தமிழை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்தும் மறையாத மாணிக்கம் மாமனிதர் நாவண்ணன் என்னும் ம.சூசைநாயகம்
மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக மறைந்த மாமனிதர் நாவண்ணன் என்னும் ம.சூசைநாயகம்
மனதில் பிரகாசிக்கும் நாவண்ணன்
மன்னார் இணையத்தின் விம்பம் ஊடாக கவிஞர் சிற்பி பாடலாசிரியர் பத்தி எழுத்தாளர் ஓவியர் நாட்டுப்பற்றாளர் பன்முக ஆளுமையின் மையம் தமிழை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்தும் மறையாத மாணிக்கம் மாமனிதர் நாவண்ணன் என்னும் ம.சூசைநாயகம்
அவர்கனைப்பற்றிய அவரின் உயிர்மூச்சு உள்ள வரை தமிழுக்காக உரைத்த உழைத்த உன்னதரின் நினைவு தொகுப்பு இது…
பெற்ற முதல் பரிசும் இளமைத்துடிப்பும்- 1963 இல் தனது பதினாறாவது வயதில் முதன் முறையாக பத்திரிகை ஒன்றில் கிறிஸ்மஸ் சிறுகதைப்போட்டியில் பங்கு பற்றி “அவரும் ஏழைதானே'' என்ற சிறுகதைக்கு முதற்பரிசைப் பெற்றுக்கொண்டார் அப்போது அவருக்கு கிடைத்த முதல் பரிசு 10.ரூபாய் அந்த நாட்களில் ஓவியம் வரைதலும் மரக்கட்டைகளில் சிற்பங்கள் செதுக்குவதும் பொழுது போக்காக மேற்கொண்டார் இளமைப்பருவத்திலேயே நாடகங்களை எழுதி மேடையேற்றினார் பல நாடகங்களில் நடித்தும் பாடியும் கதாப்பிரசங்கம் வில்லுப்பாட்டு போன்ற நிகழ்வுகளையும் நிகழ்த்தி மன்னார் மண்ணின் கலைக்கு ஒரு ஊன்று கோலாகத் திகழ்ந்தார் மற்றவர்களை ஊக்குவிக்கும் தன்மை கொண்ட இவர் பனங்கட்டுக்கொட்டு கிராமத்தில் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் நோக்குடன் 1969 ஒரு இரவுநேரவகுப்பை நடத்தினார்.
சிற்பக்கலையின் ஆற்றல் வெளிப்பாடு- இவர் கலையுலகில் பன்முககலைஞனாக சிற்பம்-ஓவியம் -நாடகம் என்பவற்றிலும் மிகவும் ஆற்றல் வாய்ந்தவராக காணப்பட்டார் இவரது சிற்பக்கலை ஆற்றல் கண்டு ஊக்குவிக்கு முகமாக 1984 இல் அருட்சகோ.ஹில்லறி அவர்கள் இவரைக் கொண்டு அருட்சகோ.டிலாசாலின் உருவத்தை செய்வித்தார் இது இவரின் சிற்பக்கலையின் முதற் படைப்பு இது இனறும் மன்னாரில் உள்ள மாதாகோவில் வளாகத்தில் காணப்படுகின்றது. மேலும் பல சிசைகள் யாழ்ப்பாணத்திலும் வன்னியிலும் இவர் பெயரைப்பறைசாற்றி நிற்கின்றது. இதுபோன்று தேவைப்பட்டவர்களுக்கு அவர்களது இறந்த உறவினர்களின் உருவங்களையும் தேவைக்கு ஏற்ப சிற்பங்களாகவும் ஓவியங்களாகவும் வரைந்து கொடுத்து தனது திறமையை பறைசாற்றினார் நாடகங்கள் வானொலி நிகழ்ச்சிகள் இசை நாடகங்கள் கவிதா நிகழ்வுகள் கவியரங்கங்கள் மேடைப்பேச்சுக்கள் என்பனவற்றில் மிகவும் ஈடுபாட்டோடு தனது திறமையை வெளிப்படுத்தினார் இக்கலைகள் வெறும் களைகளாக மட்டுமன்றி சமூதாயத்திற்கு தான் சொல்ல வந்த விரும்பிய கருத்துக்களை சற்றும் தயக்கமின்றி துணிவோடு எடுத்துரைக்கும் கருவிகளாகவும் பயன்படுத்தினார்.
