தேர்தல் முறை மாற்ற யோசனையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிப்பு

சிறுபான்மை தேசிய இனங்களைப் பாதிக் கும் வகையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ள தேர்தல்முறை மாற்ற யோசனையினை உள்ளடக்கிய 20ஆவது திருத்தச் சட்ட மூலத்தினை ஏற்றுக் கொள்ளமுடியாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழர் தாயகங்களான வடக்கு, கிழக்கில் நீண்டகாலமாக நிறைவுறாதிருக்கும் மீள்குடியேற்றம், அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதி அளித்ததன் பிரகாரம் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை எதிர்வரும் 23ஆம் திகதிக்கு முன்பாகவும் நேரில் சந்தித்து வலியுறுத்துவதற்கும் தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சித் தலைவர்கள் செயலாளர்களுக்கிடையிலான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் நேற்றைய தினம் யாழிலுள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராஜா, ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், டெலோ சார்பில் செல்வம் அடைக்கலநாதன், ஹென்றி மகேந்திரன், புளட் சார்பில் த. சித்தார்த்தன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றனர்.
இச்சந்திப்புத் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புதிய அரசாங்கம் ஆட்சிப் பீடத்தில் அமர்வதற்கு தமிழ் மக்களின் ஆணை அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியிருந்தது. இந்நிலையில் புதிய அரசாங்கம் 100 நாள் வேலைத்திட்டத்தை அறிவித்து எமது மக்களின் மீள்குடியேற்றம், நீண்டகாலமாக விசாரணைகளின்றி தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, வாழ்வாதார மேம்பாடு, இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீள வழங்குதல், உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல் உள்ளிட்ட அவசரமாக வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படவேண்டிய செயற்பாடுகளுக்குச் செயல்வடிவம் கொடுப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்கள்.
தற்பொழுது அரசாங்கம் அறிவித்த 100 நாட்களில் அவ்வாறான வாக்குறுதிகள் எவையும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. குறிப்பாக வலிகாமம் வடக்கில் ஆயிரம் ஏக்கர் நிலம் விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டபோதும் குறைவான நிலப்பரப்பே விடுவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வளலாய்ப் பகுதியிலும் குறைந்தளவான காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. சம்பூர் பிரதேசத்தில் காணிகளை வழங்குவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி விடுத்த பின்பும் இன்றுவரை அவை மக்களிடத்தில் கையளிக்கப்படவில்லை. இவ்வாறு வடகிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் திட்டமிடப்பட்டு கபளீகரம் செய்யப்படுவதுடன் உயர் பாதுகாப்பு வலயங்களாகவும் படை முகாம்கள் அமைப்பதற்காகவும் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி இலங்கையின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குப் பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் நாம் பல தடவைகள் கோரியுள்ளோம். இருந்தபோதும் இவர்களின் விடுதலை தொடர்பாக எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
தமிழ் மக்களின் ஆதரவுடன் உருவான அரசாங்கம் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்காததன் காரணத்தால் நாம் ஆழ்ந்த கவலை அடைவதுடன் ஏமாற்றமும் அளிப்பதாக உள்ளது.
ஆகவே இவ்விடயங்கள் தொடர்பில் எமக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைவாக உரிய நடவடிக்கையை உடன் எடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தத் தீர்மானித்துள்ளோம். இச் செயற்பாடு எதிர்வரும் 23 ஆம் திகதிக்கு முன்னதாக கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
20ஆவது திருத்தம்
அரசியலமைப்பில் தேர்தல் முறை மாற்றம் தொடர்பாக கொண்டுவரப்படவுள்ள 20ஆவது திருத்தச் சட்டமூலத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன் பிரகாரம் தற்போதுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 225 இலிருந்து 237 ஆக அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தொகுதி வாரி அடிப்படையில் 145 உறுப்பினர்களும் மாவட்ட விகிதாசாரத்தில் 55 உறுப்பினர்களும் தேசிய விகிதாசாரத்தில் 37 உறுப்பினர்களுமாக உள்வாங்கப்பட்டுள்ளது. இம்முன்மொழிவானது சிறுபான்மை இன தேசிய கட்சிகளையும் சிறு அரசியல் கட்சிகளையும் முற்றுமுழுதாகத் திருப்திப்படுத்தாது பாதிப்பை ஏற்படுத்துவதாகவே காணப்படுகின்றது. இதனை நாம் ஒருபோதும் ஏற்கமுடியாது. அவ்வாறான முன்மொழிவுகளை நாம் முற்றாக எதிர்க்கின்றோம்.
சிறுபான்மை இன தேசிய கட்சிகளையும் சிறு அரசியல் கட்சிகளையும் பாதிக்கும் வகையிலான புதிய தேர்தல் முன்வரைவுகளுக்கு கூட்டமைப்பு ஒருபோதும் ஆதரவை வழங்காது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச்சாத்திடுவதற்கான மாதிரி வரைவொன்று அனைத்துக் கட்சிகளாலும் தமிழரசுக் கட்சியிடம் வழங்கப்பட்டிருந்தது.
அந்த மாதிரி வரைவுகள் தொடர்பில் தமிழரசுக் கட்சி தனது யோசனைகளை முன்மொழிந்து அக்கட்சிகளிடம் மீளவும் வரைவை கையளித்துள்ளோம்.
எதிர்வரும் வாரமளவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பான வரைவை கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி இறுதி செய்யவுள்ளோம்.
கூட்டமைப்பு பிரதிநிதிகளை ஒன்றுபடுத்த நடவடிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கிடையே பல்வேறு காரணங்களுக்காக இடைவெ ளிகள் காணப்படுகின்றன. அவற்றை முடிவுக்குக் கொண்டு வந்து கூட்டமைப்பை அனைவரும் ஒற்றுமையுடன் செயற்படும் கட்டமைப்பாக மாற்றுவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளோம்.
இதற்காக வடக்குக் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளை ஒன்றிணைத்து விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளோம் என்றார்.
தேர்தல் முறை மாற்ற யோசனையை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரிப்பு
Reviewed by Author
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment