போர்க்குற்ற விவகார நிபுணர் இலங்கைக்கு வந்தது ஏன்?
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் தூதுவராக இருந்த ஸ்டீபன் ராப், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு மேற்கொண்ட பயணத்துக்குப் பின்னர், அதே பணியகத்தின் தற்போதைய சிறப்பு இணைப்பாளராக உள்ள ரொட் புச்வால்ட் இந்தமாத முதல் வாரத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
ஏப்ரல் முதலாம் திகதி- உலகம் முழுவதும் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்ட போது தான், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் சிறப்பு இணைப்பாளர் ரொட் புச்வால்ட் இலங்கை வந்திருந்தார்.
அவரது இந்தப் பயணம் தொடர்பாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ, கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகமோ அல்லது இலங்கை அரசாங்கமோ எந்த முன்னறிவிப்பையும் வெளியிட்டிருக்கவில்லை.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் அடுத்தடுத்து, கொழும்புக்கு வந்து சென்று கொண்டிருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல.
அதனால், இதுபற்றி முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று காரணம் கூற முடியாது. ரொட் புச்வால்ட்டுடன், தெற்கு மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதி உதவி இராஜாங்கச் செயலரும் கொழும்பு வந்திருந்தார்.
இவர், நிஸா பிஸ்வாலுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்.இவர் தனியே கொழும்பு வருவது ஒன்றும் அவ்வளவு முக்கியத்துவமான விடயமாக கருதப்படாது,
ஏனென்றால், இவரது அதிகாரத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வது வழக்கமே.
ஆனால், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் விசேட இணைப்பாளரான ரொட் புச்வால்ட்டின் பயணத்தை அவ்வாறு முக்கியத்துவமற்ற பயணம் என்று கூற முடியாது.
பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின், தலைமைப் பொறுப்பிலுள்ள ஒருவர், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் முறையாக இலங்கை வந்திருக்கிறார்.
ஆட்சிமாற்றத்துக்குப் பின்னர், இப்போது தான் அவரது முதல் பயணம் இடம்பெற்றிருக்கிறது.முன்னதாக, பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம், தூதுவர் நிலையில் உள்ள ஒருவரின் தலைமையிலேயே செயற்பட்டது.
இறுதியாக அந்தப் பதவியில் இருந்தவர், ஸ்டீபன் ராப்.அவர் மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது, 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இலங்கையில் பயணம் மேற்கொண்டிருந்தார்.
அப்போது அவர், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட இறுதிப் போர் நடந்த பகுதிகளுக்கும் சென்றிருந்தார். இறுதிப்போரின் சாட்சிகளாக இருந்தவர்களையும் சந்தித்திருந்தார்.
அந்தப் பயணத்தின் போது அவர் வெளியிட்ட கருத்துக்களும், எடுத்துக் கொண்ட படங்களும், மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கத்துக்கு கடும் விசனத்தை ஏற்படுத்தியிருந்தது.
அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும், மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்புக் கூறும் விவகாரத்தில் கடுமையான முரண்பாடுகள் காணப்பட்டன.
அதற்குப் பின்னர், கடந்த ஆண்டு ஸ்டீபன் ராப், ஒபாமா அரசின் நிலைப்பாடுகளுடன் முரண்பட்டுக் கொண்டு பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் தூதுவர் பதவியில் இருந்து விலகிக் கொண்டார்.
அதையடுத்து, பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம், விசேட இணைப்பாளரின் தலைமையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அந்தப் பதவிக்கு ரொட் புச்வால்ட் நியமிக்கப்பட்டார்.
இந்த நியமனம் பெற்று கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்து அவர் இலங்கை வந்திருக்கிறார். அவரது பயணத்தின் நோக்கம் என்னவென்பதை பார்ப்பதற்கு முன்னதாக, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் அவரது பங்கு என்ன?
பூகோள குற்றவியல் நீதிப் பணியகத்தின் முக்கியத்துவம் என்ன? என்று அறிந்து கொள்வது அவசியம்.அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், சுயாதீனமாகச் செயற்படும் பல்வேறு உப பிரிவுகளைக் கொண்ட ஒன்று.
அவ்வாறான ஒரு உப பிரிவு தான் பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம்.போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலைகள் குறித்த விவகாரங்கள் குறித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு, ஜனநாயகம், மனித உரிமைகள் விவகாரங்களுக்கான அடிநிலைச் செயலர் ஆகியோருக்கு ஆலோசனை வழங்குவதே, இந்தப் பணியகத்தின் பிரதான கடமை.
அதாவது, பாரிய கொடூரங்களுக்குப் பொறுப்புக்கூறுவதை அடிப்படையாகக் கொண்ட, அமெரிக்காவின் கொள்கைகளை வகுப்பதற்கு இந்தப் பணியகம் தான் காரணியாக இருக்கிறது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, பொறுப்புக்கூறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதும் இந்தப் பணியகம் தான்.
இதனைச் சார்ந்து இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளை வகுப்பதற்கு, முக்கிய காரணியாக இருந்ததும் இந்தப் பணியகம் தான்.
இந்தப் பணியகத்தின் விசேட இணைப்பாளர் ரொட் புச்வால்ட் எதற்காக இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார்? என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது.
