அண்மைய செய்திகள்

recent
-

கொழும்பில் எங்கள் உரிமையை தட்டி பறிக்க சதி முயற்சி: மனோ கணேசன்


கொழும்பு மாவட்டத்தில் இரண்டு தமிழ் எம்பிக்களை தெரிவு செய்து கொள்ளும் எங்கள் உரிமையை தட்டி பறிக்க ஒருசிலர் முயல்கின்றனர் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் யானோ கணேச தெரிவுத்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் போட்டியிடும் ஒரு பெரும்பான்மையின அரசியல்வாதி, எனது இலக்கத்தையும், தனது இலக்கத்தையும், பிரதமர் ரணிலின் இலக்கத்தையும் ஒன்றாக போட்டு, ஒரு துண்டு பிரசுரத்தை, “வட கொழும்பு தமிழ் இளைஞர் சங்கம்” என்ற பெயரில் அச்சிட்டு வெளியிட்டு உள்ளார்.

என் அனுமதி இல்லாமல், என் படத்தையும், என் விருப்பு வாக்கு இலக்கத்தையும் குறிப்பிட்டு, வெளியிடப்பட்டுள்ள இந்த பிரசுரம் தொடர்பில் நாம் தேர்தல் ஆணையாளரிடமும், தேர்தல்கள் தொடர்பான பொலிஸ் அலுவலகத்திலும் முறையீடு செய்ய உள்ளோம்.

ஒரு இலட்சம் பேருக்கு ஒரு எம்பி என்பதே ஒரு அண்ணளவான கணக்கு. கொழும்பு மாவட்டத்தில் சுமார் மூன்று இலட்சம் தமிழ் மக்கள் வாழ்கிறோம்.

எனவே எங்களுக்கு இங்கே மூன்று தமிழ் எம்பிக்களை பெற்றுக்கொள்ள உரிமை உண்டு. எனினும், பல இனங்கள் சேர்ந்து வாழும் கொழும்பில் சிறுபான்மையாக வாழும் எமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக, நாம் இரண்டு தமிழ் வேட்பாளர்களையே களமிறக்கி உள்ளோம்.

அத்துடன் தேசிய இன ஐக்கியத்தை எடுத்துக்காட்டும் முகமாக எமது மூன்றாம் விருப்பு வாக்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் 15ம் இலக்கத்துக்கு வழங்கவும் கோருகிறோம்.

எங்கள் தமிழ் இன உரிமையை உறுதிப்படுத்தும் முகமாக எங்கள் முதல் இரண்டு விருப்பு வாக்குகளையும் 8ம், 9ம் இலக்கங்களுக்கு வழங்க கோருகிறோம்.

மிகவும் நியாயமான எங்கள் இந்த நிலைபாட்டை, புரிந்து கொள்ளாத பேராசை கொண்ட ஒரு பேரினவாத சக்தி, போலி மோசடி பிரசுரங்களை, போலி மோசடி பெயரில் வெளியிட்டு, அதில் என் பெயரையும் பயன்படுத்தி தமிழ் வாக்காளர்களை தவறாக வழிநடத்த முயல்கிறது.

இவர்களின் நோக்கம் எமது இரண்டாம் விருப்பு வாக்கில் கைவைப்பதாகும். அதாவது, கொழும்பில் இரண்டு தமிழ் எம்பிக்களை பெற்றுக்கொள்ளும் எங்கள் உரிமையை தட்டி பறிப்பதாகும். இ

தை தமிழ் மக்கள் புரிந்துக்கொண்டு திடமான மனதுடன் எமது பொது சின்னமான யானை சின்னத்துக்கும், 8, 9, 15 ஆகிய விருப்பு வாக்கு இலக்கங்களுக்கும் வாக்களித்து, இந்த பேரினவாத சதியாளர்களை முறியடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

நேற்று வடகொழும்பு அளுத்மாவத்தை வீதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றுகையில் மனோ எம்பி மேலும் கூறியதாவது,

கொழும்பில் நானும், குகவரதனும், நுவரேலியாவில் திகாம்பரமும், ராதாகிருஷ்ணனும், திலகரும், கண்டியில் வேலுகுமாரும், பதுளையில் அரவிந்தகுமாரும், இரத்தினபுரியில் சந்திரகுமாரும், கம்பஹாவில் சசிகுமாரும் வெற்றி பெற வேண்டும்.

