அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவில்லை! பேரவை ஏற்பாட்டுக்குழு...


தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டுவிட்டதாக வெளியான செய்தி தவறான செய்தியாகும் என மக்கள் பேரவையின் ஏற்பாட்டு குழு சுட்டிக்காட்டியுள்ளதுடன், இவ்வாறான பிரச்சாரங்கள் பேரவையின் செயற்பாடுகளை முடக்கும் வகையிலானவை எனவும் குற்றஞ்சாட்டியிருக்கின்றது.
தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டுவிட்டதாக வெளியான செய்தி தொடர்பாக பேரவை இன்று மாலை விடுத்துள்ள செய்திக்குறிப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

மேற்படி விடயம் தொடர்பாக அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதாவது,

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள் தவறானவை என்பதை தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது. தமிழ் மக்கள் பேரவையின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில் வெளியிடப்படும் இப்பரப்புரைகளைப் பொதுமக்கள் நம்பவேண்டாம் என தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு கேட்டுக் கொள்கின்றது.

தமிழ் மக்கள் பேரவை அது தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அதற்கு கட்சியரசியல் நோக்கமில்லை எனவும் அரசியலை மக்கள் மயப்படுத்தலே தமது நோக்கம் எனவும் தெளிவாகத் தெரிவித்து அதன் பிரகாரம் நடந்தும் வருகின்றது.

எனினும் துரதிட்டவசமாக தமிழ் மக்கள் பேரவையைத் தொடர்ந்தும் கட்சியரசியல் நோக்கில் பார்ப்போரும் அரசியல் மக்கள் மயப்படுத்தப்படுவதை எதிர்ப்போரும் பலவிதமான விசமத்தனமான பிரசாரங்களைச் செய்து வருகின்றனர்.

அவற்றின் ஒரு பாகமே தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்பட்டு விட்டதாக வெளிவரும் செய்திகள். இவர்களின் அநாகரிகமான பிரசாரங்களை சில ஊடகங்களும் வெளிப்படுத்தி வருகின்றமை வருந்துதற்குரியது.

தமிழ் மக்கள் பேரவை தொடர்ந்தும் அமைதியாகத் தனது பணியை முன்னெடுத்துச் செல்கின்றது என்பதனை இச் செய்தியறிக்கை மூலம் உறுதிப்படுத்துகின்றோம்.

இனப்பிரச்சினைக்கான தீர்வை தமிழ் மக்களின் கலந்தாலோசனையுடனும் பங்குபற்றலோடும் உருவாக்கும் பேரவையின் முயற்சி தொடர்பில் வடக்கு மாகாண சபை முதல்வரும் பேரவையின் இணைத் தலைவருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மிகவும் உறுதியாக உள்ளார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதில் பேரவையின் உப குழு தனது பணிகளை செவ்வனே தொடர்ந்து செய்து வருகின்றது. அக்குழு தனது பணிகளை முடித்தவுடன் அவ்வாவணம் மக்கள் கலந்தாய்வுக்காக விடும் செயன்முறை ஆரம்பமாகும்.

தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் தகவல்களைப் பெற 0756993211 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளமுடியும் என்றும் தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவை கலைக்கப்படவில்லை! பேரவை ஏற்பாட்டுக்குழு... Reviewed by Author on January 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.