ஏனென்றால், இலங்கையில் இடம்பெற்ற மீறல்களுக்குப் பொறுப்புக்கூறும் விவகாரத்தில் அமெரிக்கா இப்போது அதிக ஆர்வத்தைக் காட்டாத சூழலில், இலங்கையுடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்வதற்கே முன்னுரிமை கொடுத்துச் செயற்படும் சூழலில், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகம் எத்தகைய பங்கை வகிக்க முனைகிறது? என்ற கேள்வி எழுகிறது.
ஜெனீவாவில் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்குப் பின்னர், பொறுப்புக்கூறும் பொறிமுறையை உருவாக்கும் பொறுப்புகள் அனைத்தையும், இலங்கை அரசாங்கத்திடமே ஒப்படைத்து விட்டு அமெரிக்கா விலகி நிற்கும் சூழலில், திடீரென- முன்னறிவிப்பின்றி ரொட் புஜ்வால்ட் கொழும்பு வந்தமை வியப்பை ஏற்படுத்தாமல் இல்லை.
இந்தப் பயணத்தின் போது ரொட் புச்வால்ட், சந்தித்தவர்களில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ ஆகியோர் அரச தரப்பில் முக்கியமானவர்கள்.தமிழர் தரப்பில், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், சுமந்திரனையும். தனியாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தனியாக அவரது வீட்டிலும் சந்தித்துப் பேசியிருந்தார்.
ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி உனா மக் கோலியையும், சிவில் சமூகப் பிரதிநிதிகளையும் அவர் சந்தித்திருந்தார்.
கண்டியில் தலதா மாளிகையில் வழிபாடு, கண்டியிலுள்ள அமெரிக்கன் கோணரில் இளைஞர்களுடன் சந்திப்பு, திருகோணமலையிலும், யாழ்ப்பாணத்திலும் இளைஞர்கள், மாணவர்கள், பொது அமைப்பினர்களுடன் கலந்துரையாடல் என்று நடத்தியிருந்தார்
ரொட் புச்வால்ட்.தற்போது முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பான அரச தரப்பினரும், தமிழ் அரசியல் தரப்பினதும், பொதுமக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஒரு முயற்சியாக மட்டும் இதனைக் கருத முடியவில்லை.
அதற்கும் அப்பால், நல்லிணக்க முயற்சிகளின் முன்னேற்றங்களையும், குறைபாடுகளையும் கண்டறிய முனைந்திருக்கிறார் ரொட் புச்வால்ட். இதன் மூலம் அவர் எதனைச் சாதிக்கப் போகிறார்? என்பது வேறு விடயம்.
ஏனென்றால், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம், இலங்கை அரசாங்கத்துடன் மிக நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியிருக்கிறது, பாதுகாப்புத் திணைக்களமும், விட்டுப்போன உறவுகளை மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறது,
இலங்கைப் படையினருக்குப் பயிற்சிகளை அளிக்கும் அளவுக்கு அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.இப்படியான நிலையில், பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் இப்போதைய கண்டறிவுகள் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற பரவலான சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன.
புச்வால்ட் தனது இலங்கைப் பயணத்தில், நல்லிணக்கம் சார்ந்த முன்னேற்றங்கள், சவால்கள், பிரச்சினைகள் பற்றியே அனைத்துத் தரப்பிடமும் கேட்டறிந்திருக்கிறாரே தவிர, பொறுப்புக்கூறல் சார்ந்த விடயங்கள் பற்றிப் பேசியதாகத் தகவல்கள் இல்லை.
கிட்டத்தட்ட ஒரு வாரம் கழித்து அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் கூட, பொறுப்புக்கூறல் சார்ந்த எந்த அழுத்தமான கருத்துக்களும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.
பூகோள குற்றவியல் நீதிக்கான பணியகத்தின் பொறுப்பு, பாரிய கொடூரங்களுக்குப் பொறுப்புக்கூறுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தான்.அந்தவகையில் இலங்கையில் நடந்த கொடூரங்களுக்குப் பொறுப்புக்கூறும் விடயத்தில் அமெரிக்கா பராமுகம் காட்டுவதையே ரொட் புச்வால்ட்டின் பயணமும் எடுத்துக் காட்டுகிறது.
அதேவேளை, அடுத்து வரும் ஆண்டுகளில் இலங்கை தொடர்பான கொள்கைகள், இலங்கைக்கான உதவிகளைத் தீர்மானிப்பதில் ரொட் புச்வால்ட்டின் பயணம், முக்கியத்துவம் வகிக்கும் என்று அமெரிக்கத் தூதுவரின் கருத்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியது.
அடுத்து வரும் காலத்தில் இலங்கை தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளைத் தீர்மானிப்பதில் புச்வால்ட் முக்கிய பங்காற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனாலும், அந்தக் கொள்கை, பொறுப்புக்கூறல் விவகாரத்தைச் சார்ந்து கடுமையான நிலைப்பாடுகளைக் கொண்டதாக இருக்குமா என்பது சந்தேகம் தான்.
ஏனென்றால், பொறுப்புக்கூறல் சார்ந்ததாக, அமெரிக்க கொள்கைகளை வகுப்பதற்கான காலம் கடந்திருக்கிறது.
அமெரிக்காவின் நலன்களை சார்ந்து முடிவுகளை எடுக்கும் காலம் உருவாகியிருப்பதால், தமிழர் தரப்பினால் இந்த விடயத்தில் மிகையான நம்பிக்கைகளை கொள்ள முடியாது.
போர்க்குற்ற விவகார நிபுணர் இலங்கைக்கு வந்தது ஏன்?
Reviewed by Author
on
April 10, 2016
Rating:

No comments:
Post a Comment