சிங்கள மொழியில் மாத்திரம் பெயர்ப்பலகைகள்:வேலாயுதம் கண்டனம்
சிங்கள மொழியில் மாத்திரம் பெயர் பலகைகள் காணப்படுவது கண்டிக்கத்தக்கதாகும். அரசின் மும்மொழிக் கொள்கைக்கு சம அந்தஸ்து வழங்க அனைத்து தரப்பினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் தெரிவித்தார்.
'அரசாங்கத்தின் நூறு நாட்கள் திட்டத்தின் கீழ், சில வாரங்களாக ஊவா மாகாண தமிழ் கல்வியமைச்சினால் பாடசாலை கட்டட திறப்பு விழாக்களும் அடிக்கல் நாட்டு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இது பாராட்டுக்குரிய விடயமாகும்.
ஆனால், புதிததாக திரைநீக்கம் செய்யப்படுகின்ற பெயர்ப் பலகைகள் அனைத்தும் தனிச் சிங்கள மொழியில் மாத்திரமே அமைந்திருப்பது மிகவும் வருந்தத்தக்கதும் கண்டிக்கத்தக்கதுமான விடயமாகும்' எனவும் அவர் கூறினார்.
ஹபுத்தளை, தங்கமலைத் தோட்டத்தில் நேற்று புதன்கிழமை (18) நடைபெற்ற வரவேற்பு நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ''கடந்த காலத்தில், ஊவா மாகாண சபையிலிருந்து இல்லாதொழிக்கப்பட்ட தமிழ்க் கல்வி அமைச்சு, இம்முறை புதிய மாகாண சபை ஆட்சி மாற்றத்தினூடாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மகிச்சிக்குரிய விடயமாகும். ஊவாவை தொடர்ந்து மத்திய மாகாண சபையிலும் தமிழ்க் கல்வி அமைச்சு மீண்டும் எற்படுத்தப்பட்டு தமிழர் ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதற்காக மத்திய மற்றும் ஊவா மாகாண முதலமைச்சர்களுக்கு எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆனால், மாகாணசபைகளில் தமிழ்க் கல்வி அமைச்சுக்களை ஏற்படுத்துவதனால் மட்டும் தமிழ்க் கல்வி வளர்ச்சியடையாது.
தமிழ்மொழி பேசும் அமைச்சர்களின் கீழ் இயங்கும் தமிழ்மொழி மூல பாடசாலைகளின் பெயர்ப் பலகைகள், சிங்கள மொழியில் மாத்திரம் காணப்படுவது ஏற்புடையதல்ல. புதிய நல்லாட்சியில், அரசின் மும்மொழி கொள்கைக்கும் சம அந்தஸ்து வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், உள்ளூராட்சிமன்றங்கள், மாகாணசபை உட்பட சகல மட்டத்திலும் உள்ள மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் அனைவரும் பொறுப்புணர்வோடு செயற்பட வேண்டும்.
தனியாக தமிழ்க் கல்வி அமைச்சுக்களை மாகாண சபைகளிலே ஏற்படுத்துவதன் நோக்கம் பூரணமாக எட்டப்பட வேண்டும்.
தமிழ் பாடசாலைகளில் மாத்திரமன்றி ஏனைய துறைகளிலும் நிறுவனங்களிலும் மும்மொழிகளிலும் பெயர்ப் பலகைகள் காட்சிப்படுத்தபட வேண்டும். நீண்ட காலமாக போராடிப் பெற்ற எமது உரிமைகளை நாமே இழப்பதற்கு காரணமாக இவ்வாறான சம்பவங்கள் அமைந்து விடக்கூடாது' என்று அமைச்சர் மேலும் வலியுறுத்தினார்.
சிங்கள மொழியில் மாத்திரம் பெயர்ப்பலகைகள்:வேலாயுதம் கண்டனம்
Reviewed by NEWMANNAR
on
March 19, 2015
Rating:

No comments:
Post a Comment