தமிழ் திரையுலகின் சிறந்த காமெடி நடிகர் குமரிமுத்து இன்று காலமானார்.28-02-2016
தமிழ் திரையுலகின் சிறந்த காமெடி நடிகர்களில் ஒருவரான குமரிமுத்து இன்று காலமானார். மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நள்ளிரவில் இறந்தார்.78 வயதில் அவருடைய இந்த இயற்கை பிரிவு குடும்பத்தினரையும் ரசிகர்களையும் மீளாத்துயரில் விட்டுச்சென்றுள்ளது.
இவர் குமரி மாவட்டத்துக்காரர் என்பதை அவருடைய பெயரே நமக்கு அறிவிக்கும். இவர் தமிழ் சினிமாவில் நான்கு தலைமுறையை கண்ட நடிகர்.எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல், பாக்யராஜ், விஜய், அஜித் என முதன்மையான நடிகர்களின் பல படங்களில் குமரிமுத்து நடித்துள்ளார்.
இவர் நாடக நடிகராக இருந்து சினிமாவிற்குள் நுழைந்ததால் நகைச்சுவை பாத்திரமானாலும் குணச்சித்திர வேடமானாலும் தனது நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கக் கூடியவர்.பங்களித்த படங்கள்:பழைய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தாலும் அவர் தமிழ் ரசிகர்கள் மனதில் தனியிடம் பிடித்தது “சின்னப்பூவே மெல்ல பேசு” படத்திலிருந்துதான். அதில் மகனாக வரும் சின்னி ஜெயந்தோடு செய்த கஷாய காமெடியும் வெடி சிரிப்பும் பிரபலமானது.
காமெடி நடிகர்கள் கூட்டணியோடு பல படங்களில் நடித்திருக்கிறார். இது நம்ம ஆளு படத்தில் பாக்யராஜுக்கு அப்பாவாக காமெடி கலந்த குணச்சித்திர வேடத்தில் மனோரமாவோடு நடித்ததும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.மேலும், முள்ளும்மலரும், ஊமைவிழிகள், புதுவசந்தம் படங்கள் உட்பட சிறிய பாத்திரங்களிலும் சற்று முக்கியமானபாத்திரங்களிலுமாக 500 படங்களுக்கு குறையாமல் நடித்துள்ளார்.தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்துவின் முத்திரை---- தான் சிரிக்காமல் சிரிப்பை ஏற்படுத்துவது நடிகர்களுக்கு வழக்கம். தான் சிரிப்பதிலே, ரசிகர்களை குலுங்கிசிரிக்க வைத்தவர் இவர்தான்.இவருடைய சிரிப்பு தனி முத்திரையானது. அந்த சிரிப்புக்காக இவருக்கு ஓரிடத்தை ஒரு ஓரத்திலாவது தமிழ் திரையுலக வரலாறு வைத்திருந்தே தீரும்.அடுத்து குமரிமுத்துவின் மாறுகண்களும் பல படங்களில் அவருடைய காமெடியில் சிறந்துள்ளது.கொள்கை பிடிப்பாளர் சினிமாவில் அவரை ஒரு சாதாரண காமெடி நடிகராக பார்த்தவர்களுக்கு நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு திராவிட கொள்கை பிடிப்புள்ள தொண்டர் என்பது வியப்பையே தரும்.
பிரபல அரசியல் பிரசாரமேடைகளில் தீவிரமாக பேசக்கூடியவர். கட்சிகளிலும் ஆட்சிகளிலும் உள்ள உறுதியின்மை, சந்தர்ப்பவாதம் பற்றி பலவாறு விமர்சனங்கள் எழுந்தாலும், அதற்குள்ளும் குமரிமுத்து போன்றவர்களின் கொள்கை உறுதி மரியாதைக்குரியதே!நடிகர் சங்கத்திலும் பதவி வகித்தார்.
அதன் பிரச்சினைகளிலும் துணிவோடு குரல் கொடுத்தார். இவரின் மறைவுக்கு நடிகர்சங்கத்தினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தேடிவந்த விருதுகள்:திரைப்படங்களில் இவருடைய நடிப்பையும் கலை சேவையையும் பாராட்டி ‘கலைமாமணி’, ’கலைச்செல்வம்’ போன்ற விருதுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
பெரியாரின் கட்சியும் பகுத்தறிவு பாசறையுமான திராவிடர் கழகம் இவருக்கு ’பெரியார் விருது’ வழங்கியிருக்கிறது.குமரிமுத்துவின் குடும்பம்:குமரிமுத்துவின் மனைவி பெயர் புண்ணியவதி, இந்த தம்பதிகளுக்கு செல்வபுஷ்பா, எலிசபெத் மேரி, கவிதா ஆகிய மூன்று மகள்களும் ஐசக் மாதவராஜன் என்ற மகனும் உள்ளனர். குமரிமுத்து கிறிஸ்தவ மத சேவைகளும் செய்து வந்தார்.மிகச் சாதாரணமான தோற்றத்தை வைத்துக்கொண்டு, திரையுலகில் இவ்வளவு காலம் குமரிமுத்து பயணித்ததே மதி வென்ற செயல்தான்.
தமிழ் திரையுலகின் சிறந்த காமெடி நடிகர் குமரிமுத்து இன்று காலமானார்.28-02-2016
Reviewed by Author
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment