பாராளுமன்றை கலைக்க முயன்றால் புதிய அரசாங்கத்தை அமைப்போம்

சிறுபான்மை அரசாங்கம் என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி பாராளுமன்றத்தை கலைப்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் உறுதியான நிலைப்பாடாக இருந்தால், நல்லாட்சி திட்டங்களை நிறைவேற்றுவதற்கு தற்போதைய பாராளுமன்றத்திற்குள் புதிய அரசாங்கமொன்றை அமைப்போம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அத்துரலிய ரத்ன தேரர் எச்சரிக்கை விடுத்தார்.
தேர்தல் மறுசீரமைப்பின் போது சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளின் இணக்கபாடும் மிகவும் அவசியமாகும். எனினும் தற்போதுசிறுபான்மை கட்சிகளினால் முன்மொழியப்பட்டுள்ள இரட்டை வாக்கு சீட்டு முறைமை ஒரு போதும் சாத்தியமாகாது. அந்த முறைமை பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்தும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தூய்மையானதொரு நாளைக்கான தேசிய பேரவையின் விசேட ஊடகவியலாளர் மாநாடு நேற்று கொழும்பிலுள்ள இலங்கை மன்றக் கல்லூரியின் இடம்பெற்ற போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது முழு பாராளுமன்றத்தையும் அரசாங்கம் குழப்பியடித்துள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றுவதில் பாரிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமை நல்லாட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்த கூடியதாக மாறியுள்ளது.
அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றிய தருணத்திலேயே தேர்தல் மறுசீரமைப்பினை உள்ளடக்கிய 20 ஆவது திருத்தச்சட்டத்தையும் பாரர்ளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் ஆர்வமின்மை இன்மையினால் அதனை நிறைவேற்ற முடியாமால் போனது.
தற்போதைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கமே காணப்படுகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தின் முரண்பாடான சூழலை மாற்றியமைப்பதற்கு அரசினால் இயலவில்லை. அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புணர்வை தட்டிக்கழித்து செயற்பட்டு வருகிறது.
தேர்தல் மறுசீரமைப்பு குறித்தான பிரதான யோசனைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவாக செயற்பட்ட போதிலும் ஆசனங்களை நிர்ணயிப்பதில் கட்சிகளிடையே கருத்து வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. பொதுவாக பாராளுமன்றத்தின் ஆசனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க கூடாது என்பது மக்களின் வாதமாக இருப்பினும், தற்போதைய சனத்தொகை வளர்ச்சிக்கேற்ப ஆசனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவேண்டும் என்பதே அரசியல் ஆர்வலர்களின் பிரதான வாதமாக உள்ளது. அதேபோன்று சிறுப்பான்மைக் கட்சிகளினதும் அபிப்ராயமும் அதுவாகவே உள்ளது.
எனினும் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியானது பாராளுமன்றத்தின் ஆசனங்கள் 225 க்கு மட்டுப்படுத்த வேண்டும் என்பதனையே வலியுறுத்தி வருகிறது. இந்த யோசனைக்கு சிறுப்பான்மை மற்றும் சிறியக் கட்சிகள் ஒருபோதும் உடன்படாது. எனவே தற்போதைக்கு அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள 237 ஆசனங்கள் அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள கூடிய திருத்தமாக உள்ளது.
இந்நிலையில் தேர்தல் மறுசீரமைப்பின் போது சிறுப்பான்மை மற்றும் சிறியக் கட்சிகளின் இணக்கபாடு மிகவும் அவசியமாகும். எனினும் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு சிறுப்பான்மை கட்சியினால் தற்போது முன்மொழியப்பட்டுள்ள இரட்டை வாக்கு சீட்டு முறைமை ஒரு போதும் சாத்தியமாகாது. அந்த முறைமையானது அசனங்கள் தொடர்பிலான பிரச்சினைகளை மேலும் வலுப்படுத்தும். இதனால் தற்போதைய முறைமையை விடவும் ஆபத்தான நிலைமையை ஏற்படுத்தலாம். எனினும் குறித்த முறைமையில் சாதகமான அம்சங்களும் உள்ளது.
எனினும் சிறுப்பான்மைக் கட்சிகளின் யோசனைக்கு பிரதான கட்சிகள் இரண்டும் எதிர்ப்பினை வௌிப்படுத்தியுள்ளது.
