ஐ.நா. ஆணையாளர் நாயகம் இன்று வடக்கு, கிழக்கு விஜயம்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் – ஹுசைன் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜய மொன்றை மேற்கொண்டு நேற்றைய தினம் இலங்கை வந்து சேர்ந்தார்.
நேற்றுக்காலை 8.30க்கு ஈ.கே 650 என்ற பிரத்தியேக விமானத்தில் வந்து சேர்ந்த ஐ.நா. ஆணையாளர் நாயகத்தை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வரவேற்று அழைத்துச் சென்றனர்.
அவர், இன்று காலை வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். இவரது வடக்கு விஜயத்தின்போது வடமாகாண ஆளுநர், வடமாகாண முதலமைச்சர், சிவில் சமூக உறுப்பினர்கள், பிரதிநிதிகள், தேசிய ஆலோசனை
பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
மேலும், இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக கூறப்படும் உள்ளக விசாரணைப் பொறிமுறை செயற்பாட்டில் வடமாகாணத்தின் பங்களிப்பு முக்கியத்துவமிக்கதாக இருக்குமென கருதப்படுகின்ற நிலையிலேயே செயிட் அல் ஹுசைன் வடமாகாண முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கின்றார்.
அதற்கமைய, இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் வரும் ஹுசைன் வடமாகாண ஆளுநர் பளிஹக்கார மற்றும் ஆளுநரின் செயலாளர் இளங்கோவன் ஆகியோரை காலை 9.30 மணியளவில் சந்திக்கவுள்ளார்.
தொடர்ந்து வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை அவருடைய அலுவலகத்திற்கு சென்று சந்தித்து கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளார்.
குறித்த சந்திப்பைத் தொடர்ந்து 12 மணியளவில் மனித உரிமை ஆணையாளர் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்திக்கவுள்ளார். தொடர்ந்து யாழில் அமைந்துள்ள உலக உணவு ஸ்தாபன வளாகத்தில் முற்பகல் 11.30 மணியளவில் சிவில் சமூக உறுப்பினர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளதுடன் யாழில் அமைந்துள்ள ஐ.நா. உப அலுவலகத்தில் பிற்பகல் 2.45 மணியளவில் சிவில் சமூக பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இறுதியாக மாலை 6 மணியளவில் குறித்த அலுவலக கட்டடத்தில் தேசிய ஆலோசனை பணிக்குழுவினருடன் சந்திப்பை மேற்கொண்டு கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் செயிட் அல் ஹுசைனை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை ஏற்படுத்தி தருமாறு காணாமல் போனவர்களின் உறவினர்களால் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐ.நா. உப அலுவலக அதிகாரி ஆகியோரிடம் மகஜர் ஒன்று நேற்று முன்தினம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதைத்தொடர்ந்து, திருகோணமலைக்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், அங்குள்ள விமானப்படை முகாமை பார்வையிடவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.
பின்னர் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஆகியோரை சந்தித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கலந்துரையாடவுள்ளார்.
திருகோணமலையிலுள்ள சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் போரினால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர் சந்திக்கவுள்ளார்.
8 ஆம் திகதி காலை கண்டிக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர், ஶ்ரீதலதா மாளிகைக்கு விஜயம் செய்வதுடன், மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளார்.
ஐ.நா. ஆணையாளர் நாயகம் இன்று வடக்கு, கிழக்கு விஜயம்...
Reviewed by Author
on
February 07, 2016
Rating:

No comments:
Post a Comment