இவரது தமிழ் பற்று - சிறுவயதிலே தமிழ் மீது பற்றுக் கொண்டவராக இருந்ததால் தமிழை வளர்ப்பதில் ஆர்வமாக இருந்தார் இக்காலத்தில் பெரும்பாலும் இவரது எழுத்து இவரது தொழிலாகவும் அமைந்தது இவர் மன்னார் மண்ணில் வாழ்ந்தகாலத்தில் உ(ன்)பாதை எனும் நூலையும் அடுத்து இறுதி மூச்சு எனும் நூலையும் வெளியிட்டார் இவரது இன்னும் பல ஆக்கங்கள் வெளியிட முடியாமலும் அச்சேறி பாதியிலே நிறுத்தப்பட்டதுமான துன்பங்கள் அவரது பொருளாதார நிலையால ஏற்பட்டத செல்வம் என்று குடும்பத்தினரால் செல்லமாக அழைக்கப்பட்டிருந்தாலும் அவரது மிகுந்த செல்வம் அவரது கலை மடடுமே.
இவராற்றிய பணி - அருட்சகோதரன் ஹில்லறியின் வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட இவர் மிகுந்த சமயப்பற்றும் தமிழ்பற்றும் பிறரன்புமிக்கவராகவும் திகழ்ந்தார். சுpல காலங்கள் மறையாசிரியராகவும் சுகந்திரன்-புதிய உலகம் போன்றபத்திரிகைகளில் துணையாசிரியராகவும் பணியாற்றினார்.
1988ஆண்டில் யாழ்ப்பாணத்தில் 2ம் குறுக்குத்தெருவில் ஸ்ரீனா அச்சகம் என்ற பெயரில் சொந்தமாக அச்சகம் ஒன்றையும் நடத்தினார்.
இவரது திருமணமும் குடும்பமும் - 1970 ஆண்டு தனது தந்தையின் சகோதரியான லூர்த்தம்மாவுக்கும் இசக்கியேல் செல்லையாவக்கும் பிறந்த ஏழாவது மகளான கபிரியேல் டொலறோஸ் என்பவரை திருமணம் முடித்து இல்லற வாழ்வின் இன்பங்களாக நெலோமி-வேஜின்(ஜீன்) ஷிலாந்தி(ஜெனி) கிங்ஸ்லி உதயணன்(உதயன்) வைற்றஸ் உதயவேணி(வேணி) ஹில்லறி பஸ்ரினா பிள்ளைச்செல்வங்களைப்பெற்றெடுத்தார்.
தனது 16 வயதில் இருந்து எழுத ஆரம்பித்த இவர் மொத்தமாக 15 நூல்களை வெளியீட்டும் இன்னும் 4 நூல்களை எழுதி முடித்தும் வைத்திருந்தார் இவை இலக்கியங்களாகவும் சமயசார்பானவையாகவும் தமிழர் வரலாற்று ஆவணங்களாகவும் அமைந்துள்ளன.
நாவண்ணன் அவர்களால் எழுதி வெளியிட்ட நூல்கள் இவை
உ(ன்)பாதை-1972
இறுதி மூச்சு-நாடகம்-1972
தமிழன் சிந்திய இரத்தம்-1958
இனக்கலவரம் -1976
புத்தளத்தில் இரத்தக்களம்(சிங்-முஸ்லிம்)இனக்கலவரம்-1976
புயணம் தொடர்கின்றது(நாவல்)-1978
நானொருமுற்றுப்புள்ளி(சிறுகதைகள்)-1988
தீபங்கள் எரிகின்றன(தனிமனித வரலாறு)-1988-2ம்பதிப்பு-2004
இத்தாலியன் தந்த இலக்கியத் தேன்-(இலக்கியம்)-1989
கதை-கண்ணீர்-கவிதை-(குறுங்காவியம்)-1992
நினைவாலயம் (குறுநாவல்)-1989 2ம் பதிப்பு 2005
அக்கினிக்கரங்கள்(குறுநாவல்)-1995 2ம் பதிப்பு-2005
பொழிவு(கவிதை)-1994
எத்தனை எத்தனை வித்துக்கள் வீழ்ந்தன-1995
கரும்புலிகாவியம் (பாகம்-1)கவிதை-2002
சுனாமிச்சுவடுகள்(கவிதை)-2005
எழுதிமுடித்தும் வெளிவராத நூல்கள்
வலிகாமம் இருந்து வன்னி வரை-இடப்பெயர்வு அனுபவப்பதிவுகள்
குருதியில் நனைந்த திருவடிகள்-2001ம் ஆண்டு மடுத்திருத்தல அனர்த்தம்
வித்தானகாவியம்(குறுங்காவியம்)
முல்லை அலை விடு தூது-தூதுப்பிரபந்தம் (பரிசு பெற்றது)
இவரை மிகவும் துயரத்தில் ஆழ்த்திய சம்பவங்கள்
இவரது சகோதரன் சுவாமிப்பிள்ளை(நல்லையா)01-01-1990 இல் காலமானார்
இவரது தாயார் பிலோமினம்மா 07-12-1991 இல் காலமானார்
இவரது பேத்தியார் எலிசபேத் 20-01-1992 இல் காலமானார்
இறுதியில் பேரிழப்பாக இவரது மூன்றாவது புதல்வியான ஷிலாந்தி(ஜெனி) 28-03-1993 காலமானார்
இவரது மூத்த சகோதரன் குருசுநாயகம் 13-01-1995 இல் காலமானார்
இவருக்கு அடுத்த பேரிழப்பாக தனது ஒரே மகனான மூத்த மகனையும் மண்ணுக்காக வித்தாக்கினார் மாவீரன் ஆனான்15-05-1997 இல கிங்ஸ்சிலி உதயணன் வீரச்சாவடைந்தான் இப்படியாக பல துயரங்கள் அவரை பின்தொடர்ந்தாலும் இவற்ரையெல்லாம் தாண்டி தமிழுக்குதொண்டாற்றுவதில் தாகத்தோடு செயற்பட்டார் இக்காலப்பகுதியில் இவரது படைப்புக்குள் பெரிதும் தமிழ் மக்களது வாழ்வையும் அவர்களது போராட்டத்தினையும் எடுத்துக்காட்டுவதாகவே அமைந்திருந்தது.
