தமிழ்க் கைதிகள்: தொடரும் உண்ணாவிரதம், '8-ம் திகதி விவாதம்'-சம்பந்தன்
இலங்கையில் சிறைச்சாலைகளில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ்க் கைதிகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டுவருவதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்காக குரல்கொடுத்துவரும் அமைப்பினர் கூறுகின்றனர்.
கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் கடந்த மாதம் 22-ம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
அவர்களில் சிலர் நேற்று புதன்கிழமை சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பைச் சேர்ந்த அருட்தந்தை சத்திவேல் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
இந்தக் கைதிகளின் பிரச்சனையில் அரசாங்கம் பாராமுகமாக இருந்துவருவதாகவும் கூறிய அருட்தந்தை சத்திவேல், இவர்கள் தொடர்பிலான தங்களின் நிலைப்பாட்டை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
நீண்டகாலமாக சிறைவாழ்க்கையை அனுபவித்துவிட்ட தமிழ்க் கைதிகள் மீது வழக்குத் தொடரவுள்ளதாக கூறும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்தே கைதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தங்களுக்கு விடுதலையே தேவை என்றும் வழக்குத் தொடர்வது தண்டனைக்கே வழிவகுக்கும் என்றும் கைதிகள் கருதுவதாக அருட்தந்தை சத்திவேல் தெரிவித்தார்.
'வேறு தலையீடுகளால்' தாமதம்- சம்பந்தன்
இதனிடையே, கைதிகள் விவகாரத்தில் வரும் 8-ம் திகதி, செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதம் நடக்கவுள்ளதாகவும் அதன் மூலம் கைதிகளின் பிரச்சனைக்கு உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழோசையிடம் கூறினார்.
இந்தக் கைதிகள் விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக பிரதமர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சட்டமா அதிபர் அலுவலகத்தினர் உள்ளிட்ட தரப்பினர் அடங்கலாக அரசியல் குழு ஒன்றை நியமிப்பதற்கு ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் 'வேறு தலையீடுகள் காரணமாக' அந்த முடிவு நிறைவேற்றப்படவில்லை என்றும் சம்பந்தன் தெரிவித்தார்.
'அந்த முடிவு நிறைவேற்றப்பட்டிருந்தால், அந்தக் கருமம் எப்போதோ முடிந்திருக்க வேண்டும்' என்றார் சம்பந்தன்.
எதிர்வரும் 8-ம் திகதி நாடாளுமன்ற விவாதத்தின்போது, காணாமல்போனோர் விவகாரம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தமிழ்க் கைதிகள்: தொடரும் உண்ணாவிரதம், '8-ம் திகதி விவாதம்'-சம்பந்தன்
Reviewed by Admin
on
March 05, 2016
Rating:

No comments:
Post a Comment