சகோதரியோடு சேட்டை புரிகின்ற நபரது மூக்கை உடைக்க முடியும் (நீதிபதி இளஞ்செழியன் பேச்சு)
சகோதரியோடு சேஷ்டை விட்டால் அவரது மூக்கை உடைக்க முடியும், அவ்வாறு உடைத்தவர் நீதிமன்றினால் எவ்வித தண்டனைக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள் என யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். சமூக சேவையில் நீண்ட காலம் ஈடுபட்ட யாழ் மாவட்ட தேசோதய சபை உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று காலை 9.30 மணியளவில் (திங்கட்கிழமை) யாழ் சர்வோதய மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்.மாவட்டத்தில் சட்ட ஒழுங்கிற்கு கட்டுபட்டு நடக்கும் சமுதாயம் உருவாக வேண்டும். அந்த கட்டமைப்பை உருவாக்குவதற்கு தான் இங்குள்ள நீதிக்கட்டமைப்பு, மற்றும் காவற்துறை கட்டமைப்பு இயங்கி வருகின்றது. குற்றம் செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை வழங்குவதன் மூலமே தவறான வழியில் சென்று கொண்டிருக்கும் சமூகம் ஒன்றினை திருத்த முடியும்.
ஒரு சமூகத்தில் மாணவர்கள் தடம் புரண்டு போக கூடாது. அவ்வாறு மாணவர்கள் தடம்புரண்டு சென்றால், அது அந்த சமூகத்தின் அழிவாக தான் இருக்கும். மாணவர்கள் எதிர்கால சந்ததியினராக வர போவர்கள். அவர்களை தவறான வழியில் விட்டு விட்டு ஒரு சமூகம் முன்னேற்றம் அடைய இயலாது.
யாழ்.மாவட்டத்தின் கல்வி நிலை 1970 ஆம் ஆண்டளவில் உச்சத்தில் காணப்பட்டது. நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் யாழ்.மாவட்ட மாணவர்கள் காணப்பட்டனர், ஆனால் இப்போது யாழ்.மாவட்டம் கல்வி நிலையில் இருபத்தியொராம் இடத்தில் உள்ளது. நாம் 1970 ஆம் ஆண்டளவில் இருந்த கல்வி நிலையை மீள பெற வேண்டும்.
இதற்காக நாம் அனைவரும் ஒன்று திரண்டு செயற்பட வேண்டும். ஆசிரியர்கள் அதிபர்கள், சமூகத்தில் உள்ள சேவையாளர்கள் ஒன்று திரள வேண்டும். யாழ்.மாவட்டத்தின் இந்த கல்வி நிலையை ஒருவருடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். மாணவர் சமுதாயத்திற்கு நாம் அனைவரும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
கடந்த இருவாரங்களாக யாழில் அமைதி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அமைதி நிலை தொடர்வதற்கு நாம் தொடர்ந்தும் நடவடிக்கை எடுப்போம். மேலும் தனியார் கல்வி நிலையங்களுக்கு செல்லும் மாணவிகள் தொடர்பில் பெற்றோர்கள் அவதானமாக இருங்கள். அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.
ஒருவருடைய சுதந்திரம் எனப்படுவது, உன்னுடைய விரலை எனது மூக்கு நுனி மட்டும் கொண்டுவருவதுதான், ஆனால் அந்த விரல் எனது மூக்கில் பட்டுவிட்டால் அவரது மூக்கினை தற்பாதுகாப்புக்காக உடைப்பது எனது சுதந்திரம். ஆகவே உங்களது தங்கச்சியுடன் யாரும் சேட்டை விட்டதால் அவரது மூக்கை உடைத்தேன் என நீதிமன்றில் வந்து கூறுங்கள் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்.
ஐ.நாவின் நீதி மற்றும் சித்திரவதைகளுக்கான விசேட அறிக்கையாளர்கள், அண்மையில் இங்கே வருகை தந்திருந்தனர். அவர்கள் என்னை சந்தித்து இங்கு நடைபெறும் வாள்வெட்டுக்கள் குறித்து கேட்டார்கள் என்னால் பதிலளிக்க முடியாமல் போய்விட்டது. குடா நட்டு பெண்கள் இரவு பன்னிரண்டு மணிக்கு சுதந்திரமாக நடமாடும் காலம் வரையில் எனது நடவடிக்கைகள் தொடரும் என்றார் நீதிபதி.
சகோதரியோடு சேட்டை புரிகின்ற நபரது மூக்கை உடைக்க முடியும் (நீதிபதி இளஞ்செழியன் பேச்சு)
Reviewed by Author
on
May 24, 2016
Rating:

No comments:
Post a Comment