இவரது நாடுகடந்த பணிகள்
2002ம் ஆண்டு யுத்த நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசாங்கத்திற்கும் புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்டபின்பு வடக்குகிழக்கு போக்குவரத்து சீரான நிலைக்கு திரும்பியது அப்பொழுது நீண்ட காலத்திற்குப்பின் தனது பிறந்த மண்ணான மன்னாருக்கு வந்தார் தனது நண்பர்களையும் உறவினர்களையும் சந்தித்து மகிழ்ந்தார்.
2003ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று அங்கும் தமது தமிழ் மணம் பரப்பினார் அப்பொழுது புலம் பெயர்ந்த மக்கள் சிலர் தாம்பட்டு வந்த அவலங்களை கூறி மீண்டும் எழுத வேண்டும் எனக்கேட்டுக்கொண்டனர். ஆவ்வாறே அநீதியை கண்டு கொதிப்பவனாக நீதியையும் கருணையையும் வாழ்த்துபவனாக கோழைத்தனங்களைச் சாடுபவனாக தியாகத்தை வியப்பவனாக சமூதாயத்தை விழிப்படையச் செய்பவனாக தியாகத்தை வியப்பவனாக துவண்டவன் சோகத்தை சுமந்தவனாக துணிந்தவன் வீரத்தினை சுமந்தவனாக தமிழின் வீரத்தினை இனிமையை சுவைத்தவனாக இப்படியாக பல்வேறு வடிவங்களில் சமூகத்தோடு உறவாடியதை யாரும் மறக்கவும் மறுக்கவும் முடியாது.
எப்படி தமிழும் தமிழர்களின் வாழ்வையே தனது சேவையாக பணியாக உயிர்மூச்சாக எண்ணி வாழ்ந்தாரோ அதே போல் தனது பிள்ளைகளையும் மனைவியையும் நேசித்தார் அதற்கு சான்றாக-பிள்ளைகளின் திறன்களை திறமைகளை வழப்படுத்தவும் ஊக்கப்படுத்தினார் அதன்பயனாக 18-06-2005 ம் ஆண்டு இவரது கடைசி மகளான ஸ்ரீனா தனது முதலாவது படைப்பான விழுதுகள் தாங்கும் விருட்சங்கள் எனும் கவிதைத்தொகுப்பை தான் பயின்ற பாடசாலையான மன்னார் அல்-அஸ்ஹார் மகாவித்தியாலயத்தின் வெளியிட்டபோதும் அதன் பின்னர் 04-03-2006 இவரது மூத்த மகள் நெலோமி ஆத்மாவின் ராகங்கள் எனும் தனது முதலாவது கவிதை தொகுப்பை தான் கற்பித்துக்கொண்டு இருக்கும் பாடசாலையான செட்டிகுளம் மகாவித்தியாலயத்தில் வெளியிட்ட போதும் பேருவகையில் மூழ்கிதிழைத்தார் இதன்போது தனது மூத்த மகளுக்கு தனது கையால் பொன்னாடைபோர்த்தி கௌரவித்தார் தன்னைப்போல் தன்பிள்ளைகளும் தமிழுக்கு தொண்டாற்ற வேண்டுமென்பதில் பேரவா கொண்டுவாழ்ந்தார்.
