மன்னார் பேசாலையில் தொடரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க பொலிஸாருடன் இணைந்து இளைஞர்களும் ரோந்து.
மன்னார் பேசாலைப் பகுதியில் நிலவிவரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்கும் முகமாக பேசாலை இளைஞர்களைக் கொண்ட குழுக்கள் பொலிஸாருடன் இணைந்து இரவில் விசேட ரோர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் பிரிமூஸ் சிராய்வா தெரிவித்தார்.
பொலிஸ் - பொதுமக்களுக்கிடையே இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக பேசாலை பகுதியில் திருட்டுச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சம் காணப்படுகின்றது.
இவ் விடயமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பேசாலை பங்கு தந்தை அருட்தந்தை எஸ்.வி.அவுதப்பர் அடிகளார் தலைமையில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலய மண்டபத்தில் பொலிஸ் பொதுமக்களுக்கான விசேட பொதுக் கூட்டம் ஒன்று இடம் பெற்றது.
இந்தக் கூட்டத்தில் பேசாலை பொலிஸ் சாவடி பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.றிஸ்வி, இன்ஸ்பெக்டர் கே.ஜெயரூபன், வட மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிறிமூஸ் சிராய்வா, மன்னார் பிரதேச சபை தவிசாளர் எஸ்.மாட்டீன் டயஸ் உட்பட அதிகமானவர்கள் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டதாவது:- பேசாலை பகுதியில் அண்மைக் காலமாக பெருந் திருட்டுக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதை நிறுத்துவதற்கான உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டிய அவசியம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக பொலிஸ் அதிகாரி கருத்துத் தெரிவிக்கையில் -
பேசாலை ஒரு பரந்த கிராமமாகும். இங்குள்ள பொலிஸ் சாவடியில் இப்பகுதிக்கேற்றவாறு பொலிஸ் ஆளணி மிகவும் பற்றாக் குறையாக இருக்கின்றது.
அடுத்து இப் பகுதியில் பல வீதிகள் சந்திகள் இருக்கின்றபோதும் பெரும்பாலான இடங்கள் இருள் மயமாகவே காட்சி அளிக்கின்றன. இது திருடர்களுக்கு சாதகமாக காணப்படுகின்றது.
ஆகவே முதலில் இருள்சூழ்துள்ள இடங்களில் மன்னார் பிரதேச சபை தெரு வெளிச்சம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடுத்து இப்பகுதியில் பொலிஸ் ஆளணி பற்றாக்குறையாக இருப்பதால் இப்பகுதி மக்களும் பொலிஸாருடன் இணைந்து செயற்பட வேண்டிய அவசியம் உண்டு எனத் தெரிவித்தனர்.
இப்பகுதியில் வெளி இடங்களைச் சார்ந்தவர்களே இங்கு வந்து திருட்டுக்களில் ஈடுபடுவது அண்மைக் காலமாக பொலிஸாரால் கண்டுப்பிடிக்கப்பட்ட திருட்டுச் சம்பவங்களிலிருந்து தெரியவருகிறது.
ஆகவே இங்குள்ள இளைஞர்கள் குழுக்களாகப் பிரிந்து நாளாந்தம் சுழற்சி முறையில் பொலிஸாருடன் இணைந்து இரவில் இந்தப் பகுதியில் ரோந்து செல்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.என அவர் தெரிவித்தார்.
மன்னார் பேசாலையில் தொடரும் திருட்டுச் சம்பவங்களை தடுக்க பொலிஸாருடன் இணைந்து இளைஞர்களும் ரோந்து.
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
January 01, 2015
Rating:


No comments:
Post a Comment