அண்மைய செய்திகள்

recent
-

முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்தால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது: சம்பந்தன்



முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இனப்பிரச்சினையை தீர்ப்பதில் ஜனாதிபதியும் பிரதமரும் உளப்பூர்வமாகச் செயற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சர்வதேசமும் ஆதரவு தெரிவித்து நம்பிக்கை வைத்துள்ளது என்றும் எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார்.

மட்டு சித்தாண்டியில் புனரமைக்கப்பட்ட கால்நடைத்தீவன உற்பத்தித் தொழிற்சாலையை திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்வு கிழக்கு மாகாண விவசாய கூட்டுறவுத்துறை அமைச்சர் கி.துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்றுள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.ஸ்ரீநேசன், ச.வியாழேந்திரன் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், எஸ்.கனகசபை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழர்களும் முஸ்லிம்களும் கடந்த காலங்களில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்து வந்துள்ளோம். அதே போன்று எமது மாவட்டத்தில் வாழும் பெரும்பான்மை மக்களும் சுதந்திரமாக சகல உரிமைகளுடனும் வாழ வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கடந்த காலத்தில் தலைவர் அஷ்ரப்புடன் கலந்துரையாடி இணக்கப்பாட்டுடன் வந்திருந்தோம் இந்த விவகாரம் சந்திரிக்கா அம்மையாரின் காலத்தில் தயாரிக்கப்பட்ட அரசியல் சீர்திருத்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

ஆகையால் சகோதர இனங்களுக்கிடையிலான பிரச்சினைகளை சமத்துவம், சரித்திரப் பின்னணியை அடிப்படையாகக் கொண்டு தீர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை சாதகமாகப் பயன்படுத்தி அனைவரும் சமத்துவமாக வாழ வேண்டும் என்ற கோட்பாட்டுடன் பெறக்கூடியவற்றை முழுமையாக பெற உறுதி கொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


முஸ்லிம் மக்களுக்கு அநீதி செய்தால் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாது: சம்பந்தன் Reviewed by Author on April 11, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.