தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படாது...
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட் டுள்ள மாற்றத்தால் தமிழர்களுக்கு எந்தவொரு அநீதியும் ஏற்படாது.
புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என முன்னாள் நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
தமிழர்களுக்காக நாம் குரல் கொடுத்துள்ளோம். ஆகவே உள்ளக பொறிமுறையினூடாக தமிழ் மக்களுக்கு உரிய தீர்வினை முன்வைப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பில் அமெரிக்காவினால் இலங்கைக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித பேரவையில் விசேட பிரேரணை சமர்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் யுத்தத்தினால் பாதிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படுமா என்று வினவியபோதே ரவி கருணாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
விடுதலை புலிகளுக்கு எதிராக இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக பரவலாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் சர்வதேசத்தின் அவதானம் முழுமையாக இலங்கையின் பக்கம் திரும்பியுள்ளது.
சர்வதேசத்தை எதிர்கொள்வதற்காக முன்னைய ஆட்சியாளர்களினால் சீரான திட்டங்கள் வகுக்கப்படவில்லை. சர்வதேசத்துடன் முன்னைய ஆட்சியாளர் இணங்கி செயற்படாமையினால் சர்வதேச விசாரணைக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ஆகவே சர்வதேச விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே பிரதான காரணமாகும்.
சர்வதேச விசாரணையிலிருந்து இலங்கையை பாதுகாக்க வேண்டிய நிலைமை எமக்கு ஏற்பட்டது. இதற்கான பாரிய பொறுப்பை மக்கள் எங்கள் மீது சுமத்தியுள்ளனர். ஆகவே அதனை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
எனினும் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்த குற்றங்கள் உள்ளிட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் அமெரிக்கா தனது அணுகுமுறையினை மாற்றியுள்ளது. அதாவது இலங்கை ஆதரவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் விசேட பிரேரணை ஒன்றை முன்வைக்கவுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு பொறுப்பான அமெரிக்காவின் உதவி இராஜங்க செயலாளர் நிஷா பிஷ்வால் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த குற்றம் தொடர்பில் அமெரிக்கா இலங்கைக்கு ஆதரவாக செயற்படும் வகையில் பிரேரணை சமர்பிப்பதனால் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு எந்தவொரு அநீதியும் இழைக்கப்படமாட்டாது. தமிழ் மக்களுக்காக அனைத்து சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி குரல் கொடுத்து வந்துள்ளது. ஆகையால் தமிழ் மக்களுக்கு எதிராக புதிய அரசாங்கம் ஒருபோதும் செயற்படமாட்டாது.
வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை நம்பவேண்டும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தேசிய பிரச்சினைக்கு உரிய தீர்வினை வழங்குவார்கள். மேலும் யுத்த குற்றம் இடம்பெற்றதாக கூறப்படுவது தொடர்பில் உள்ளக விசாரணை பொறிமுறையை நாம் கட்டமைப்போம் என்றார்.
தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படாது...
Reviewed by Author
on
August 28, 2015
Rating:
Reviewed by Author
on
August 28, 2015
Rating:


No comments:
Post a Comment