ஆசன கணக்கை காரணம் காட்டி அரசாங்கம் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளது. நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவோம் என எதிரணி பொது வேட்பாளருக்கு ஆதரவாக செயற்ப்பட்ட நாம் உறுதியளித்திருந்தோம். இந்நிலையில் அந்த வாக்குறுதிக்கு காலைவார முற்படுவது நியாயமாகாது.
பாராளுமன்றத்தின் சிறுப்பான்மை பிரதிநிதித்துவத்தை பெற்ற கட்சியின் தலைவர் பிரதமராக்கப்பட்டுள்ள நிலைமையில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை தட்டிக்கழிக்க முனைவது பொறுப்புணர்வுமிக்க தலைவர்களின் செயலாக கருதமுடியாது.
ஆகவே பாராளுமன்றத்தை கலைப்பது ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு உரிய பங்காகும். இந்நிலையில் மக்களின் ஆணைக்கு மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு பாராளுமன்றத்தை கலைப்பதற்கு எந்தவொரு உரிமையும் கிடையாது.
எனவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தினை நிறைவேற்றியே ஆகவேண்டும். விகிதாசார முறைமையினை மாத்திரம் வைத்துக்கொண்டு விருப்பு வாக்கு முறைமையை முற்றாக இல்லாமல் செய்ய வேண்டும்.
விருப்பு வாக்கு முறைமையினால் நாட்டை ஆட்சி செய்ய தகைமையற்றோர், கொள்கையற்றோர் பாராளுமன்றத்திற்கு தெரிவாகின்றனர.் இதன்காரணமாக கட்சிகளுக்கு உள்ளேயே தகராறுகள் ஏற்படுகின்றன. அதேபோன்று பணவசதி படைத்தோருக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆகவே இந்த முறைமையை மாற்றியமைத்து இலங்கை அரசியல் கலாசாரத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்.
இந்த வரலாற்று பூர்வமான மாற்றத்திற்கு எவரும் தடையாக இருக்க முடியாது. சிறுப்பான்மை அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பாரிய பொறுப்பாகும். அவரினால் நல்லாட்சி வேலைத்திட்டங்களை தட்டிக்கழித்து விட்டு செயற்பட முடியாது. ஆகவே அரசியலமைப்பின் 20 ஆவது திருத்ததை நிறைவேற்ற வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். இதற்கு தொடர்ந்தும் அரசாங்கம் தடையாக இருந்தால் அழுத்தம் பிரயோகிக்கும் சக்தியாக நாம் பரிணமிப்போம்.
இந்நிலையில் அரசாங்கத்தின் அராஜக ஆட்சியினால் பாராளுமன்றத்தின் நடவடிக்கைகள் முற்றாக குழம்பியுள்ளது. ஆகவே தேர்தல் மறுசீரமைப்பு என்பது நாட்டு மக்களின் பிரதான அபிலாஷையாகும். அதனை நிறைவேற்றாமல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு இயலாது.
சிறுப்பான்மை அரசாங்கம் என்ற காரணத்தை முன்னிலைப்படுத்தி அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டத்தை பிற்போடுவதற்கு அரசாங்கம் முனைகிறது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியினர் இடையூராக காணப்படுவதாகவும் அரசாங்கம் குற்றம் சுமத்துகிறது.
அது முற்றிலும் தவறான வாதமாகும். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்திற்கு மஹிந்த ஆதரவு அணியினர் வாக்களித்தனர். எனவே 20 ஆவது திருத்தச்சட்டத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால் தேசதுரோகிகள் யார் என்பது தெரிந்துவிடும். இந்நிலையில் சிறுப்பான்மை அரசாங்கம் என்ற காரணத்தினால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆட்சி அமைக்க முடியாவிட்டால் தற்போதைய பாராளுமன்றத்தினுள் புதிய அரசாங்கத்தை ஏற்படுத்துவதற்கு நாம் தயாராக உள்ளோம்.
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்,பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் 20 ஆவது திருத்தச்சட்டத்தை நிறைவேற்றியே தீரவேண்டும்.
ஊழல் மோசடி தொடர்பில் அரசின் செயற்பாடு நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்ததை போன்று ஊழல் மோசடிக்கு தண்டனை வழங்குவோம். அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தினூடக இதற்கான அடித்தாளத்தை இட்டுள்ளோம் என்றார்.
பாராளுமன்றை கலைக்க முயன்றால் புதிய அரசாங்கத்தை அமைப்போம்
Reviewed by Author
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment