61 தேர்தல் வன்முறைகள் குறித்து முறைப்பாடு
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதன் பின்னர் 61 தேர்தல் வன்முறைச்சம்பவங்கள் குறித்த முறை ப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 80 வீதமானவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று டிரான்ஸ்பேரன்ஸி இன்டர் நெஷனல் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் சான் விஜேதுங்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி, சுதந்திர கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்மைப்பு ஆகிய கட்சிகள் அரச சொத்துக்களை தேர்தல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இலங்கை மன்றக் கல்லூரியில் நேற்று வெள்ளிகிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தல் காலங்களில் பொது வளங்களை பாதுகாப்பதற்காக நிறுவப்பட்டுள்ள டிரான்பேரன்ஸிஸ் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் கண்காணிப்பின் போது 61 தேர்தல் சட்ட மீறல் செயற்பாடுகள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இம் முறைப்பாடுகளில் 80 வீதமான முறைப்பாடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான தேர்தல் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறும் பட்சத்தில் முழுமையான தகவல்களுடன் டிரான்ஸ்பெரன்ஸி இன்டர்நெஷனல் நிறுவனத்திற்கு முறைப்பாடு செய்ய பொது மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவுள்ளது. அது தொடர்பிலான அறிவித்தல்கள் நாளேடுகள் மூலம் அறிவிக்கப்படும்.
நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி,சுதந்திர கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு,மக்கள் விடுதலை முன்னணி,தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் தேர்தல் சட்டங்களை மீறியுள்ளமைக்கான தேர்தல் புகைப்பட மற்றும் காணொளி ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. அதன் பிரகாரம் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அலரி மாளிகையில் ஒப்பந்தம் கைச்சாத்திட்டமை, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு திட்ட அமைச்சின் ஊடகச்செயலாளருக்கு வீடு வழங்கப்பட்டுள்ளமை, வடமேல் மாகாண முதலமைச்சரின் காரியாலய தொலைபேசி வாயிலாக தேர்தல் பிரசாரம் செய்யப்படுகின்றமை, முன்னாள் அமைச்சர் தொண்டமான் அரச வாகனங்களை தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாவித்துள்ளமை, அரச பஸ்களில் வேட்பாளர்களின் போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றமை போன்ற குற்றச்சாட்டுகள் எமது கண்காணிப்பு நிலையத்துக்கு பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் கடந்த காலங்களை விடவும் பொலிஸாரின் சிறந்த பாதுகாப்பு செயற்பாடுகளின் காரணமாக இம்முறை தேர்தல் வன்முறைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை,தேர்தலின் போது கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு பாதிப்புக்கள் ஏதும் ஏற்படும் பட்சத்தில் அவர்களால் வழக்கு தாக்கல் செய்யப்படும் போது அவர்களுக்காக டிரான்பேரன்ஸி நிறுவனத்தின் வழ க்கறிஞர்கள் முன்னிறுத்தப்படுவதுடன் இலவச சேவையும் பெற்றுக்கொடுக்கப்படும்.
61 தேர்தல் வன்முறைகள் குறித்து முறைப்பாடு
Reviewed by Author
on
July 18, 2015
Rating:

No comments:
Post a Comment