உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு...
2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் உயிரிழந்திருந்தனர்.
இவ்வாறு உயிரிழந்த தமிழ் மக்களை நினைவுகூரும் வகையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் கடந்த வியாழக்கிழமை முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
12ம் திகதி முதல் 18ம் திகதிவரை இந்த வாரத்தை அனுஷ்டிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்திருந்தார்.
இதற்கிணங்க யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை சுடர் ஏற்றி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் ஆகியோர் இந்த நிகழ்வினை நடத்தியுள்ளனர்.
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நினைவு கூருவதற்கு அனைத்துத் தமிழ் மக்களும் எதிர்வரும் 18ம் திகதி ஒன்றிணைய வேண்டுமென்று இந்த இருவரும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
முள்ளிவாய்க்காலில் எதிர்வரும் 18ம் திகதி அஞ்சலி நிகழ்வினை நடத்துவதற்கு வடமாகாண சபை ஏற்பாடு செய்துள்ளது.
பொலிஸாரின் ஒத்துழைப்புடன் இந்த நிகழ்வை அமைதியாக முன்னெடுப்பதற்கு நாம் தீர்மானித்துள்ளோம். வடமாகாணசபை இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது என்று முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனும் அறிவித்திருக்கின்றார்.
இவ்வாறு வடக்கு, கிழக்கில் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட தமது உறவுகளை நினைவுகூருவதற்கு தமிழ் மக்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் யுத்தத்தில் உயிர் நீத்த தமிழ் மக்களை முள்ளிவாய்க்காலில் நினைவுகூர முடியும். அதற்கு அரசாங்கம் எந்தத் தடைகளையும் விதிக்கவில்லை.
ஆனால் எக்காரணம் கொண்டும் விடுதலைப்புலி பயங்கரவாதிகளை நினைவு கூர முடியாது. அதையும் மீறி நினைவு கூர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.
நல்லிணக்க விடயங்கள் மற்றும் செலவுகளை கருத்தில் கொண்டு கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றிவிழா இம்முறை கொண்டாடப்படமாட்டாது.
ஆனால் யுத்தத்தில் உயிர்நீத்த இராணுவத்தினரை நினைவுகூரும் விசேட நிகழ்வுகள் இடம்பெறும்.
எதிர்வரும் 18ம் திகதி பாராளுமன்ற மைதான வளாகத்தில் அமைந்துள்ள உயிர்நீத்த படைவீரர்களின் நினைவுத்தூபியில் அஞ்சலி நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
இறுதி யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்திருந்தனர். இவ்வாறு தமது உறவுகளை பிரிந்துள்ள மக்கள் அவர்களை நினைவுகூர வேண்டியது அவசியமேயாகும்.
advertisement
உயிரிழந்த மக்களை நினைவுகூருவது என்பது ஒவ்வொரு உறவுகளினதும் அடிப்படை உரிமையாகும். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் உயிரிழந்த பொதுமக்களைக்கூட நினைவுகூர முடியாத இக்கட்டான நிலைமை காணப்பட்டது.
உயிரிழந்த தமது உறவுகளை பகிரங்கமாக நினைவுகூர மக்கள் அஞ்சினர். படையினரும் பொலிஸாரும், கடும் கெடுபிடிகளை மேற்கொண்டிருந்தனர். பல இடங்களில் பலர் கைதுசெய்யப்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருந்தன.
இந்த விடயம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைகூட கவலை தெரிவித்திருந்தார்.
யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூருவதற்கு சகல மக்களுக்கும் உரிமை உள்ளது என்று சர்வதேச தரப்பினரும் கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றதையடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் புதிய அரசாங்கம் உருவாகியிருந்தது.
கடந்த மே மாதம் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் நிகழ்வு நடத்தப்பட்டது.
இதில் முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன், அப்போது பிரதி அமைச்சராக இருந்த திருமதி விஜயகலா மகேஸ்வரன் உட்பட வட மாகாணசபையின் அமைச்சர்கள், எம்.பி.க்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால் படையினர் மற்றும் பொலிஸாரின் தீவிர கண்காணிப்புகளுக்கு மத்தியிலேயே இந்த நிகழ்வு நடத்தப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வை நடத்தவிடாது நீதிமன்றத்தின் மூலம் தடை உத்தரவைப் பெறவும் முன்முயற்சிகள் எடுக்கப்பட்டிருந்தன.
