எடுப்பான தொடக்கமும் மிடுக்கான ஓட்டமும் மனத்தில் நிற்கும் முடிவுமே ஒரு நல்ல சிறுகதையின் அங்கங்கள் - தமிழ் நேசன் அடிகளார்.-Mannar
எடுப்பான தொடக்கம், மிடுக்கான ஓட்டம், மனத்தில் நிற்கும் முடிவு ஆகியவை ஒரு நல்ல சிறுகதைக்கு எப்போதும் அங்கங்களாக விளங்குபவை என அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார். இம்மாதம் 4ஆம் திகதி (04.05.2015) மன்னார் கலையருவி நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ‘துறையூரான்’ என்ற புனைபெயரைக் கொண்ட திரு. எம். சிவானந்தன் அவர்களின் ‘குறை ஒன்றும் இல்லை’ என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவிற்குத் தலைமைதாங்கி உரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் மறைமாவட்டத்தின் சமூகத்தொடர்பு அருட்பணி மையமான கலையருவியின் இயக்குனரும் மன்னார் தமிழ்ச் சங்கத்தின் தலைவரும், மன்னா என்ற கத்தோலிக்க பத்திரிகையின் ஆசிரியருமான அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றும்போது கூறியதாவது,
சிறுகதையானது பல வகைகளில் விளக்கப்படுகின்றது. “வாழ்க்கையின் சாளரம்” என்றும், “ஒரு சாவித்துளையின் வாயிலாகப் பரந்த ஓர் அறையைப் பார்ப்பது போன்றது” என்றும், “ஒரு மின்னல் வெட்டுப் போன்றது” என்றும், “ஒரு நூறு மீட்டர் ஓட்டத்தை ஒத்தது” என்றும் சிறுகதையை விளக்குவர். சிறுகதைகள் எப்படி இருக்கவேண்டும் என்று கூறவரும் மேல்நாட்டு இலக்கியத் திறனாய்வாளர்கள், “சிறுகதைகள் குதிரைப் பந்தயம்போல் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல் வேண்டும்” என்றும், “சிறுகதைகள் ஒரு தடவை உட்கார்ந்து வாசிக்கக்கூடிய ஒரு தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்றும் கூறியுள்ளனர்.
மன்னார் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளராக விளங்கும் திரு. சிவானந்தன் அவர்கள் சிறந்த ஒரு கல்வியாளர், சமூகப் பகுப்பாய்வாளர், மதங்களைக் கடந்து சிந்திக்கும் மனிதாபிமானவாதி, பகுத்தறிவாளர், யதார்த்தவாதி. இத்தகைய சிறப்புக்களைக் கொண்ட இவர் தனது எண்ணங்களை, சிந்தனைகளை சமூகத்திற்கு வழங்க தேர்ந்துகொண்ட ஊடகம் இலக்கியம் ஆகும். ‘மௌனப் பார்வை’ என்ற குறுநாவல் வழியாக ஏற்கனவே இலக்கிய உலகில் தன்னை வெளிப்படுத்திய சிவானந்தன் தற்போது தனது சிறுகதைகள் வழியாக மீண்டும் நம்மோடு பேசுகின்றார். ஈழத்துப் புனைகதை இலக்கியத்தளத்தில் தடம்பதித்துவரும் இவரின் இலக்கியப் பயணம் தொடரட்டும்.
மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளர் ஜனாப் எம். எம். சியான் அவர்கள் இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார். மன்னார் சைவக் கலை இலக்கிய மன்றத்தின் தலைவர் சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் ஆசியுரை வழங்கினார். தழல் இலக்கிய வட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. மன்னார் அமுதன் அவர்கள் வெளியீட்டுரை நிகழ்த்தினார். நாவலாசிரியர் எஸ். ஏ. உதயா அவர்கள் ஆய்வுரை நிகழ்த்தினார். திருகோணமலையைச் சேர்ந்த திரு. நந்தினி சேவியர், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பண்டிதர் ம. ந. கடம்பேஸ்வரன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
எடுப்பான தொடக்கமும் மிடுக்கான ஓட்டமும் மனத்தில் நிற்கும் முடிவுமே ஒரு நல்ல சிறுகதையின் அங்கங்கள் - தமிழ் நேசன் அடிகளார்.-Mannar
Reviewed by NEWMANNAR
on
May 08, 2015
Rating:

No comments:
Post a Comment