வடக்கு கிழக்கு முஸ்லிம் அரசியலில் பல கட்சித் தாவல்கள்
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், தென்னிலங்கையில் நடக்கின்ற கட்சித் தாவல்களை இம்முறை வடக்கு கிழக்கு அரசியலிலும் அவதானிக்க முடிகின்றது.
குறிப்பாக முஸ்லிம் அரசியலில் கடந்த 72 மணி நேரத்தில் பல கட்சித் தாவல் சம்பவங்கள் நடந்துள்ளன.
2010ம் ஆண்டு நாடாளுமன்றத்திற்கு வன்னி மாவட்டத்திலிருந்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினராக தெரிவாகியிருந்த ஹுனைஸ் ஃபாருக் இம்முறை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து விலகி சில காலம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இவர் இணைந்திருந்தார்.
கிழக்கு மாகாணசபையின் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினரான அலி சாஹிர் மௌலானா ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
பொத்துவில் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக இருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸின் கிழக்கு மாகாணசபை குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கரஸில் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த எம். எஸ். சுபைர் அக்கட்சியிலிருந்து விலகி மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
தேர்தல் காலங்களில் நடக்கும் இந்த கட்சித் தாவும் படலத்தை 'அரசியல் நோக்கம் கொண்ட வியாபாரம்' என்று சமூக ஆர்வலரான எஸ். எல். எம். ஹனீஃபா விமர்சித்துள்ளார்.
கட்சித் தாவுகின்றவர்கள், தாங்கள் மக்களிடமிருந்து தப்புவதற்காக கையாளும் யுக்தியே 'தலைமைகள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜமீல், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணையவுள்ளார்.
வடக்கு கிழக்கு முஸ்லிம் அரசியலில் பல கட்சித் தாவல்கள்
Reviewed by NEWMANNAR
on
July 13, 2015
Rating:

No comments:
Post a Comment