இணைந்த நேர அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிப்பு...-Photos
நேற்றைய தினம் 29-02-2016 திங்கள் மாலை 3 மணியளவில் மேதகு ஜனாதிபதி அவர்களது தலைமையில், 9 மாகாணங்களினதும் போக்குவரத்து அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர், இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைவர் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட விசேட கூட்டம் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
மேற்படிக் கலந்துரையாடலில் இலங்கையில் நிலவுகின்ற போக்குவரத்து சீர்கேடுகள் தொடர்பாகவும், இணைந்த நேர அட்டவணையில் காணப்படுகின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும், போக்குவரத்துத் துறையில் காணப்படுகின்ற ஊழல் மோசடிகள் தொடர்பாகவும், பேரூந்து நிலையங்களில் கப்பம் பெறுவது தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்பட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.
குறித்த சந்தர்ப்பத்தில் மேதகு ஜனாதிபதி அவர்கள் மாகாண அமைச்சர்களிடம் மேற்படிக் குறைபாடுகளை உடனடியாகச் சீர்செயுமாறும், பொதுமக்களுக்கு தரமான போக்குவரத்து சேவையினை வழங்குவதற்கு மத்திய மாகாண அரசுகள் இணைந்து செயற்ப்படவேண்டும் என்றும் பணிப்புரை வழங்கியிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இச் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பின்வரும் கருத்துக்களை மேதகு ஜனாதிபதியின் கவனத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் போக்குவரத்துத் துறையில் எவ்வித ஊழல் மோசடிகளும் இடம்பெறவில்லை என்றும், அவ்வாறான விடயங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்பதையும் திட்டவட்டமாக கூறியிருக்கின்றார்.
அத்தோடு தனது வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் போக்குவரத்து சேவையினை வழங்குகின்ற தனியார் துறையினரும், இலங்கைப் போக்குவரத்து சபையினரும் வீதி ஒழுங்குகள் மற்றும் நேர அட்டவணையினைப் பின்பற்றாமையினாலும், கண்மூடித் தனமான போட்டித்தன்மைகளாலும் பல உயிர்களை இழந்து நிற்பதாகவும், அண்மையில் கூட இவ்வாறான இவர்களது அசமந்தப்போக்கால் யாழ் மாவட்டத்தில் சுவஸ்திகன் என்ற 5 வயது மாணவனை இழந்து நிற்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
அத்தோடு இவ்வாறு பொதுமக்களின் உயிர்களைப் பலியெடுத்து விதிகளை மீறுகின்றவர்களை கட்டுப்படுத்தவேண்டுமெனில் சட்டங்களை கடுமையாக அமுல்படுத்துவதோடு, அதில் இருக்கின்ற உச்ச பட்ச தண்டனைகளை வழங்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு தெரிவிக்கையில், பலத்த சிரமங்களுக்கு மத்தியில் ஏறத்தாள 35 க்கு மேற்ப்பட்ட விசேட கூட்டங்களுக்கு மேலாக நடாத்தி வடக்கு மாகாணத்தில் உருவாக்கியிருக்கின்ற இணைந்த நேர அட்டவணையின் பிரதியினையும், வட மாகாண போக்குவரத்து நியதிச் சட்டத்தினையும் மேதகு ஜனாதிபதியிடம் நேரடியாகக் கையளித்து பின்வரும் விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
குறிப்பாக கடின உளைப்பிநூடாக உருவாக்கப்பட்டுள்ள இணைந்த நேர அட்டவணையினை, வட மாகாண தனியார் துறையினரும், அரச அதிபர்களும் கையொப்பமிட்டுள்ள அதேவேளை இலங்கைப் போக்குவரத்து சபையின் வட பிராந்தியத்துக்குப் பொறுப்பாக இருக்கின்ற அதிகாரிகள் கையொப்பமிடாது இழுத்தடிப்பு செய்துவருவதனைச் சுட்டிக்காட்டியபோது, மேதகு ஜனாதிபதி அவர்கள் இலங்கைப் போக்குவரத்து சபையின் தலைவருக்கு குறித்த விடயம் தொடர்பாக கவனம் செலுத்தி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கியிருப்பதாகவும், அவ்விடயத்துக்கு தலைவர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
மேலும் அமைச்சர் கருத்துத் தெரிவிக்கையில் கடந்த மாதம் 25 ஆம் திகதி மாகாண சபையில் வடக்கு மாகாண போக்குவரத்து நியதிச் சட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இச் சட்டம் அங்கீகரிக்கப்படுகின்றபொழுது வட மாகாணத்திற்குள் நிலவுகின்ற போக்குவரத்துச் சீர்கேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும் என்று மேதகு ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியதோடு, இவ்விடயம் தொடர்பில் வட மாகாண ஆளுநருக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு பொருத்தமான அறிவுறுத்தல்களை வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் ஜனாதிபதி அவர்கள் வடக்குக் கிழக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர்கள் உட்பட 5 மாகாண அமைச்சர்கள் உள்ளடங்கலாக விசேட குழு ஒன்றை நியமித்து, இலங்கையில் உள்ள போக்குவரத்து சீர்கேடுகள் தொடர்பாக இரண்டு மாதத்திற்கு ஒருதடவை ஒன்றுகூடி பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் அவர்கள் குறித்த மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சர் என்ற வகையில், குறித்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
இணைந்த நேர அட்டவணை ஜனாதிபதியிடம் கையளிப்பு...-Photos
Reviewed by NEWMANNAR
on
March 01, 2016
Rating:

No comments:
Post a Comment