அமெரிக்காவின் 51 ஆவது மாநிலத்தை பார்க்க சமந்தா இலங்கை வருகிறாரா?
இவரது வருகைக்கு எமது கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம் என பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பி.யுமான உதய கம்மன்பில தெரிவித்தார். இலங்கையில் புலி ஆதரவாளர்களைச் சந்திக்கும் சமந்தா பவர் ஏன் முஸ்லிம்,சிங்களத் தலைவர்களை சந்திப்பதற்கு ஏற்பாடு மேற்கொள்ளவில்லையென்றும் அவர் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே உதய கம்மன்பில எம்.பி. இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஐ.நா.விற்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதியான சமந்தா பவருக்கு ஐ.நா.விலும் அமெரிக்காவிலுமே கடைமைகள் உள்ளன. ஆனால் இதனைக் கைவிட்டு அவர் எதிர்வரும் 23ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதிவரை இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இவ் விஜயத்தை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளது. வெளியில் வெளியிடவில்லை. இங்கு வரும் சமந்தா பவர் ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன்இ வட மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோரையே சந்திக்கின்றார்.
இவர்கள் அனைவரும் நாடு பிரிவதற்கு ஆதரவானவர்கள். சமந்தாவும் விடுதலை புலி ஆதரவாளர். மனித உரிமைகள் தொடர்பாக கருத்தரங்குகளை நடத்துபவர். இவ்வாறான ஒருவர் புலிகளின் அரசியல் பிரிவாக இயங்கிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பை மட்டும் சந்திக்கின்றார்.
வடக்கிலிருந்து 24 மணி நேரத்திற்குள் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸை சந்திக்கவில்லை. அதேபோன்று பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட சிங்களவர்கள் தொடர்பில் பேச சிங்களத் தலைவர்களைச் சந்திக்கவில்லை.
அத்தோடு புலிகளுக்கு எதிராக குரல்கொடுத்து பாதிக்கப்பட்ட தமிழ் தலைவர்களையும் இவர் சந்திக்கவில்லை. எனவே சர்வதேச நீதிமன்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுக்கவே அவர் இங்கு வருகிறார்.
இலங்கை இன்று அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக மாறியுள்ளது. அரசு நாட்டை அமெரிக்காவிற்கு அடிமையாக்கியுள்ளது. எனவே தங்களது மாநிலத்தை பார்வையிடவே அவர் வருகிறார் என்றும் உதய கம்மன்பில எம்.பி. தெரிவித்தார்.
அமெரிக்காவின் 51 ஆவது மாநிலத்தை பார்க்க சமந்தா இலங்கை வருகிறாரா?
Reviewed by Author
on
November 18, 2015
Rating:
Reviewed by Author
on
November 18, 2015
Rating:


No comments:
Post a Comment