மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீள்குடியேற்றவும்
மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்து இன்று வரை இடம்பெயர்ந்து வாழும் 77 குடும்பங்களை உடனடியாக மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அத்தோடு யாழ்ப்பாணம் வலிகாமத்தில் நிலக்கீழ் அசுத்த நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதென்றும் அதிகாரிகளிடம் ஜனாதிபதி விளக்கம் கோரியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று திங்கட் கிழமை மாலை ஜனாதிபதி செயலகத்தில் கூடிய தேசிய அனர்த்த முகாமைத்துவ சபைக் கூட்டத்தின் போதே ஜனாதிபதி இவ் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இக் கூட்டத்தில் ஜனாதிபதி மேலும் கருத்து தெரிவித்ததாவது,
மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை மீள்குடியேற்ற உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இதனால் 77 குடும்பங்கள் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். இவர்களுக்கு உடனடியாக வீடுகளை அமைத்து கொடுக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதன்போது இதற்கான காணிகள் அடையாளம் கண்டிருப்பதாகவும் வீடுகளை அமைத்து கொள்வதற்கு நிதியை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இச் சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி தொலைபேசி மூலம் நிதியமைச்சரின் செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
அத்தோடு எதிர் வரும் 14 ஆம் திகதி மீரியபெத்த பிரதேசத்திற்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் தலைமையில் குழு அங்கு சென்று அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு அனர்த்த முகாமைத்துவ தேசிய சபை இன்றே கூடியுள்ளது. இது கவலைக்குரிய விடயமாகுமென்றும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி மண்சரிவு ஏற்படுவது தொடர்பில் ஆராய்ந்து அதனை தடுப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்துமாறும் ஜனாதிபதி இதன்போது உத்தரவிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வலிகாமம் பிரதேசத்தில் நிலத்திற்கு கீழான அசுத்த நீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கேட்டறிந்ததோடு மக்களின் பிரச்சினைகளின்போதும் மத்திய அரசு மாகாண அரசு என பிரிந்திருக்காது இணைந்து செயற்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது கோரிக்கை விடுத்தார்.
இக் கூட்டத்தில் அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க, ரவி கருணாநாயக்க, மங்கள சமரவீர, ரவூப்ஹக்கீம், மஹிந்த அமரவீர மற்றும் பலரும் ஜனாதிபதி செயலாளரும் கலந்து கொண்டனர்.
மீரியபெத்தையில் பாதிக்கப்பட்ட மக்களை உடனடியாக மீள்குடியேற்றவும்
Reviewed by Author
on
May 12, 2015
Rating:

No comments:
Post a Comment