அண்மைய செய்திகள்

recent
-

வித்தியா படுகொலை! நேரில் கண்ட சாட்சியங்களால் பரபரப்பு, விரைவில் மேல் நீதிமன்றத்தில்....


புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் இன்று தெரிவித்துள்ளனர்.
மேலும், மிக விரைவில் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் எனவும் குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் கூறியுள்ளனர்.

வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதனடிப்படையில், மன்றில் தோன்றிய குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.

இன்னமும் மரபனு பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.

மேலும், வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர் உள்ளார் எனவும் அவருடைய சாட்சியமும் மன்றில் பதிவு செய்யப்படும்.

 இதன்போது மன்றில் சற்று சலசலப்பு ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 விரைவில் மேல் நீதிமன்றத்திற்கு செல்கிறது வித்தியாவின் கொலை வழக்கு

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு தொடர்பிலான குற்றப்பத்திரிகை இன்னும் சில மாதங்களில் மேல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.எம் ரியால் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடம் மே மாதம் கூட்டு வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் மரணம் தொடர்பில் இதுவரையில் பத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணைகள் இன்றைய தினம்  ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி எம்.எம் ரியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தேக நபர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகள், சந்தேக நபர்களை பிணையில் செல்வதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்திடம் கோரினர்.

குறித்த பிணை மனு கோரிக்கையினை நிராகரித்த நீதிபதி, குறித்த வழக்கு இன்னும் சில மாதங்களில் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்படவுள்ளதாகவும், எனவே மேல் நீதிமன்றத்தில் பிணையினை பெற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இன்றைய தினம் குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10 சந்தேக நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்ததுடன், குற்றப்புலனாய்வு பிரிவினரால் டி.என்.ஏ அறிக்கை உள்ளிட்ட 12 அறிக்கைகள் இன்றைய தினமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை.

சந்தேக நபர்களின் டி.என்.ஏ அறிக்கை இதுவரையில் ஜின்டெக் நிறுவனத்தினால் கையளிக்கப்படாமை காரணமாகவே அதனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாமல் போனதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இந்தநிலையில் குறித்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேவேளை, வித்தியாவின் உடலில் கண்டெடுக்கப்பட்ட மாதிரியில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களின் மரபணுக்கள் காணப்படுவதால், அதனை பிரித்து அறிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஜின்டெக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வித்தியாவின் கொலைக்கு ஆரம்பத்தில் போதைப்பொருளை காரணம் காட்டியிருந்தாலும், தொடர்ந்து வித்தியா சம்பந்தப்பட்ட பொருட்கள் வெவ்வேறு இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டமை மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் பலகோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், வித்தியா கொலை தொடர்பில் கண்கண்ட சாட்சியம் உள்ளதாக அரசாங்க தரப்பு சட்டத்தரணி தெரிவித்தமைக்கமைய, குறித்த நபரிடமும் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வித்தியா கொலையின் பிரதான சந்தேக நபர்களாக துசாந்த் மற்றும் சுவிஸ் குமார் ஆகியோர் காணப்பவதாக குற்றப்புலனாய்வாளர்கள் கடந்த வழக்கு விசாரணைகளின் போது நீதிமன்றத்தில் வைத்து தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.




வித்தியா படுகொலை! நேரில் கண்ட சாட்சியங்களால் பரபரப்பு, விரைவில் மேல் நீதிமன்றத்தில்.... Reviewed by Author on March 18, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.