போர்க்குற்றங்களில் பெண்களின் பாதிப்பை சாதாரண விடயமாக பார்ப்பது தவறு! சுவீடன் வெளிவிவகார அமைச்சர்
போர்க்குற்றம் போன்ற பாரிய விடயங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதை சாதாரண விடயமாக கருதுவது தவறானதென சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கொட் வோல்ஸ்ரொம் தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை மாலை லக்ஸ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகள் நிலையத்தில் "வெளியுறவுக் கொள்கையில் பெண்ணியத்தின் பங்கு" எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவொன்றை ஆற்றியிருந்தார். இதன்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இச்சொற்பொழிவு நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா, பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, வெளிநாட்டு தூதுவர்கள், அதிகாரிகள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
90 களில் இலங்கையில் சிறிது காலம் பணியாற்றியிருந்தேன். அதன் பின்னர் மீண்டும் இலங்கைக்கு வருகை தருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தமையையிட்டும் உங்கள் முன்னிலையில் உரையாற்றக் கிடைத்தமையையிட்டும் மகிழ்ச்சியடைகின்றேன்.
உலகத்தின் பல பாகங்களிலும் பாரிய மோதல்கள் நடைபெறுகின்றன. கடந்த வருடத்தில் மட்டும் உலகத்தில் 40 பாரிய மோதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
மோதல்கள், பயங்கரவாதம், அடிப்படைவாதம் போன்றவற்றால் பல்வேறு இழப்புக்கள் ஏற்படுகின்றன. கல்வியின்மை, வறுமை என்பன ஏற்படுகின்றன. இது மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வலுவாக அதிகரிக்கின்றது.
இயற்கை அனர்த்தம், விவாகரத்து ஆகியவற்றின் காரணமாக 125 மில்லியன் மக்களின் உயிர்ப்பாதுகாப்புக்காக 25 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடமொன்றுக்கு செலவிடப்படுகின்றது.
நீண்டகால ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்த நாடென்ற வகையில் பல்வேறு துர்ப்பாக்கியமான வேறுபட்ட வன்முறை அனுபவங்கள் உங்களுக்கு காணப்படலாம். வன்முறைகளற்ற நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சமூகத்தின் உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும்.
அதேநேரம் நிலையான சமாதானத்தை முறையான வகையில் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான முக்கியமான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் இடைவிடாது முன்னெடுக்கவேண்டுமென நாம் எதிர்பார்க்கின்றோம்.
வெற்றிகரமான நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமாயின் பால்நிலை சமத்துவம் முக்கியமாக கருத்திற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகின்றது.
மோதல்கள், வன்முறைச் சம்பவங்களின் போது பெண்களின் மனித உரிமைகள் ஆண்களை விடவும் அதிகமாக மறுக்கப்படுகின்றன.
சமாதானத்தை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாட்டில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பான வெகுவாக கவனம் செலுத்தப்படுவதோ முறையாக வெளிப்படுத்தப்படுவதோ இல்லை.
சமாதானத்தை கட்டியெழுப்புதல் உள்ளிட்ட அனைத்து செயற்பாடுகளிலும் சம அளவில் பெண்களின் பங்குபற்றுதலை உறுதி செய்யவேண்டும். இலங்கையில் பல பெண்கள் பால்நிலை சமத்துவம் உள்ளிட்ட பல செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றில் பெண்களுக்கான பங்களிப்பு சம அளவில் வழங்கப்படவேண்டும். அரசியல், பொருளாதார, சமூக ரீதியாக பெண்களுக்கான உரிய அந்தஸ்துக்கள் வழங்கப்படவேண்டும்.
எமது நாட்டைப் பொறுத்தவரையில் பெண்ணிய வெளிநாட்டுக் கொள்கையே காணப்படுகின்றது. இதன் மூலம் சமாதானத்தை பேணுவதற்கான செயற்பாடுகள், அபிவிருத்திச் செயற்பாடுகள் போன்றவற்றில் முக்கியமானதொரு வகிபாகத்தை பெண்களால் வகிக்க முடிகின்றது.
வெளிநாட்டுக் கொள்கையில் பெண்ணியத்தை உள்வாங்குவதை தவறாக கருதக்கூடாது. அதன்மூலம் நிலையான சமாதானம், பாதுகாப்பு என்பன உட்பட பலவிடயங்களில் முன்னேற்றத்தை எட்டமுடியும்.
பால்நிலை சமத்துவம் என்பது தனியானதொரு பிரச்சினையல்ல. சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய முக்கியமானதொன்றான பிரச்சினையாகும்.
பெண்கள் வன்முறை, அடக்குமுறை, திட்டமிட்ட அடிமைத்தன நிலைமைகள் தொடர்ந்தும் காணப்படுகின்றன.வெளிநாட்டுக் கொள்கையில் பெண்ணியம் தொடர்பாக பார்க்கையில் உரிமைகள், பிரதிநிதித்துவம், யதார்த்தமான பரிசீலனை ஆகிய மூன்று விடயங்கள் முக்கியமாகின்றன.
மனித உரிமைகள், சட்டம் ஒழுங்கு, ஆகியவற்றில் பெண்களுக்கான உரிய இடம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.
பெண்களின் பிரதிநிதித்துவமானது அனைத்து விடயங்களிலும் குறிப்பாக உள்ளூராட்சி மன்றங்கள் முதல் பாராளுமன்றம், பேச்சுவார்த்தை மேசைகள், சமாதான பொறிமுறைகள் வரையில் முறையாக காணப்படவேண்டும்.
வெளிநாட்டுக் கொள்கையில் பெண்ணியத்தை உள்வாங்குவதன் ஊடாக உயர்ந்த சமூகத்தை உருவாக்குவதோடு சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்தியில் சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப முடியும்.
போர்க்குற்றம் போன்ற பாரிய விடயங்களில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அதன்போதான நிலை மைகளில் அச்சம்பவங்களைத் தவிர்க்க முடியாததொன்றாக பார்ப்பது தவறானது.
பாலியல் ரீதியாக பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைமைகளிலிருந்து உறுதியான பாதுகாப்பு அளிக்கப்படுவது அவசியமாகின்றது.
நிலையான சமாதானம், பாதுகாப்பை திறந்த மனத்துடன் கட்டியெழுப்புவதற்கு பால் நிலை சமத்துவம் பேணப்படுகின்றமை மிகவும் முக்கியமானதொன்றாகின்றது.
மூன்று தசாப்த யுத்தம் நிறைவுக்கு வந்துள்ளது. தற்போது நிலையான சமாதா னத்தை கட்டியெழுப்பவதற்கான தருணம்ஏற்பட்டுள்ளது.
ஆகவே பால்நிலை சமத்துவம், பெண்ணியம் போன்ற விடயங்களை எதிர்காலத்தில் முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
இலங்கை பெண்கள் வலுவானவர்கள். அவர்களின் பங்களிப்பு, வளர்ச்சிக்கு நாம் உறுதுணையாக இருப்போம் என்றார்.
போர்க்குற்றங்களில் பெண்களின் பாதிப்பை சாதாரண விடயமாக பார்ப்பது தவறு! சுவீடன் வெளிவிவகார அமைச்சர்
Reviewed by Author
on
April 26, 2016
Rating:

No comments:
Post a Comment