இவரது இறுதித்தினங்கள்
1997ல் தனது மகனின் இறப்போடு ஏற்பட்ட மயக்கத்தில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் பரிசோதனையில் நுரையீரலில் கிருமித்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது 2004 இன் இறுதிப்பகுதியில் கடும் நோய்வாய்ப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அப்போது இவருக்கு சிகிச்சையளித்த வைத்தியகலாநிதி.சுந்தராமன் இவரது ஈரலின் பெரும் பாகம் செயழிழந்து விட்டதாகவும் 20வீதமே செயற்படுவதாகவும் இது இனி குணமாக்கமுடியாது என இவரது மனைவியிடம் தெரிவித்ததர். அது இவருக்கு தெரிவிக்கப்படவில்லை தனக்கு காலம் குறிக்கப்பட்டதை அறியாத இவர் தனது மன உந்துதலோ காலத்தின் உந்துதலோ என்னவோ மிகவும் வேகமாக செயற்பட்டார். இன்னும் பல படைப்புக்கள் வெளியிடவேண்டும்என அலைந்து திரிந்தார் தான் பிறந்த மண்ணுக்கு சேவை செய்யும் நோக்கில் மன்னாரில் வெளிவரும் மாதாந்த வெளியீடான மன்னா பத்திரிகைக்கு வித்தான காவியம் எனும் குறுங்காவியம் எழுதினார்.JRS நிறுவனத்திற்கு நாடகம் பழக்கினார் அக்கினிக்கரங்கள் நூலை 2ம் பதிப்பு 2005 செய்தார் இவற்றுக்கு இவர்பட்ட துன்பங்கள் எண்ணிலடங்கா….
200604-12 சற்று மூச்சு சரமப்பட்டு தொய்வு நோயாளியைப்போல் இருந்தார் இவரின் நிலமையறிந்த மனைவி அப்பல்லோவிற்கு மீண்டும் அழைத்துச்சென்றார் மருத்துவமனையில் இருந்த போது சரியாக மூச்சு விடமுடியாமல் சிரமப்பட்டார் அவ்வேளையிலும் தனது குருதியில் நனைந்த திருவடிகள் நூலை பிழைகளை திருத்திக்கொண்டிருந்ததர் மூச்சிழுப்பின் அதிகமான நிலையிலும் தனது புதல்வியர்களோடும் பால்ய நண்பர்களோடும் நகைச்சுவையாகவும் பகிடியாகவும் உற்சாகமாக பேசினார் அன்று மாலை அவரது உப்பியவயிற்றில் நீர் குத்தியெடுப்பதற்காக வைத்தியசாலையின் பணியாள் அவரை சிகிச்சை அறைக்கு அழைத்துச்சென்றானா…அல்லது அவனது உருவில் எமனின் தூதுவன் அழைத்துச்சென்றான் அந்த சிகிச்சை அறை ஒரு கணம் அசைந்தது அதிர்ந்தது நாவண்மை கொண்டு சுழன்ற சூறாவளி மெல்ல மருதமாகித்தவழ்ந்து வெளியேறியது. இரவும் பகலும் எழுதுகோல் தாங்கி நின்ற கவிஞன் ஆழ்துயிலில் இல்லை மீளாத்துயிலில்
இவ்வுலகில் இறப்பு எல்லோருக்கும் பொதுவானது ஆனால் தன்னுயிரைவிட தமிழையும் தமிழனையும் நேசித்த நாவண்ணணை நாட்கள் தோறும் நினைவில் கொள்வார்கள் தமிழர்கள் .
ஒரு தீராத யாத்திரிகன்
தன்பயணம் முடித்து ஏகினான்
எங்கிருந்து இறங்கி வந்தானோ அங்கேயே மீண்டும் ஐக்கியமானான்.
தொடங்கிய புள்ளிக்கே திரும்பியது
சுழன்றடித்த காற்று
விதியின்கை எழுத்து
இம்மியும் பிசகாது எனும் நம்பிக்கையில்
துயர் அரிப்பின் வலியூடு
கையசைத்து விடை கொடுத்தேன்
ஆயினும் பிரிவின் துயர் தொடர்ந்தும் அழுத்துகின்றது…
பயணி நினைவின் ஒவ்வொரு அசைவிலும்
நாவண்ணன்!
என்னினமே என் சனமே பாடல் வரிகளை உடைத்து உள்ளே போனால்
அங்கே உட்கார்ந்திருப்பான் நாவண்ணன்…
பிரியமானவனே! புரிந்தோம் மீண்டும் சந்திப்போம்
நீ வரமுடியாது என்னிடம்
நான் வரலாமல்லவா உன்னிடம்?
(புதுவை இரத்தினதுரை)
தொகுப்பு
தமிழை உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்து மறைந்தும் மறையாத மாணிக்கம் மாமனிதர் நாவண்ணன் என்னும் ம.சூசைநாயகம்
Reviewed by NEWMANNAR
on
May 10, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
May 10, 2015
Rating:




No comments:
Post a Comment