அண்மைய செய்திகள்

recent
-

பேசாலைக்கு அண்மையிலுள்ள தொழிற்சாலையை அகற்றுமாறு வடமாகாண முதல்வரிடம் கோரிக்கை

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில்(ஏ-14) பேசாலைக்கு அண்மையில் உள்ள துள்ளுக்குடியிறுப்பு கிராமத்திற்கு சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
COOL MAN ICE என்ற பெயரில் சில வருடங்களாக இயங்கி வருகின்ற ஐஸ் மற்றும் கோழித்தீன் தயாரிக்கும் தொழிற்சாலையினால் அப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

குறித்த தொழிற்சாலையினை அவ்விடத்தில் இருந்து அகற்றி தீர்வை பெற்றுத்தருமாறு, கோரி கீளியன் குடியிறுப்பு பங்குத்தந்தை டெரன்ஸ் அடிகளார் தலைமையில் பங்கு மேய்ப்புச் சபை பிரதிநிதிகள் இன்று வியாழக்கிழமை காலை வடமாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனிடம் மகஜர் கையளித்துள்ளனர்.

யாழ் வடமாகாண சபையில் வைத்து குறித்த மகஜர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.

இதன் போது வடமாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் ஆகியேரும் கலந்து கொண்டிருந்தனர்.

வடமாகாண முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்ட குறித்த மகஜரில் மேலும் குறிப்பிடுகையில்,

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதியில் (ஏ-14) பேசாலைக்கு அண்மையில் உள்ள துள்ளுக்குடியிருப்பு கிராமத்திற்கு சற்று தொலைவில் அமைக்கப்பட்டுள்ள ( COOL MAN ICE ) என்ற பெயரில் கடந்த சில வருடங்களாக இயங்கி வருகின்ற தொழிற்சாலையினால் அப்பகுதியில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த பிரதான வீதியினால் பயணிக்கின்ற சகலரும், சில நிமிடங்களுக்கு துர்நாற்றம் காரணமாக மூச்சுத்திணறல், வாந்தி போன்ற உபாதைகளுக்கு உள்ளாகின்றனர்.

பாடசாலை செல்லுகின்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஏனைய தொழில்களுக்குச் செல்வோர்களும் குறித்த பகுதியை கடப்பது என்பது பெரும் அச்சுறுத்தலாகவே மாறியுள்ளது.

மூக்கை பொத்திய படி நடப்பது என்பது மிகுந்த சிரமத்தை தருகின்றது. நோயாளிகள், கர்ப்பிணிகள் போன்றோர் மேலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

தினந்தோறும் ஒவ்வொரு உணவு வேளையிலும் துர்நாற்றம் காரணமாக வாந்தி எடுப்போர் தொகை அதிகரித்து வருகின்றது.

குறித்த கோழித்தீன் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து வெளி வருகின்ற துர்நாற்றத்தை மக்கள் சுவாசிக்கும் போது வாந்தி, தலையிடி, சுவாசப் பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர்.

மேலும் கழிவு மீன்களைக் கொண்டு கோழித்தீன் மற்றும் உரம் தயாரிக்கின்ற போது எண்ணை போன்ற திரவம் கழிவாக வெளியேறி வாய்க்கால் அமைத்து ஓடவிடச் செய்யப்படுகின்றது. குறித்த எண்ணெய்ப் படிமம் நிலத்தினுள் சென்ற நிலத்தடி நீரை மாசுபடுத்துகின்றது.

குறித்த நிலை தொடருமாக இருந்தால் நோயாளிகளின் தொகை அதிகரிப்பதோடு, எதிர் காலத்தில் பிறக்கின்ற குழந்தைகளும் பாதிக்கப்படும்.

மொத்தத்தில் ஒரு ஆரோக்கியமற்ற சமூக அங்கத்தவர்கள் உருவாகக் கூடிய ஆபத்து ஏற்படும்.

மேலும் குறித்த தொழிற்சாலையினை சுற்றியுள்ள 5 கிராம மக்களும் தங்கள் பூர்வீக நிலத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்படும்.

இறுதியில் குறித்த தொழிற்சாலை பெரும் இலாபத்தோடு இயங்கும் ஆனால் மக்கள் அங்கு இருக்க மாட்டார்கள்.

எனவே கடந்த யுத்தம் காரணமாக அடிக்கடி இடப்பெயர்விற்கு உள்ளான மக்கள் இப்போது தான் தங்கள் சொந்தக் கிராமங்களில், சொந்த நிலங்களில் நிலையான வாழ்வை தொடரத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் இத் தொழிற்சாலையின் பொறுப்பற்ற செயற்பாடானது மேலும் ஒரு வாழ்வியல் எதிர் ஆக்கிரமிப்பாகவே அமைந்துள்ளது.

குறித்த பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகள், மன்னார் மாவட்ட சுற்றுச் சூழல் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் ஆகியோரின் கவனத்திற்கு பல தடவைகள் கொண்டு சென்றும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை.

எனவே குறித்த தொழிற்சாலையை அவ்விடத்தில் இருந்து அகற்றி மக்கள் ஆரோக்கியமாக வாழ தகுந்ததொரு தீர்வை பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம் என குறித்த மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.




பேசாலைக்கு அண்மையிலுள்ள தொழிற்சாலையை அகற்றுமாறு வடமாகாண முதல்வரிடம் கோரிக்கை Reviewed by Admin on March 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.