் ஏற்படக் காரணமென எதிர்வு கூறப்படுகின்றது.
கிரேக்க மொழியில் இருந்து வந்த சொல்லே DIALYSIS என்பது Dia என்றால் “ஊடாக” என்று பொருள்படும். லத்தீனில் “வியா” என்றாலும் அதே கருத்துத் தான். டுலளளை என்றால் தளர்த்துதல். எனவே தளர்த்துதல் அல்லது சுத்திகரிப்பு ஊடாக நீக்குதல் என்று DIALYSIS என்பது பொருள்படும். இரத்தத்தில் இருக்கும் கழிவுப் பொருட்களையும் தேவைக்கதிகமான நீரையும் வெளியேற்றி சிறுநீரகம் செய்ய வேண்டிய இயற்கையான தொழிலை செயற்கையாகச் செய்வதே Dialysis என்பது.
பாதிக்கப்பட்ட சிறுநீரகம் தனது செயற்பாடுகளைச் செவ்வனே செய்யாது விடுவதால் அதன் ஒரு செயற்பாட்டை இந்தக் கருவி செய்கின்றது. சிறுநீரகம் அல்லது கிட்னி என்பன எங்கள் உடல்களில் கணிசமான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளன. சுகமான, சுகாதாரமான ஒருவரின் உடலில் அது நீருக்கும் கனிப்பொருட்களுக்கும் இடையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த உதவுகின்றது. வெயர்வையின் ஊடாக வெளியேற்ற முடியாத சில நச்சுப் பொருட்களைக் கூட சிறுநீரகம் வெளியேற்ற உதவி புரிகின்றது. இரத்த உருவாக்கம், எலும்புகளின் சுகாதாரம் பற்றியும் சிறுநீரகம் கவனம் செலுத்துகின்றது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழல் மாசடைந்துள்ள எமது பிராந்தியத்தில் மக்கள் பலவித நோய்களால் பாதிப்படைந்து வருவது கண் கூடாகத் தெரிகின்றது.
நாம் எமது பேராசையின் நிமித்தமே இப்பேர்ப்பட்ட சூழல் மாசடைவுகளை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் இத் தருணத்தில் நாம் மறக்கக் கூடாது. விவசாய செய்கையில் கிருமிகளைக் கொல்ல எத்தனிக்கும் நாங்கள், முன்னேற்றம் காணச் செயற்கை உரத்தைப் பாவிக்க எத்தனிக்கும் நாங்கள், எம்மை மரணத்தை நோக்கி வரைவாகச் செல்ல உதவி புரிகின்றோம் என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை.
பல வருடங்களுக்கு முன்னர் முன்னைய ஜனாதிபதி திருமதி சந்திரிக்கா பண்டாரநாயக்காவுடன் அளவளாவிக் கொண்டிருக்கையில் அவர் தாம் இயற்கை உரத்தைத் தயாரிப்பதற்கு வேண்டிய வழிமுறைகளைக் கையாளப் போவதாகவும், இயற்கை உரத்தில் பயிர் வளர்த்த மரக்கறி வகைகளைச் சிறப்பாகச் சந்தைப்படுத்தப் போவதாகவும் எனக்கு அறிவித்தார். அது நடைமுறைப்படுத்தப்பட்டதோ நான் அறியேன். ஆனால் நாம் எமது நன்மைக்காக இயற்கை வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டிய ஒரு கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளோம் என்பதை எம் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நான் விஞ்ஞானியும் அல்ல் வைத்திய கலாநிதியும் அல்ல. ஆனால் பொது மக்கள் என்ற விதத்தில் நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தாய் போன்ற, அன்னை போன்ற எமது நிலமானது எத்தகைய பாதிப்புக்களுக்குப் போரின் போதும் தற்போதும் உள்ளாகியுள்ளது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். வெடிகுண்டுகளும் நச்சுப் புகைகளும் எமது சுற்றுச் சூழலையும் நலத்தையும் பாதித்தன. உடனே நல்ல அறுவடையைப் பெற வேண்டும் என்பதால் நிலத்தில் நஞ்சுகளைப் பாய்ச்சினோம். அவை யாவும் கீழே சென்று அடி மட்ட நீரில்ச் சேர்ந்து கடைசியாக நாம் அருந்தும் நீரையே மாசுபடுத்துகின்றன. நோய்களுக்கு நாம் சிகிச்சைகள் தேடும் அதே வேளையில் நாம் இதுகாறும் இழைத்த பிழைகளை இனியும் இயற்றாது இயற்கையோடு ஒன்றி வாழும் ஒரு வாழ்க்கை நிலையை அனுசரிக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் உள்ளோம் என்பதை மறக்க வேண்டாம்.
