அரசாங்கத்தில் பங்காளிகளாக மாறும் வகையில் அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : விஜயகலா...

அரசாங்க ஊழியர்கள் சிந்தித்து நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக வாக்களிக்க வேண்டும். எமது அரசாங்கம் அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவால் அதிகரித்துள்ளது. புதிய அரசாங்கத்தில் இன்னும் பல நலன்புரித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இதனால் யாழ்.மாவட்ட அரசாங்க ஊழியர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முதன்மை வேட்பாளர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் தபால்மூல வாக்களிப்பு இன்றும் எதிர்வரும் 5ஆம், 6ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு விடுத்துள்ள அறிக்கையிலேயே திருமதி விஜயகலா மகேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
நாட்டில் ஜனவரி மாதம் வரை அரசாங்க ஊழியர்கள் அடக்கி ஒடுக்கப்பட்டனர். அவர்களுக்குப் போதியளவு சம்பள உயர்வுகள் வழங்கப்படவில்லை. ஜனவரி 8 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஆட்சியமைத்த எமது அரசாங்கம், அரசாங்க ஊழியர்களுக்கு 10 ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வழங்கியது.
யாழ்.மாவட்டத்திலும் முன்னைய அரசாங்க காலத்தில் அரசாங்க ஊழியர்கள் கட்டுப்படுத்தப்பட்டனர். தமது கடமைகளை சரிவரச் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஆனால் இன்று அரசாங்க ஊழியர்கள் சுயாதீனமாகச் செயற்படும் நிலைமை உருவாகியிருக்கிறது. எதிர்வரும் 17 ஆம் திகதிக்குப் பின்னரும் நாட்டில் நல்லாட்சி இடம்பெற வேண்டுமானால் அரசாங்க ஊழியர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
யாழ்.மாவட்டத்தைப் பொறுத்த வரையில் நல்லாட்சியை நோக்கமாகக் கொண்டே அரசாங்க ஊழியர்கள் வாக்களிப்பார்கள் என்பது திண்ணம். இன்றைய தினம் ஆசிரியர்கள் தபால் மூல வாக்கினை அளிக்கவுள்ளனர். இந்த நேரத்தில் சிந்தித்து அரசாங்க ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும். யாழ்.மாவட்டத்தில் எமது பிரதிநிதித்துவம் அதிகரித்தால்தான் வடபகுதி மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசாங்கத்தில் தீர்வுகாணும் நிலை ஏற்படும். எனவே தபால் மூலம் வாக்களிக்கும் அனைவரும் சிந்தித்துச் செயற்படுமாறு அன்பாகக் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.
அரசாங்கத்தில் பங்காளிகளாக மாறும் வகையில் அரச ஊழியர்கள் வாக்களிக்க வேண்டும் : விஜயகலா...
Reviewed by Author
on
August 03, 2015
Rating:

No comments:
Post a Comment