ஆனாலும் பின்னர் ஒருவாறாக நிகழ்வு நடத்தப்பட்டது. புதிய நல்லாட்சி அரசாங்கம் பதவியேற்றுள்ள இன்றைய சூழ்நிலையில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கும் நிகழ்வுகளை நடத்துவதற்கும் உரிய அனுமதிகள் வழங்கப்படவேண்டும்.
ஆனால் கடந்த ஆட்சிக்காலத்தில் யுத்தத்தில் உயிர் நீத்த படையினரை நினைவு கூருவதற்கும் யுத்த வெற்றியை கொண்டாடுவதற்குமென வெற்றி விழாக்கள் நடத்தப்பட்டன.
2009ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் மே மாதம் 18ம் திகதி பெரும் செலவில் இந்த வெற்றிவிழாக் கொண்டாட்டங்கள் நடத்தப்பட்டன.
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் தமது உறவுகளை தொலைத்து விட்டு தமிழ் மக்கள் கண்ணீரும் கம்பலையுமாக கவலையுடன் வாழ்ந்து வரும் நிலையில் இந்த வெற்றிக் கொண்டாட்டங்கள் அந்த மக்களின் மனங்களை மேலும் புண்படுத்துவதாகவே அமைந்திருந்தது.
ஆனால் இவ்விடயம் தொடர்பில் கடந்த ஆட்சிக்காலத்தில் கவனம் செலுத்தப்படவில்லை. யுத்த வெற்றியை வைத்து அடுத்தடுத்த தேர்தல்களில் எப்படி வெற்றிபெறலாம் என்ற எண்ணப் போக்கிலேயே கடந்த அரசாங்கம் வெற்றி விழாக்களை கொண்டாடி வந்தது.
தமிழ் மக்கள் தமது உறவுகளை நினைவுகூர முடியாது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட அதேவேளை தென்பகுதியில் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.
இத்தகைய போக்கினால் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று பல தரப்பினரும் சுட்டிக்காட்டிய போதிலும் அந்தக் கருத்துக்களை அன்றைய அரசாங்கம் கருத்தில் எடுக்கவில்லை.
ஆனால் தற்போதைய நல்லாட்சி அரசாங்கமானது தற்போது வெற்றிவிழாக் கொண்டாட்டங்களை நிறுத்தியுள்ளமை பாராட்டத்தக்க செயற்பாடாகும்.
யுத்தத்தில் உயிரிழந்த படைவீரர்களை நினைவு கூரும் நிகழ்வினை மட்டும் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன் உயிரிழந்த உறவுகளை முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் நினைவு கூர முடியும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளமை சற்று ஆறுதல் அளிக்கும் விடயமாக உள்ளது.
தற்போதைய நிலையில் நாட்டில் சகல சமூகங்கள் மத்தியிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிரந்தர சமாதானத்தை காண வேண்டியது அவசியமாகும். இதற்கான முற்போக்கு நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது எடுத்துவருகின்றது.
இத்தகைய சூழலில் யுத்தத்தில் உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு பூரண சுதந்திரத்தை அரசாங்கம் வழங்கவேண்டும்.
அது யார் இறந்திருந்தாலும் அவர்களை நினைவுகூருவதற்கு உறவுகளுக்கு உரிமை உள்ளது. இந்த நினைவு கூரல் நிகழ்வுகளுக்கு தடைகளைப் போடுவதோ அல்லது இடையூறுகளை விளைவிப்பதோ தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் விடயமாகவே அமைந்துவிடும்.
நேற்று முன்தினம் வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன் மற்றும் உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஆகியோரினால் செம்மணிப் பகுதியில் சுடர் ஏற்றப்பட்ட போது பெருமளவான புலனாய்வாளர்கள் அப்பகுதியைச் சூழ நின்றதாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இத்தகைய கண்காணிப்பு நடவடிக்கைகள் தேவையற்ற முரண்பாடுகளையே உருவாக்கும். யுத்தத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.
அவர்களை நினைவு கூருவதற்கு அவர்களது உறவினர்கள் முனையும் போது அதற்கு நல்லாட்சி அரசாங்கம் ஒருபோதும் தடைகளை விதிக்கக்கூடாது. இதற்கான சுதந்திரத்தை வழங்கவேண்டும்.
இதன்மூலம் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
உயிரிழந்த உறவுகளை நினைவு கூருவதற்கு தமிழ் மக்களுக்கு உரிமை உண்டு...
Reviewed by Author
on
May 14, 2016
Rating:

No comments:
Post a Comment