2011 ஆண்டில் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419 ஆகும். இவர்களில் 34 பேர் இந்நோயினால் மரணத்தை தழுவியுள்ளனர். 2012 இல் 425 ஆகவும், 2013இல் 430 ஆகவுள்ள பாதிக்கப்பட்டவர்களின் தொகை இந்த ஆண்டின் 3ஆம் காலாண்டில் 443ஐ தாண்டியுள்ளது.
எனவே எமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏற்படுத்தாவிட்டால் சிறுநீரக நோயினால் பாதிக்கப்படப் போகும் நோயாளிகளின் தொகை மீண்டும் உயரக் கூடும் என்பதை எம் மக்கள் மனதில் இருத்திக் கொள்ள வேண்டும்.
தற்போது வடமாகாணத்தில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மட்டுமே இந்த சிகிச்சை பிரிவு இயங்குகின்றது. இதனைவிட கண்டி, அனுராதபுரம், கொழும்பு மாவட்டத்திலேயே இதற்கான சிகிச்சையை எமது மக்கள் பெறவேண்டிய நிலையுள்ளது. இதற்காக போக்குவரத்து மற்றும் ஏனைய செலவீனங்கள் அவர்களிற்கு ஏற்படுகின்றது. அந்தவகையில் இவ்வாறான சிகிச்சை நிலையம் வவுனியா மாவட்டத்தில் ஆரம்பிக்கப்படுவது வவுனியா மாவட்டத்திற்கு மட்டுமன்றி அதனைச்சூழவுள்ள குறிப்பாக மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ளவர்களுக்கும் உதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
நாம் உங்களுக்குச் சிகிச்சையை வழங்கும் அதே நேரத்தில் மக்களாகிய நீங்கள் நோயில் இருந்த விடுபடக் கூடிய வகைகளை தெரிந்து வைத்து முன்னேற முன்வர வேண்டும்.
எமது வடமாகாணம் இதுகாறும் பாதிப்புற்றவாறு இனியும் பாதிப்புக்குள்ளாக விடக் கூடாது. எமது பிழையான நடத்தைகளை, வழிமுறைகளை, சிந்தனைகளை மாற்ற நாம் முன்வர வேண்டும். எம்மை அழிக்கப் பலவித சதிவேலைகள் திரை மறைவில் நடக்கின்றன என்பதை அறியாத நிலையில் எம்மக்கள் வாழ்வதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கின்றது. நீரிலே எண்ணெய். நிலத்திலே நச்சு, பாரிலே பாவையர் பரிதவிப்பு, போதைப் பொருட் பாவனையில் ஏற்றம் - இவையெல்லாம் தற்செயலாக நடக்கின்றன என்பதை என்னால் ஏற்க முடியாது இருக்கிறது.
மக்கள் தங்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும். எமது வருங்காலச் சந்ததியினர் சுகத்தோடு வாழ நாம் இன்றே சுற்றுச் சூழல் மாசுக்களைத் தவிர்க்க வேண்டும். தகாத வாழ் முறைகளைத் தடை செய்ய வேண்டும். அதற்கு உங்கள் யாவரதும் ஒத்துழைப்பு அவசியம் என்று கூறிக் கொண்டு என்னை அழைத்தமைக்கு அமைச்சருக்கு நன்றியை நவின்று விடைபெற்றுக் கொள்கின்றேன்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszCTaKZiw3.html#sthash.WLXW5ODB.dpuf
சுற்றுச் சூழல் மாசடைவதால் பலவித நோய்களால் மக்கள் பாதிப்பு: வடமாகாண முதலமைச்சர்
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
December 07, 2014
Rating:


No comments:
Post a Comment