சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாடு திரும்பிய குடும்பஸ்தர் விளக்கமறியல் வைப்பு
இலங்கையில் இருந்து இடம் பெயர்ந்து இந்தியா சென்று மீண்டும் இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக இலங்கை வந்த மன்னார் தலைமன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் அலெக்ராஜா ஆசிர்வதாம் நேற்று(7) வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,,,,
இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து சென்ற தலைமன்னாரைச் சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவர் மீண்டும் தனது சொந்த இடமான தலைமன்னார் பியர் பகுதிக்கு கடல் மார்க்கமாக பாக்கு நீரிணை வழியாக சட்டவிரோதமாக இந்திய மீனவர்களின் உதவியுடன் வருகை தந்துள்ளார்.
தலைமன்னார் பியரைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான குறித்த குடும்பஸ்தரே கடந்த ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி இராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னாருக்கு இந்திய படகு ஒன்றில் வந்துள்ளார்.
தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையிலுள்ள தீடை என அழைக்கப்படும் மண் திட்டியில் இந்திய மீனவர்களினால் விடப்பட்டுச் சென்ற நிலையில் அநாதரவாக நின்ற சமயம் தலைமன்னார் பகுதி மீனவர்களால் காப்பாற்றப்பட்டு கடலில் றோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்ட தலைமன்னார் கடற்படையினரிடம் குறித்த நபர் ஒப்படைக்கப்பட்டார்.
சட்டவிரோதமாக நாட்டுக்கு திரும்பியவரையும்,காப்பாற்றிய 3 மீனவர்களையும் கடற்படையினர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து நான்கு பேரையும் பொலிஸார் மன்னார் நீதிமன்றில் நேற்று(7) வியாழக்கிழமை ஆஜர் படுத்தினர்.
குறித்த வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்ஸ்ராஜா ஆசீர்வாதம் சட்டவிரோதமாக நாடு திரும்பிய குடும்பஸ்தரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
மீனவர்கள் மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.
சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக நாடு திரும்பிய குடும்பஸ்தர் விளக்கமறியல் வைப்பு
Reviewed by NEWMANNAR
on
May 08, 2015
Rating:

No comments:
Post a Comment