தங்கம் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது ஏன்?
மனிதனின் ஆசைக்கு தீனி போடும் அற்புத உலோகம். பொன்னிறமாய் மின்னும் தங்கத்தை பார்த்தாலே கண்களும் மின்னும்.
உலக நாடுகளின் பொருளாதாரத்தை நிர்ணயிப்பதில் தங்கம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு நாடும் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் தங்கத்தின் இருப்புக்கு ஏற்றவாறு கரன்சிகளையும், நாணயங்களையும் வெளியிடுகிறது.
தங்கத்தின் பயன்பாடு பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே மக்களின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்து கிடக்கிறது. மன்னர்கள் காலத்தில் தங்க நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. காலப்போக்கில் விதவிதமான ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டு பெண்களை மோகம் கொள்ள வைத்தன.
தங்க நகைகள் மீதான மோகம் இந்தியாவில் மிக அதிகம். எனவே தங்க இறக்குமதியும் அதிகரித்து வருகிறது.
தங்கம் என்பது ஒரு குடும்பத்தின் செல்வ நிலையை மதிப்பிட உதவுகிறது. ஆடம்பர பொருளாகவும் பாவிக்கப்படுகிறது. தமிழ் பெண்கள் திருமணத்தில் தங்க நகைகள் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றன.
மதிப்புமிக்க இந்த உலோகத்தின் மீது முதலீடு செய்வதும், நகைகளாக அணிந்து மகிழ்வதும் அதிகரித்ததால் தங்க வியாபாரமும் சூடு பிடித்தது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே போனது.
உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள், ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும் வெட்டி எடுக்கப்படுகிறது. உலகிலேய அதிக அளவில் தங்கத்தை அமெரிக்கா இருப்பில் வைத்துள்ளது.
காரட் என்ற அலகால் தங்கம் மதிப்பிடப்படுகிறது. இதில் 24 காரட் என்பது சுத்த தங்கம். இதில் நகைகள் செய்ய முடியாது. 22 காரட்டில்தான் நகை செய்ய முடியும். 22 காரட் என்பது 91.6 சதவீதம் தங்கமும், 8.4 சதவீதம் செம்பு அல்லது வெள்ளி கலந்ததாகும்.
நகைகளாக 22 காரட் தங்கத்தை வாங்குபவர்கள் முதலீட்டுக்கு 24 காரட் தங்கத்தை வாங்குவார்கள். முதலீட்டுக்கு 24 காரட் தங்க நாணயம், தங்க கட்டிகள் ஆகியவற்றை வாங்குவார்கள்.
ஆனால் கடந்த சில வாரங்களாக திடீரென்று தங்கம் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்தது. இதுவரை வரலாறு காணாத வகையில் விலை உயர்வை சந்தித்த மக்கள் இப்போது வரலாறு காணாத வகையில் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் இப்போது தங்கத்தின் விலை சரிந்துள்ளது. ஒரு பவுன் ரூ.19 ஆயிரத்துக்கு விற்கிறது.
அடுத்தடுத்த மாதங்களில் வர இருக்கும் மாதங்கள் திருமண காலம் என்பதால் நகை கடைகளில் நகைகள் வாங்க கூட்டம் அலை மோதுகிறது.
சர்வதேச விலை நிலவரத்தை பொறுத்து மேலும் விலை குறையவும் வாய்ப்பு உண்டு... கூடவும் வாய்ப்பு உண்டு.... என்கிறார்கள். அந்த மூடு மந்திரத்தை யாரறிவார்...?
தங்கம் விலை வரலாறு காணாத வகையில் வீழ்ச்சி அடைந்தது ஏன்?
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:

No comments:
Post a Comment