முழுமனித ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல ஏனைய துறைகளும் அவசியம்!
ஒரு மனிதனின் முழுமையான ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல ஏனைய துறைகளும் அவசியமானதாக அமைந்துள்ளதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
யாழ் நல்லூர் சென் பெனடிக் றோ.க.த.க பாடசாலையின் வருடார்ந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டி கடந்த வெள்ளியன்று 19ம் திகதி பாடசாலை மைதானத்தில் அதிபர் அருட்சகோதரி ஞானதர்சினி தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில்பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எதிர்காலம் பற்றிய ஏக்கங்களோடும் கனவுகளோடும் சாதனைகளை நிலைநாட்டப்போகின்ற மாணவச் செல்வங்களினுடைய விளையாட்டு நிகழ்வில் கலந்து கொள்வதில் பெரும் உவகையடைகிறேன். முழுமனித ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி மாத்திரம் போதுமானதாக இல்லை. அதனோடு இணைந்த விளையாட்டு மிக அவசியம்.
இதன் அடிப்படையிலேதான் விடுமுறைக்கு பின்னரான வருட ஆரம்பத்தில் பாடசாலைகளில் மகிழ்ச்சிகரமான கற்றலை தேக ஆரோக்கியத்துடன் மாணவர்கள் மேற்கொள்வதற்காகவேதான் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறுகின்றன.
இப் பாடசாலை அனைத்து வளங்களையும் தன்னகத்தே கொண்டு நல்லதொரு இயற்கையான சூழலில் அமைந்திருக்கின்றது. ஆகவே மாணவர்களாகிய நீங்கள் உங்களுக்குரிய ஆற்றல் திறமைகளை இனங்கண்டு உங்களுக்குரிய எதிர்காலத்தை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
நவநாகரிக போக்கில் மூழ்கிக் கிடக்கின்ற சமூகத்தின் மத்தியில் மாணவர்கள் தமது கற்றலுக்கு தடையாக இருக்கின்ற அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு சாதனை மிக்க மனிதர்களாக சரித்திரம் மிக்க மண்ணிலே புதிய வரலாறுகளைப் படைக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
இவ் இல்ல மெய்வல்லுனர் திறனாய்வுப்போட்டியில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சிறப்பு விருந்தினராக நல்லூர் கோட்டக் கல்விப்பணிப்பாளர் அகிலதாஸ்,
யாழ் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆய்வுகள் நிர்வாக அலுவலர் வணபிதா விஜின்ரஸ், கௌரவ விருந்தினராக முன்னாள் சென் பெனடிக் றோ.க.த.க பாடசாலையின் அதிபர் அருட்சகோதரி தேவனேசும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முழுமனித ஆளுமை வளர்ச்சிக்கு கல்வி மட்டுமல்ல ஏனைய துறைகளும் அவசியம்!
Reviewed by Author
on
February 24, 2016
Rating:

No comments:
Post a Comment