அண்மைய செய்திகள்

recent
-

எமது ஒற்றுமையால் தேசிய ஐக்கியத்தை பலப்படுத்துவோம்: துரைராஜசிங்கம்


கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையின மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சர்வாதிகாரத்தை வீழ்த்தியதைப் போன்று எதிர்காலத்திலும் எமது ஒற்றுமையால் தேசிய ஐக்கியத்திற்கான பலத்தை நிரூபித்துக்காட்ட வேண்டும் என கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு ஏறாவூர் கூட்டுறவு வைத்தியசாலையில் நடைபெற்ற விஷேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், “நாம் மனச் சாட்சியுடன் செயற்படுவோமானால் பிரிவினைகளையும் தடைகளையும் அறுத்தெறிந்து பல நல்ல விடயங்களை சாதிக்க முடியும். நமது சிறுமைத்தனத்தின் காரணமாக நாம் பல்வேறு சோதனைகளுக்கு முகங்கொடுக்கின்றோம். இனியும் இந்நிலை தொடர நாம் இடமளிக்கக்கூடாது.

இந்த நாட்டில் சுதந்திரம் என்ற வார்த்தை எப்போது பேசப்பட்டதோ அன்றிலிருந்து எமது சுதந்திரம் பறிக்கப்பட்டது. வடக்கில் தந்தை செல்வா கிழக்கில் காரியப்பர், அஷ்ரப் போன்ற பெரியார்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை வலுப்படுத்த மிகவும் பாடுபட்டனர். ஆனால் எங்கிருந்தோ வந்த சிலர் எங்களைப் பிரித்து துயரத்தில் ஆழ்த்தி இழப்புக்களை ஏற்படுத்தி விட்டுச் சென்றுவிட்டனர்.

அவற்றை நாங்கள் அடியோடு மறந்து அவற்றிலிருந்து நல்ல சில விடயங்களை பாடமாக எடுத்துக் கொண்டு அடுத்த ஆக்கபூர்வமான நகர்வுகளுக்கு ஆயத்தமாக வேண்டும். அதுதான் நல்லாட்சியின் பலாபலனாக இருக்கும்.

எமது நாடு பன்மைத்துவமுள்ள நாடு என்பதைக் கேட்க நாம் ஏக்கத்தோடு இருந்தோம் இந்நாடு பெரும்பான்மையின மக்களின் விருப்பப்படி சிறுபான்மை இன மக்கள் வாழ வேண்டும் என்கின்ற அடிமை நாடு அல்ல மாறாக பன்மைத்துவத்தையும் ஒவ்வாரு சமூகத்தாரின் தனித்துவத்தையும் அங்கீகரிக்கின்ற பண்புகளைக் கொண்ட நாடாகும்.

அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்முறை சுதந்திர தின உரையில் தெளிவாக கூறியுள்ளார். நீண்ட காலத்துக்கு பின் இவ்வாறான ஒருநிலை உருவாகியிருப்பதை சகித்துக் கொள்ள முடியாத சில விசமிகள் அதனைக் குழப்ப நினைக்கிறார்கள்.

அனைவரும் ஒன்றிணைந்து சர்வாதிகாரத்தை வீழ்த்தியுள்ளோம் அதேபோன்று எதிர்காலத்திலும் நாம் அவ்வாறானதொரு தேசிய ஐக்கியத்திற்காக எமது பலத்தை நிரூபிக்க வேண்டும். ஒரு மனிதனை மதங்களே மொழிகளே ஒரு போதும் பிரித்துவைப்பதில்லை எங்களுடைய குறுகிய மனப்பாங்குகள் தான் மனிதர்களை பிரித்தாழ்கின்றன” என தெரிவித்தார்.


எமது ஒற்றுமையால் தேசிய ஐக்கியத்தை பலப்படுத்துவோம்: துரைராஜசிங்கம் Reviewed by NEWMANNAR on May 12, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.