இதுதான் யானை சின்னத்தில் போட்டியிடும் தமிழ் முற்போக்கு கூட்டணி வேட்பாளர் பட்டியல். ஆறு மாவட்டம், ஒன்பது வேட்பாளர்கள். நாம் ஒரு பலமிக்க அணியாக அடுத்த பாராளுமன்றத்தில் பணியாற்ற விளைகிறோம். இதை குழப்ப எவருக்கும் இடம் கொடுக்க முடியாது.

கொழும்பிலே, மூன்று தமிழ் வேட்பாளர்களை களமிறக்கி இருக்கலாம். அதை நாம் செய்யவில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழ் இன உரிமை கோரிக்கைகளை எவருக்கும் தலைவணங்காமல் முன் வைக்கும் அதேவேளை எமது சகோதர இனங்களையும் அரவணைத்து அரசியல் செய்வது எனது தலைமைத்துவ அடையாளமாகும்.

இது வடக்கு கிழக்கு அல்ல. இங்கே நாங்கள் சிறுபான்மையாக வாழ்கிறோம். எனவேதான் எமது மக்கள் தொடர்பாக, குறிப்பாக கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில், நான் மிகவும் பொறுப்புடன் செயற்படுகிறேன்.

எனக்கு, எமது கட்சியிலும், எமது கூட்டணியிலும் வழங்கப்பட்டுள்ள தலைமை பதவியை இப்படித்தான் நான் முன்னெடுகின்றேன். இதை மிகப்பெரும்பாலான தமிழ் மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.

ஆனால், சிங்கள பெரும்பான்மை சகோதர இனத்தை அரவணைத்து செல்லும் எனது இந்த நல்லெண்ண கொள்கையை எனது பலவீனமாக எவரும் புரிந்துக்கொள்ள கூடாது.

என்னை முட்டாள் என நினைத்துக் கொள்ள கூடாது. கொழும்பில் மூன்றாம் விருப்பு வாக்கை ரணில் விக்கிரமசிங்க என்ற பெரும்பான்மை இனத்தை சார்ந்த எங்கள் பிரமருக்கு வழங்க நாம் விரும்புகிறோம்.

அத்துடன் எங்கள் நல்லெண்ண கொள்கை முடிவுக்கு வருகிறது. அதற்கு மேல் சென்று எங்கள் இரண்டாம் விருப்பு வாக்கின் மீது கைவைக்கும் எந்த ஒரு முயற்சியையும் நான் பொறுத்துக்கொள்ள போவதில்லை.

இரண்டாம் விருப்பு வாக்கையும் தாரை வார்த்து விட்டு அதை பெருந்தன்மை என்று சொல்ல நான் ஒன்றும் அரசியல் கற்றுக்குட்டியல்ல. எங்கள் வாக்கு யானை சின்னத்துக்கு, எங்கள் முதலாம் விருப்பு வாக்கு மனோவுக்கு, இரண்டாம் விருப்பு வாக்கு குகவரதனுக்கு, மூன்றாம் விருப்பு வாக்கு ரணிலுக்கு.

கொழும்பு மாவட்டம் முழுக்க இதுதான் எங்கள் சுலோகம். இதை சதி செய்து மாற்ற எந்த ஒரு அரசியல் நபர்களுக்கும், நான் ஒருபோதும் கொடுக்க மாட்டேன். கொழும்பில் இரண்டு தமிழ் எம்பிக்களை பெற்றுக்கொள்ள இதைவிட வேறு வழியில்லை என குறிப்பிட்டார்.
கொழும்பில் எங்கள் உரிமையை தட்டி பறிக்க சதி முயற்சி: மனோ கணேசன் Reviewed by NEWMANNAR on August 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.