ஐ.தே.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் புறக்கணிப்பு! ஆதரவாளர்கள் அதிருப்தி!
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனம் சிங்களத்தில் மட்டுமே வெளியிட்டதால், தாம் அவமானப்படுத்தப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தமிழ் பேசும் ஆதரவாளர்கள் உணர்வதாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அண்மையில் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தை சிங்களத்தில் மாத்திரம் வெளியிட்டது.
இலங்கையின் அரச கரும மொழிகளில் ஒன்றானதும், நாட்டில் வாழும் இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் இந்திய தமிழர்களின் தாய்மொழியான தமிழில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய கட்சி தவறியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துப்படுத்தும் பல கட்சிகள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகிப்பதுடன் அதன் பிரதமர் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்துள்ளன.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமைலை, மட்டக்களப்பு, அம்பாறை, புத்தளம், கண்டி, மாத்தளை, நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, காலி, களுத்துறை , கொழும்பு, கம்பஹா ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் பெரும்பாலான தமிழ் பேசும் வாக்காளர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்தனர்.
சிறுபான்மையின வாக்குகள் தன்னை தேர்தலில் தோற்கடித்ததாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பகிரங்கமாக கூறியிருந்தார்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணிக்கே வாக்களிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளர் பட்டியலில் இலங்கை தமிழர்கள், முஸ்லிம்கள், இந்திய தமிழர்கள் என பல தமிழ் பேசும் வேட்பாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் ஐக்கிய தேசிய முன்னணி தமிழிலும் ஒரே நேரத்தில் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட தவறியுள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், சிறுபான்மை மக்களின் மொத்த வாக்குகளும் நிச்சயமாக ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்திற்கே கிடைக்கும் என அதன் தலைமை எண்ணுவதும் இதற்கு ஒரு காரணம்.
சிறுபான்மை சமூகங்களின் சுய கௌரவம், அந்த சமூகங்களின் கண்ணியம் என்பன அவமதிக்கப்படும் பெரும்பான்மை சமூகத்தின் திமிர் காரணமாக தீவு தேசத்தில் பல தசாப்தங்களாக பிரச்சினைகள் ஏற்பட வழிவகுத்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை பெற சிறுபான்மை வேட்பாளர்களுக்கு வாய்ப்பு வழங்கி, இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம், தேசிய ஒற்றுமை போன்ற விடயங்களில் உறுதிகளை வழங்கியுள்ள போதிலும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி , தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழில் வெளியிட தவறிவிடடது.
இலங்கை மக்கள் தொகையில் மூன்று முக்கிய தமிழ் பேசும் சிறுபான்மையின சமூகங்கள் 25 வீதம் உள்ளன.
நாட்டில் நிலவும் உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உங்கள் கண்ணோட்டத்தில் எது? என நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஆங்கில பத்திரிகை ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள ரணில் விக்ரமசிங்க,
முதலில் நாங்கள் தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர் மற்றும் மத குழுக்கள் இடையில் நல்லிணக்கத்தை உருவாக்க வேண்டும் என கூறியிருந்தார்.
நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் பிரதமர் வேட்பாளர் இனங்களுக்கு இடையில் சமாதானத்தை உருவாக்குவதற்கு முன்னுரிமை கொடுப்பார் என்பதை இது தெளிவாக காட்டுகிறது.
எனினும் அவரது தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி ஓரே நேரத்தில் சிங்களத்திலும் தமிழிலும் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் இலகுவான பரீட்சையில் தோல்வியடைந்துள்ளது.
தமிழ் மொழியில் தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிடும் தனது அடிப்படை கடமையை புறக்கணித்துள்ள அரசியல் முன்னணி எதற்காக தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை கோரி அரசியல் செய்கிறது? என ஆங்கில இணையத்தளம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஐ.தே.முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் புறக்கணிப்பு! ஆதரவாளர்கள் அதிருப்தி!
Reviewed by NEWMANNAR
on
July 27, 2015
Rating:

No comments:
Post a Comment